சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், சிலர் வரலாற்றை உருவாக்குவார்கள். இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்தான் தோழர் இ.எம்.எஸ். ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் 1909-ல் பிறந்தவர் அவர். ஆண்டுக்கு 50,000 மரக்கால் நெல் குத்தகைதாரர்களிடமிருந்து மட்டும் அவருடைய குடும்பத்துக்கு வரும். வீட்டு வேலைகளைச் செய்ய மட்டும் 12 நாயர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இருந்தனர். எனில், எப்படிப்பட்ட செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து அவர் வந்தவர் என்பதை விளக்க வேண்டியதில்லை.
தன் குடும்பத்துக்கென்று எதையும் வைக்காமல், அவ்வளவு சொத்துகளையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த ஓர் அறையில் காலமெல்லாம் வாழ்ந்து மறைந்தார் அந்த மனிதர்.
தான் விரும்பும் மாற்றத்தைத் தன்னிடத்திலிருந்து தொடங்கியவர் இ.எம்.எஸ். தன் பள்ளிப் பருவத்தில் குடுமியை எடுத்தவர், கல்லூரிப் பருவத்தில் பூணூலை அறுத்தெறிந்தார். ‘நம்பூதிரி இளைஞர் சங்க’த்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், இத்தகைய சீர்திருத்தத்தை மற்றவர்களும் கடைப்பிடிக்க வற்புறுத்தினார். இதுகுறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.
சென்னைச் சிறையில் இருந்தபோது இ.எம்.எஸ். பூணூல் அணியாததைப் பார்த்த, அப்போது அவருடன் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இ.எம்.எஸ்-ஸுக்குப் பூணூல் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பூணூலை வாங்கிய இ.எம்.எஸ். பிராமணர் அல்லாத ஒரு தண்டனைக் கைதியிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்.
நாடு முழுவதும் திரண்ட விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, தோழர் இ.எம்.எஸ்-ஸையும் இழுத்தது. 1932-ல் கல்லூரியை விட்டு வெளியேறி, காந்தி அறைகூவல் விடுத்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேர்ந்தது. வரலாற்றுத் துறை மாணவரான
இ.எம்.எஸ். கல்லூரியை விட்டு வெளியேறியபோது, அவரது பேராசிரியர் “நீ வரலாற்று மாணவன் மட்டுமல்ல; வரலாற்றை உருவாக்க வேண்டியவன்” என வாழ்த்தியிருக்கிறார். 1927-ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இ.எம்.எஸ். பங்கேற்றார். பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தவர்கள் பக்கம் இ.எம்.எஸ். நின்றார்.
காந்தியால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரை வருடச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தவர், இரண்டு வருடக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவர்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அறிந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
தலைமறைவுக் காலம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை
சுமார் ஆறாண்டுக் காலம் இ.எம்.எஸ். தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார். ஆசார அனுஷ்டானங்களில் நியதிகளைக் கடைப்பிடித்து வளர்ந்த பெரியதொரு பிரபுத்துவக் குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்த தோழர் இ.எம்.எஸ்., தலைமறைவு வாழ்க்கையின்போது மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்தும் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவர்கள் ஆகியோரது குடிசைகளில், அவர்களுடன் இரண்டறக் கலந்து, அவர்கள் தந்த உணவை - அசைவம் உட்பட - உண்டு எந்தவித எதிர்ப்புமின்றி, கட்சி ஊழியம் செய்தார்.
அந்தக் காலகட்டத்தில் வரலாற்றையும் அரசியலையும் மார்க்ஸியக் கொள்கைகளையும் ஆழமாக அலசத் தொடங்கிய இ.எம்.எஸ்., மெல்ல மெல்ல காந்தியிட மிருந்து விலகி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அப்போது தலித் மக்களுடன் வாழ்ந்ததுதான் தன் வாழ்வில் பெரிய தாக்கத்தை உருவாக்கிய நாட்கள் என்று அவரே தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
சுதந்திரத்துக்காக ஆவேசமாக காந்தி போராடினாலும், சமுதாயச் சீர்திருத்தத்தில் அவருடைய பங்களிப்பு போதாது என்று இ.எம்.எஸ். கருதினார். இதனால் காந்தியிடமிருந்தும் நேருவிடமிருந்தும் விலகி, ஜெயப் பிரகாஷ் நாராயணன் தலைமையிலான காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1936-ல் தோழர் இ.எம்.எஸ்-ஸை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்த பெருமை தோழர் சுந்தரய்யாவைச் சாரும்.
