பழங்காலத்தில் கடல்கன்னி என்று தவறாகக் கருதப்பட்ட அரிய உயிரினம், ராமேஸ்வரம் கடற்பகுதியில் வாழ்ந்து வருகிறது. மிகவும் சாதுவான இந்த விலங்கு, நமது அடுத்த தலைமுறை பார்ப்பதற்குள் அழிந்துவிடும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.
இந்தக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன.
என்ன பிரச்சினை?
தமிழக விசைப்படகு மீனவர்கள் டிராலர் என்ற மீன்பிடி முறையைக் கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மீன்பிடி முறையால் ஏற்பட்ட விளைவுகள் பயங்கரமானவை. மீனவர்களுக்கு வேண்டிய, வேண்டாத அனைத்தும் இதில் பிடிபடுகின்றன. இதனால் கடலுக்கடியில் இருக்கும் சூழல் மண்டலம் பாதிக்கப்படுகிறது. பவளத் திட்டுகள் சிதைக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் காடுகளை மொட்டையடிப்பது போலத்தான்.
இதன் விளைவாக மன்னார் வளைகுடா உயிர்க் கோளக் காப்பகத்தில் உள்ள 21 தீவுகளில் மண்டபம் அருகே பூமரிச்சான் தீவும், தூத்துக்குடி அருகே விலாங்கு சல்லித் தீவும் கடலில் மூழ்கிவிட்டன. பவளத் திட்டுகளுக்கு மனிதர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்தால் கடல் நீர்மட்டம் அதிகரித்து இரண்டு தீவுகள் மூழ்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரிய உயிரினம்
மன்னார் வளைகுடா பகுதியில் ஆவுளியாக்கள் எனும் அரிய உயிரினங்கள் ஒரு காலத்தில் அதிகம் வாழ்ந்து வந்தன. மிகக் குறைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய சைவ உயிரினமான இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. ஆழம் குறைந்த கடல் பரப்புகளில் அதிகம் வாழும் இது, மன்னார் வளைகுடா, இலங்கைக்கு இடையிலான மணற்திட்டுப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் இருந்தது. ஆனால், தற்போது குறைந்துகொண்டே வருகிறது.
சராசரியாக 400 கிலோ எடை, 3 மீட்டர் நீளத்துடன் ஆவுளியா வளரும். பிறந்த ஒரு வாரமே ஆன ஆவுளியாவின் குட்டி சராசரியாக 3 அடி நீளம் இருக்கும். பயந்த சுபாவம் கொண்ட சாதுவான பிராணியான ஆவுளியாவின் உணவு கடல் தாவரங்கள். மீனவர்களின் படகைக் கண்டால் சுற்றிச் சுற்றி வரும்.
ஆவுளியா வேட்டையாடப்பட்டு அதன் தோலில் இருந்து விலை உயர்ந்த ஆடைகள் செய்யப்படுகின்றன. ஆவுளியாவின் பற்களைப் பொடி செய்து நஞ்சுமுறிவு மருந்தும், இதன் கொழுப்பைக்கொண்டு தைலங்களும் தயாரிக்கப்படுகின்றன. இதையெல்லாம்விட ஆவுளியாவின் இறைச்சி சுவைமிக்கதாக இருப்பதால், கள்ளச் சந்தையில் இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
தொடரும் வேட்டை
இதனால் ஆவுளியாக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றன. இடையில் ஆவுளியா வேட்டைக்கு அரசு தடை விதித்தது. மீறி வேட்டையாடுபவர்கள் வன உயிரினச் சட்டம் ஷெட்யூல்டு 1இன் கீழ், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். சட்டங்கள் புத்தகங்களில் தூங்க, ஆவுளியா வேட்டை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. வேட்டையால் இந்த அரிய பாலூட்டி இனம் இன்றைக்கு ஒட்டுமொத்தமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
மன்னார் வளைகுடா பகுதியில் அழிந்துவரும் பவளத் திட்டுகளையும் அரிய கடல் வாழ் உயிரினங்களையும் காப்பாற்ற விழிப்புணர்வும் கல்வியுமே சிறந்த வழி என்கிறார் சமூக ஆர்வலர் தாகிர் சைபுதீன். “முதல் தலைமுறையாகப் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழக மீனவச் சமுதாயத்தில் அதிகம். மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை ஒட்டியிருக்கும் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டக் கடலோரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் சேர்த்து மன்னார் வளைகுடா உயிர்க் கோளக் காப்பகத்தைப் பற்றியும் பாடம் நடத்த வேண்டும். பவளத் திட்டுகளின் முக்கியத்துவம் விளக்கப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கும், மன்னார் வளைகுடா பற்றியும் அதில் வாழும் உயிரினங்கள் பற்றியும் விழிப்புணர்வும் ஏற்படும்" என்கிறார் சைபுதீன்.
மாற்று முயற்சி
வெளிநாடுகளில் இதுபோன்ற அரிய உயிரினங்கள் வாழும் பகுதிகளைப் பாதுகாத்து, அப்பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். இதன்மூலம் அரிய உயிரினம் காப்பாற்றப்படுவது மட்டுமில்லாமல், அதற்குத் தேவையான பணமும் கிடைத்துவிடுகிறது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் நம் நாட்டில் இல்லை.
மேற்கண்ட வழிமுறைகளைத் தாண்டி, டிராலர் மீன்பிடி முறைகளையும் வேட்டையையும் முறையாகத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை அரசு எடுக்காவிட்டால், ஆவுளியா மட்டுமல்ல, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் அரிய உயிரினங்கள் எதையுமே, நாளை அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
No comments:
Post a Comment