Wednesday, 12 March 2014

வங்கி விகிதம் (Bank rate) - என்றால் என்ன?

ஒவ்வொரு வங்கியும் மத்திய வங்கியிடமிருந்து அவ்வப்போது கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது. வங்கிகள் பல வழிகளில் மத்திய வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம். மிகக் குறுகியகால கடனுக்கு தன்னிடம் உள்ள பத்திரங்களை ஓரிரு தினங்களுக்கு அடமானம் போன்று வைத்து வாங்குவது ஒரு முறை. அல்லது அதைவிட நீண்ட காலத்திற்கு மத்திய வங்கியிடம் கடன் வாங்குவது மற்றொரு முறை. இவ்வாறு வாங்கப்பட்ட நீண்ட கால கடன் மீது வழங்கப்படும் விகிதம் ‘வங்கி விகிதம்’. தற்போது ரிசர்வ் வங்கி விதிக்கும் வங்கி விகிதம் 9%.
அடிப்படை விகிதம் (base rate)
ஒரு வங்கி அளிக்கும் கடனுக்கான மிக குறைந்தபட்ச வட்டி விகிதம் ‘அடிப்படை விகிதம்’ ஆகும். எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் அடிப்படை விகிதத்தை விட குறைந்த வட்டியில் கடன் கொடுக்கக்கூடாது. ஒரு வங்கி பல வழிகளில் கடன்/வைப்பு நிதிகளை வாங்குகிறது. பிறகு அதனின் சொந்த அலுவலக செலவுகளும் உள்ளன. இவ்வாறு நிதி சேகரிப்பதற்கான செலவுகளின் தொகுப்பை கொண்டு ‘அடிப்படை விகிதம்’ கணக்கிடப்படுகிறது.
வேறுவிதத்தில் சொல்வதானால், நிதி பெறுவதற்கு வங்கிக்கு ஆகும் செலவு விகிதம்தான் ‘அடிப்படை விகிதம்’. இந்த அடிப்படை விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். உதாரணமாக ஒரு வங்கியில் குறைந்த வட்டி கொடுக்கவேண்டிய சேமிப்பு கணக்கில் அதிக நிதியும், அதிக வட்டி கொடுக்க வேண்டிய நீண்ட கால கணக்கில் குறைவான நிதியும் இருந்தால், அவ்வங்கியின் அடிப்படை விகிதம் குறைவாக இருக்கும்.
அடிப்படை விகிதம் கணக்கிடப்பட்ட பிறகு, ஒவ்வொரு வாடிக்கையாளரின் தன்மைக்கேற்ப அவர்களுக்கு கொடுக்கும் கடன் மீதான வட்டி அடிப்படை விகிதத்தைவிட அதிகமாக இருக்கும். ஒரு சில வாடிக்கையாளருக்கு ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் அடிப்படை விகிதத்தைவிட குறைவான வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment