Wednesday, 19 March 2014

அரசியல் தேவையா நமக்கு?

மனிதவளம் போன்ற பாடங்களை நடத்தும்போது சமூகம், பொருளாதாரம், அரசியல், சட்டம், கலாசாரம் என விவாதம் விரிவது இயற்கை. ஒரு பெரிய நிர்வாக பள்ளியில் வருகைப் பேராசிரியராக நான் சில வருடங்கள் பணியாற்றி வந்தபோது நடந்த விவாதங்கள் சுவையானவை. வருடத்துக்கு சில நாட்கள்தான் வேலை. இந்தியாவின் குறுக்கு வெட்டு போன்ற ஒரு கலாச்சார கலவை கொண்ட வகுப்பில் பாடம் நடத்துவது நிறைவான அனுபவம்.
மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் கார் கம்பெனி துவங்கத் திட்டமிட்ட டாடா நிறுவனம் எதிர்ப்புகள் காரணமாக தடுமாறிக் கொண்டிருந்த நேரம் அது. டாடாவின் மற்றொரு நிறுவனம் பற்றி பிரசண்டேஷன் செய்த மாணவன் சிங்கூர் பற்றியும் பேச ஆரம்பித்தபோதுதான் விவாதம் தொடங்கியது. ஒரு தொழிற்சாலைத் திட்டம் ஏன் இத்தனை எதிர்ப்புக்கு ஆளாகிறது என்ற தொனியில் அது தொடங்கியது.
ஒரு நிறுவனத்தின் மேலான திட்டத்தை, சில அரசியல்வாதிகள் தாமதப்படுத்துகிறார்கள் என்று எல்லோரும் ஒரே குரலில் சொன்னது அதிர்ச்சியைத் தந்தது. இரு தரப்பு உண்மைகளும் தெரியாமல் வலுவில்லாத ஒரு அபிப்பிராயம் வைத்துக் கொண்டு, இந்த எம்.பி.ஏக்கள் நடுநிலையான நிர்வாகத்தை எப்படி செய்ய முடியும் என்கிற கவலை வந்தது.
தொழிலாளர் சட்டம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். போன செமஸ்டரில் முடிந்தது என்றார்கள். அது தங்களுக்கு விருப்ப பாடமாகவும் இல்லை; அதனால் பெரிய பயன் இருப்பதாகவும் தெரியவில்லை என்று அவர்கள் சொன்னதைக் கேட்டதும் பகீரென்றது. பெரிய
எம்.பி.ஏ பள்ளியில் படித்தவர்கள் மிக கணிசமான சம்பளத்தில் கார்ப்பரேட் அலுவலகத்தில் உட்கார்வதால் அடிமட்ட தொழிலாளர் பிரச்சினைகளை கையாளப் போவதில்லை. அது எம்.எஸ்.டபிள்யூ (மாஸ்டர் ஆப் சோஷல் ஒர்க்) மாணவர்களின் இலக்கு என்றார்கள். பலர் இரட்டை பாடத்தில் மனித வளமே வேண்டாம் என்று கூறினார்கள். அப்படியே எடுத்தாலும் உற்பத்தித் துறை வேண்டாம். சேவை பிரிவுதான் வளர்ச்சிக்கு உதவும் என்றார்கள்.
பின் மீண்டும் சிங்கூர் பற்றி பேச ஆரம்பிக்கையில் அரசியல்வாதிகள் இல்லாவிட்டால் தொழில் முதலீடுகள் அதிகம் குவியும் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்தார்கள். அவர்களின் அரசியல் அறிவுத்திறனை சோதிக்க ஒரு சின்ன ‘க்விஸ்’ வைத்தேன். விளைவு திடுக்கிடவைக்கும் அளவிற்கு மோசமாக இருந்தது.
இருவரைத் தவிர அந்த 60 பேரில் பலர் அரசியலில் பாலபாடமே அறிந்திருக்கவில்லை. இடதுசாரி சிந்தனைக்கும் வலதுசாரி சிந்தனைக்கும் கூட வேறுபாடு தெரியாது என்றனர். தெரியாததற்காக கவலைப்படாமல் எதற்கு இதெல்லாம் தெரிய வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களிடம் மேலோங்கி நின்றது.
ஒவ்வொரு கட்சிக்கும் அது தொடங்க, வளர, நீடிக்க சில சித்தாந்தங்கள் காரணமாக இருக்கின்றன. பெரும்பாலான கட்சிகளுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் சில நிலைப்பாடுகள் உண்டு. இந்த சமூக பொருளாதார நிலைப்பாடுகள்தான் அவர்களின் அரசியல் செயல்பாட்டை தீர்மானிக் கின்றன என்றெல்லாம் விளக்கினேன்.
சுயநலம், ஊழல், முறையற்ற கூட்டணி என்று பொது சீர்கேடுகள் தவிர்த்து ஒவ்வொரு கட்சியின் செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தால் அந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலோ ஆட்சிக்கு ஆதரவளித்தாலோ என்ன செய்யும் என்பதை அறியலாம். இந்த அடிப்படை அறிவு தொழில்துறைக்கு வரவிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்று புரிய வைத்தேன்.
