Saturday, 19 April 2014

சார்லி சாப்ளின்: இறுக்கமான கோட், தொளதொள பேண்ட்

சரியாக 100 வருடங்கள் ஆகின்றன. 1914-ம் ஆண்டு அமெரிக்க இயக்குநர் ஹென்றி லேமன் இயக்கிய Kid Auto Races at Venice படம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது. சிறுவர்களுக்கான கார் பந்தயம்தான் படத்தின் களம். பந்தயத்திற்கிடையில் இறுக்கமான கோட், தொளதொள பேண்ட், டூத் பிரஷ் மீசை, தலையில் தொப்பி, ஒரு கையில் சிகரெட், இன்னொரு கையில் ஒரு கம்புடன் பார்வையாளன் ஒருவன், கேமராவுக்கு முன்னால் வந்து முகம் காண்பிப்பதில் ஆர்வமாக இருப்பான். கேமராவுக்கு முன்னால் தன்னை அழகாகக் காட்ட வேண்டும் என்ற அதீத ஆர்வம் கொண்டவனாக முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டிருப்பான்.
பந்தயக்கார்கள் ஓடும் பாதையையும் மறித்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருப்பான். அவனை விலக்கிவிடுவதே அங்குள்ள காவலர் களுக்குப் பெரும் வேலையாக இருக்கும். இந்தப் புதுமையான கோமாளியின் நடவடிக்கைகள் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தன. திரையரங்குகள் கைதட்டல்களால் அதிர்ந்தன.
சார்லி சாப்ளினுடன் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்று கலந்துவிட்ட அந்த நாடோடிப் பாத்திரம் (The Tramp) தோன்றி 100 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தப் பாத்திரத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் சாப்ளின் ஹாலிவுட்டின் விரும்பப்படும் நடிகரானார்.
மெளனப் படக் காலம், பிரசித்தி பெற்ற நடிகர்களான ஹரோல்ட் லாயிட், ரோஸ் ஆர்பாக்கல், பஸ்டர் கீட்டன் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம். மெளனப் படக் காலத்திய நடிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உடல் மொழிதான் முக்கிய அம்சம். சாப்ளின் அதில் விற்பன்னராக இருந்தார்.
சாப்ளின் காலகட்ட நடிகர்கள் பெரும்பாலானோர் கிட்டதட்ட ஒரே விதமான உடையலங்காரத்துடனே தோன்றினர். இவர்களில் பஸ்டர் கீட்டன் கிட்டதட்ட சாப்ளினை ஒத்த தோற்றம் கொண்டவராக இருந்தார். ஆனால் சாப்ளின் தேர்ந்தெடுத்த இந்த நாடோடிப் பாத்திரமே அவரைத் தனித்துவம் மிக்கவராகக் காட்டியது.
சாப்ளின் அந்தப் பாத்திரத்தைத் தத்ரூபமாக வெளிப்படுத்தினார். சாப்ளின் தன் உடையலங்காரத்தையும் முற்றிலும் முரணாக மாற்றியமைத்தார். யாராலும் கைகொள்ள முடியாத வாத்து நடையைப் பயின்றார். இந்த அம்சங்கள் நாடோடிக் கதாபாத்திரத்தை இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஒன்றாக மாற்றியது. சாப்ளினும் உலகெங் கிலும் கொண்டாடப்படும் நடிகராக வலம் வந்தார்.
இந்தச் சிறப்பு மிக்க பாத்திரம் தோன்றியது ஒரு தற்செயல் நிகழ்வில்தான். 1914-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் கீஸ்டோன் ஸ்டுடியோ படப்பிடிப்புக்காகத் தயாராகிக்கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் மாக் சென்னட் பரபரப்புடன் இருந்தார். வழக்கமான காமெடி நடிகர்கள் வரவில்லை. ஸ்டுடியோவில் பணிக்கு இருந்த சாப்ளினை அவர் பயன்படுத்த நினைத்தார். சாப்ளினுக்கு அப்போது பெரிய அனுபவம் இல்லை. ஆனால் சிறு சிறு பாத்திரங்களில் நடித்திருந்தார். மாக் சென்னட் அவரை மேக்கப் ரூமுக்கு அனுப்பினார். மேக்கப்புடன் அவர் வெளிவந்தபோது ஸ்டுடியோவே சிரித்தது. சார்லி சாப்ளின் என்னும் மகா கலைஞனை உலகிற்குக் காட்டிய அந்தப் பாத்திரம் அன்றுதான் பிறந்தது. சாப்ளின் தன் சுயசரிதையில் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்கிறார், “நான் மேக்கப் ரூமுக்குள் நுழைந்து பீரோவைத் திறந்தேன். பேகி பேண்ட் போட வேண்டும் நினைத்தேன். அதை எடுத்து அணிந்து கொண்டேன். அதற்கு முரணான ஒரு கோட் அணிய வேண்டும் என நினைத்தேன். ஒரு இறுக்கமான கோட்டை அணிந்துகொண்டேன். பிறகு பொருந்தாத பெரிய ஷூவை அணிந்துகொண்டேன்.
தலைக்கு ஒரு தொப்பி, கையில் ஒரு கம்பைப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு அவரது 24 வயதுக்கு ஏற்றாற்போல மீசை, ஸ்டுடியோக்காரர் களால் பொருத்தப்பட்டது. மெளனப் படக் காலத்தில் உணர்ச்சிகள் முக்கியமானவை. அதை மறைக்கும் பட்சத்தில் பார்வையாளர்களால் பாத்திரத்தின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் என்பதால் அது ஒரு குட்டி மீசையாக வைக்கப்பட்டது. சாப்ளின், அந்தப் பாத்திரத்தை மக்களுக்கு நெருக்கமாக அமைத்துக்கொண்டார்.
அந்தக் காலகட்டத்திய மற்ற அமெரிக்கப் படங்கள், நாடோடிக் கதாபாத்திரங்களைத் திருடர்களாக, வழிப்பறிக் கொள்ளையர்களாக, வில்லன்களாகச் சித்தரித்தன. ஆனால் சாப்ளினின் நாடோடி, ஜனத்திரளில் ஒருவனாக இருக்கும் ஒரு நாடோடிக் கோமாளியாக, அப்பாவி முகபாவம் கொண்டவனாக இருந்தார். தன் ஏழ்மையையே ஏளனம் செய்துகொள்ளும் நாடோடிக் கோமாளியைப் பார்த்ததும் சிரிப்பு, வெடித்து வருவது போல, தெருவில் நடுங்கிக்கொண்டிருக்கும் அந்த அநாதைக் கோமாளியைப் பார்த்தால் யாருக்கும் கருணை சுரக்கும்.
இந்தச் சிரிப்பு, கருணை போன்ற முரண்களைத்தான் சாப்ளின், தன் நாடோடிக் கதாபாத்திரத்திற்கான ஆடை யலங்காரத்திலும் கொணடு வந்திருக்கக் கூடும்.

No comments:

Post a Comment