தோழர் இ.எம்.எஸ். யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பரந்த வாசிப்பு உள்ளவர். படித்ததைப் போலவே எல்லாத் துறைகளைப் பற்றியும் எழுதிக் குவித்தார். அவருடைய எழுத்துகள் 100 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
1937-ல் மலபார் பகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டு சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினரானார். (தமிழக சட்டமன்றத்தில் முன்னோடி உறுப்பினர்களில் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது) சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட அன்றைய அரசு மலபார் விவசாயிகள் பிரச்சினைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்திட அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட வல்லுநர் குழுவில் தோழர் இ.எம்.எஸ்ஸும் இடம்பெற்றிருந்தார்.
இந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த அறிக்கைக்குத் தனது மாற்றுக் கருத்தை ஒரு குறிப்பாக அளித்தார். (அன்றைய விவசாயிகள் நிலைமையும், அதற்கு இ.எம்.எஸ். அளித்த தீர்வையும் இப்போதும் பேராசிரியர்கள் பாராட்டுகிறார்கள். அவர் அளித்த தீர்வு, எதிர்காலத்தில் தேசம் தழுவிய விவசாயிகள் இயக்கங்களின் முழக்கங்களாக மாறின.)
தோழர் இ.எம்.எஸ். தான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிலவிய வரலாற்றுச் சூழலைத் தாண்டிச் சிந்தித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவழி மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுந்தபோது, ‘ஐக்கிய கேரளம்’ நூலை இ.எம்.எஸ். எழுதினார். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு வித்திட்ட பல முன்னோடிகளில் தோழர் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர்.
நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி
1957-ல் நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இ.எம்.எஸ். தலைமையில் கேரளத்தில் அமைந்தது. 28 மாதங்களே நீடித்த இந்த ஆட்சியின் குறுகிய காலத்தில், உபரி நில விநியோகம், குத்தகை விவசாயிகளின் நில வெளியேற்றத் தடுப்பு, குடியுரிமைப் பாதுகாப்பு (மனைப்பட்டா), கல்வியளிப்பதில் அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல், பரந்துபட்ட சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை நிறுவுதல் போன்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
கல்வி, சுகாதாரம், பிறப்பிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்றும் கேரளம் முதலிடத்தில் இருப்பதற்குத் தோழர் இ.எம்.எஸ்-ஸின் பங்களிப்பு முக்கியமானது.
கட்சி பெரிதா, தனிநபர் பெரியவரா?
தோழர் இ.எம்.எஸ். இரு முறை முதல்வராக இருந்திருக்கிறார். தவிர, கட்சியின் பொதுச் செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ஆனால், என்றைக்குமே தான் என்ற செருக்கோ அகங்காரமோ அவரிடம் வெளிப்பட்டது இல்லை. ஒரு சின்ன உதாரணம், அவர் முதலமைச்சராக இருந்தபோது, கேரள அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தில் தவறு இருந்தது பின்னர் தெரியவந்தது. இதற்காகக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அவரைப் பகிரங்கமாகக் கண்டித்தது.
அவர் டெல்லியிலிருந்து கூட்டம் முடிந்து திருவனந்தபுரம் வந்தபோது அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தவறு நடந்த துறைக்கான அமைச்சர் அவர் இல்லை என்றாலும், ஒரு முதல்வராகத் தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், “என் கட்சியே என்னைக் கண்டிக்காவிட்டால் வேறு யார்தான் என்னைச் சரிசெய்ய முடியும்?” என்று கேட்டார்.
வாழ்நாள் சாதனை
அவருடைய கடைசிக் காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர், ‘‘உங்களுடைய வாழ்க்கையின் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?” என்று கேட்டபோது, “ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் பிறந்த என்னைப் பின்னாளில், பாட்டாளி வர்க்கம் தன் தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டதையே வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார் இ.எம்.எஸ். ஊழலும் யதேச்சதிகாரமும் அரசியல் யதார்த்தம் ஆகிவிட்ட சூழலில் வாழ்கிறோம். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணராக வழிகாட்டுகிறார் தோழர் இ.எம்.எஸ்.
(இன்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு நினைவு நாள்).
- ஜி. ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: gr@tncpim.org
No comments:
Post a Comment