Wednesday, 19 March 2014

சமூக வலைதளங்களுக்கு வழிகாட்டு நெறிகள்: தேர்தல் ஆணையம் வெளியீடு

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில், அரசியல் விளம்பரம் தொடர்பாக இந்த வலைதளங்களுக்கு விரிவாக வழிகாட்டு நெறிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக முக்கிய சமூக வலைதளங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இது தொடர்பக தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் திரேந்திர ஓஜா கூறுகையில், "தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு இன்டெர்நெட் அடிப்படையிலான அனைத்து சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.
தேர்தல் விளம்பரங்களை வெளியிடும் முன் அவற்றை மாநில மற்றும் மாவட்ட அளவில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் சமர்ப்பித்து சான்றளிப்பு பெறுமாறு எல்லா சமூக ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம். இவற்றையும் மீறி சட்டவிரோத கருத்துகள் சமூக ஊடக விளம்பரங்களில் இருந்தால் தேர்தல் ஆணையமே அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
"தேர்தல் நடைமுறைகளில் ஊடகங்களின் பங்கு" என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஓஜா, "வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களில் தங்களின் விளம்பர செலவு தொடர்பாக கணக்கு பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி விஜய் தேவ் பேசுகையில், "சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் இயன்றவரை தடுக்கும். அதற்காக சமூக ஊடகங்களின் குரல்வளையை நெரிக்க முயலாது" என்றார்.

No comments:

Post a Comment