ஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பணன் கி.பி. 1370இல் மதுரைமீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்நிகழ்வு மதுரா விஜயம் என அழைக்கப்படுகிறது. குமார கம்பணனின் இந்த வெற்றி குறித்து அவருடைய மனைவி கங்காதேவி ‘மதுரா விஜயம்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.
குமார கம்பணன்
விஜய நகரப் பேரரசு வம்சம், இன்றைய ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆண்டுவந்தவர்கள். புக்கர் மற்றும் அவருடைய சகோதரர் ஹரிஹரர் ஆகிய இருவராலும் கி.பி.1336ஆம் ஆண்டு இப்பேரரசு நிறுவப்பட்டது.
புக்கரின் மகன் குமார கம்பணன். இவர் கி.பி.1362இல் திருவண்ணாமலையை மையம்கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். இது குமார கம்பணனின் குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும். குமார கம்பணனின் மதுரைப் படையெடுப்பின்போது அவருடைய மனைவி கங்காதேவியும் உடன் சென்றுள்ளார். அதனால் அவர் அப்போர் குறித்த பதிவுகளைத் தன் நூலான மதுரா விஜயத்தில் எழுதியுள்ளார்.
மதுரையின் முந்தைய ஆட்சியாளர்கள்
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தின் கடைசி மன்னர். இவர் கி.பி. 1308ஆம் ஆண்டு தன் இறப்பு வரை ஆட்சியைத் தொடர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின் அவருடைய இரு மகன்களுக்கு இடையில் மூண்ட வாரிசுரிமைச் சண்டையால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி தில்லி சுல்தானின் தளபதியான மாலிக்காபூர் 1311இல் மதுரையைத் தாக்கிப் பெருஞ்செல்வத்தைக் கைப்பற்றிச் சென்றார். 1327ஆம் ஆண்டு மதுரை, தில்லி சுல்தானத்தில் 23ஆவது மாநிலமாக மதுரை அறிவிக்கப்பட்டது. ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
இதன் பிறகு முகமது பின் துக்ளக் 1325இல் தில்லியின் சுல்தானானார். ஆனால் பாரசீகப் படையெடுப்பால் மிக மோசமான பொருளாதார நிலைக்கு துக்ளக்கின் ஆட்சி சென்றது. மாநிலங்கள் பிரிந்து செல்லத் தொடங்கின. மதுரையும் தனி நாடாகியது. அதற்கான அறிவிப்பை ஜலாவுதீன் ஹசன் ஷா 1333ஆம் ஆண்டு வெளியிட்டார். இதிலிருந்துதான் மதுரை சுல்தானகத்தின் ஆட்சி தொடங்குகிறது.
ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் வலிமை மிக்க சுல்தானாக இருந்தார். அவர் காலத்தில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் கணக்கில் அடங்காதவை. இவர் 1340ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இறுதியாக சிக்கந்தர் ஷாவின் காலத்துடன் மதுரை சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
பின்புலம்
சுல்தான்களின் ஆட்சியில் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். சிலை வழிபாடு தவறெனக் கருதப்பட்டதால் கோயில்களில சில இடிக்கப்பட்டன; சில இழுத்து மூடப்பட்டன. மக்கள் தெய்வச் சிலைகளைக் காக்க அவற்றை மண்ணில் புதைத்தனர். திருவரங்கரத்து அரங்கநாதர் சிலை திருப்பதி திருமலையில் உள்ள காட்டில் மறைத்து வைக்கப்பட்டது. கோயில் சொத்துகளும் மதுரை சுல்தான்களால் சூறையாடப்பட்டன. திருவிழாக்கள் தடைசெய்யப்பட்டன. மக்கள் பலர் அண்டை நாடுகளில் அகதிகளாகக் குடியேறினர். விஜயநகரத்தில் குடியேறிய மக்கள் இக்கொடுமைகளை புக்கரிடம் சொல்லியதன்பேரில் அவர் தன் மகன் குமார கம்பணனை சுல்தான்களை வீழ்த்தப் பணித்தார் எனச் சொல்லப்படுகிறது.
மதுரைப் படையெடுப்பு
இக்காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த (கி.பி.1339-1363) இராஜ நாராயணச் சம்புவராயன் மதுரை சுல்தானகத்திற்குக் கப்பம் கட்டும் அரசனாக இருந்ததால், அவர்கள் சுல்தானகத்திற்கு ஆதரவாக இருந்தனர். குமார கம்பணன் மதுரை நோக்கி முன்னேற முதலில் தொண்டை மண்டலத்தை வீழ்த்த வேண்டியிருந்தது. கி.பி. 1362இல் சம்புவராயனின் படை வீடு கோட்டையைக் கம்பணன் கைப்பற்றினார். இதுதான் குமார கம்பணன் மதுரைப் படையெடுப்பின் முதல் வெற்றி என ‘மதுரா விஜயம்’ கூறுகிறது.
காஞ்சிபுரத்தில் முகாமிட்டிருக்கும் கம்பணனின் கனவில் ஒரு தேவதை தோன்றி மதுரையைக் காக்க வலியுறுத்தி, வாள் ஒன்றை அளித்ததாக நம்பப்படுகிறது. அந்த வாள் பாண்டியர்களின் வம்சாவளி வாள் என்றும் அதைக் கொண்டுதான் குமார கம்பணன் போர் புரிந்தார் என்றும் மதுரா விஜயம் விவரிக்கிறது.
குமார கம்பணன் 30 ஆயிரம் போர் வீரர்கள் அடங்கிய படைகொண்டு வந்து மதுரையை முற்றுகையிட்டார். சுல்தான் படைகளும் குமார கம்பணனின் விஜயநகரப் படைகளும் வலிமை மிக்க யானைப் படைகளும் குதிரைப் படைகளும் ஆக்ரோஷத்துடன் மோதிக்
கொண்டன. குமார கம்பணனின் விற்படை வீரர்கள் யானை மீது போர் புரிந்துகொண்டிருந்த சுல்தான் வீரர்களுடைய கரங்களை ‘அர்த்த சந்த்ரா’ என்னும் அம்பால் வெட்டி வீழ்த்தினார். அவர்களுடைய கரங்கள் பாம்புகளைப் போல் விழுந்ததாக மதுரா விஜயம் விவரிக்கிறது.
குமார கம்பணன் யானைகள் இரண்டின் தலைகளைப் பிளந்து அதன் மேல் இருந்து போர் புரிந்த வீரர்களை வெட்டிச் சாய்த்தான். குமார கம்பணனின் உக்கிரமான தாக்குதலில் சுல்தானப் படை வீரர்கள் மடிந்தனர். விஜயநகரப் படை வீரர்கள் தொடுத்த அம்புகள் எதிரிப் படைகளின் யானைகளின் முகத்தைப் பதம்பார்த்தன. விஜயநகரப் படையின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாத சுல்தான வீரர்கள் பின் வாங்கிப் பதுங்கினர். ஆனால் மதுரையை விஜயநகரப் படைகள் முற்றுகையிட்டபோதே சிக்கந்தர் ஷா தப்பிச் சென்றார் எனச் சொல்லப்படுகிறது. தலைமை இல்லாமல் வலுவிழந்த சுல்தான் படை வீழ்ச்சியடைந்தது. சுல்தான்கள் பிடியில் சிக்கியிருந்த மதுரை, குமார கம்பணன் வசமானது.
ஆதாரம்: கங்கா தேவியின் மதுரா விஜயம் – மொழிபெயர்ப்பும் தொகுப்பும் அ. கிருஷ்ணமாச்சாரியர், ரங்கநாச்சியார் அச்சகம், ரங்கம்.
A HISTORY OF SOUTH INDIA – K. A. NILAKANTA SASTRI – OXFORD UNIVERSITY PRESS
குழப்பமும் தெளிவுகளும்
சிக்கந்தர்ஷா 1378ஆம் ஆண்டுதான் இறந்தார். ஆனால் கங்கா தேவியின் மதுரா விஜயம், குமார கம்பணனால் மதுரை சுல்தான் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. அதற்குச் சான்று இல்லை. நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு புத்தகத்தின்படி குமார கம்பணன் 1374இல் இறக்கிறார். இது தக்க சான்று எனக் கொண்டால் சிக்கந்தர்ஷா குமார கம்பணனால் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் போரில் வீழ்த்தப்பட்டார் என்பது தெளிவு. அதுபோல போர் நடைபெற்ற கால கட்டம் 1365 1370 என நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். சுல்தான்கள் ஆட்சியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிலை திரும்பவும் 1371இல் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் அதற்கு முன்னால் போர் முடிந்திருக்க வேண்டும். 1370இல் போர் முடிந்ததாகச் சொல்கிறார் நீலகண்டசாஸ்திரி. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது
No comments:
Post a Comment