அரசியல் தெரியவில்லை என்பது சட்டம் தெரியவில்லை என்பது சொல்வதைப் போலத்தான். அறியாமை ஆபத்து. அரசியல் தெரிய வேண்டும் என்றால் ஒரு அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் அரசியல் தளத்தில் நிகழ்வதை கவனித்து அது நம் வாழ்வின் சகல கூறுகளையும் எப்படி மாற்றுகிறது என்பதை உணர வேண்டும். நம்மை ஆளும் மக்களை தேர்வு செய்யும் உரிமை எவ்வளவு மகத்தானது என்பதை அந்த உரிமை இல்லாத நாடுகளின் வரலாற்றைப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்தினேன்.
“வரலாறு தேவையில்லாத பாடம் என்று சொல்லியே வளர்க்கப் பட்டோம். தொழில் நுட்பம், நிர்வாகம் படித்த எங்களுக்கு வரலாறும் அரசியலும் அவசியம் என்பதை இப்போதுதான் உணர்கிறோம்” என்றனர் மாணவர்கள்.
பின்னர் ஹோம் ஒர்க் கொடுத்தேன். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, இந்துமகா சபாவின் பிறப்பும் வளர்ச்சியும், காங்கிரஸ் தொடங்கப்பட்ட நோக்கமும் வளர்ச்சியும், சுய மரியாதை இயக்கம், அம்பேத்காரின் பங்களிப்புகள், பார்ஸி மக்களின் தொழில்முனைவுகள், உலகளாவிய காலனி ஆதிக்க அரசியல், வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் அரசியல் காரணங்கள், யுத்தமும் பொருளாதார தாக்கமும், மதச்சார்பின்மை....இப்படி 20 குழுக்களாக பிரித்து 3 பேருக்கு ஒரு தலைப்பு எனக் கொடுத்து ஒரு இரவு மட்டும் தகவல் திரட்டி விவாதம் நடத்தி மறு நாள் 15 நிமிடத்திற்கு அது பற்றி பேச அழைப்பதாகச் சொன்னேன்.
விடிய விடிய திரட்டி ஆர்வத்துடன் நேரத்திற்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர் மாணவர்கள். நான் அவர்களை பேச விடவில்லை.
“நேற்று அரை மணி நேர விவாதமும் உங்கள் ஓர் இரவு ஆராய்ச்சியும் உங்களுக்கு பேச, கேட்க இவ்வளவு ஆர்வத்தை உண்டு பண்ணிருப்பதே போதும். உங்கள் விவாதத்தை வகுப்பிற்கு வெளியில் தொடருங்கள். இப்போது பாடத்தைப் பார்க்கலாம்” என்றேன். பெரும் ஏமாற்றத்துடன் ஒரு கேஸ் ஸ்டடியை விவாதிக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் அன்று அவர்களிடம் நடுநிலைக்கு செல்வதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. வகுப்பு முடிந்து ரயில் நிலையம் வரும்வரை அவர்கள் அரசியலை அலசிக்கொண்டே வந்தது தனிக்கதை. இந்த கெட்டிக்கார மாணவர்களிடம் அரசியல் அறிவை ஒளித்து வைத்தது யார்? அரசியல் என்றாலே சாக்கடை என்று தவறாக சொல்லிக் கொடுத்தது யார் யார்? அரசியலை படிப்பாகக் கூட மேற்கொள்ள தயங்குவதால்தான் கீழான பலரை நாமே நம் தலைக்கு மேலே தூக்கி வைத்திருக்கிறோம் என்று இவர்களிடம் சொல்லாமல் விட்டது யார்?
அரசியல் என்றால் தேர்தல் அரசியல் என்று ஏன் எண்ண வேண்டும்? காந்தி, பெரியார், அம்பேத்கார் அரசியல் எல்லாம் தேர்தல் அரசியலோ ஆட்சியைப் பிடிக்கும் அரசியலோ இல்லையே?
பல கல்வி கூடங்களில் அரசியல் என்றால் தவிர்க்க வேண்டிய ஒன்று என்ற எழுதப்படாத விதி உள்ளது. சோஷல் ஸ்டடீஸ் பாடத்தில் பத்தாம் வகுப்பு வரை அரசியலுக்குத் தேவையான அனைத்தும் மிக விவரமாகவே உள்ளது. ஆனால் அவற்றை வகுப்பில் கையாளும் நெறியில்தான் அவை தேர்வுக்கு மட்டும் உதவுமா அல்லது வாழ்க்கைக்கும் உதவுமா என்பதை தீர்மானிக்கிறது.
கல்வியில் கலந்துரையாடல்தான் உயிர் நாடி. சரியான பதில்கள் எழுதி மதிப்பெண்கள் வாங்குவதில் அல்ல. அரசியலை- வாழ்வில் சகல கூறுகளுடன்- விவாதிப்போம் வகுப்பறையில்.விடையில் சரியான வார்த்தைகள் இருந்தால் இவ்வளவு மதிப்பெண்கள் என போய் கொண்டிருக்கும் தேர்வு முறையை நினைக்கையில் இந்த க்விஸ் ஜோக் நினைவுக்கு வருகிறது:
“இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியது யார்?”
“ஷர்மிளா டாகூர்!”
“டாகூர் எனபது பாதி விடை. அதனால் அரை மார்க் தான்!!”
டாக்டர். ஆர். கார்த்திகேயன் - தொடர்புக்கு gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment