கண்களால் பார்த்தாலும் பெட்ராவை முழுவதும் உள்வாங்கிக்கொள்வது இயலாத காரியம். கனவில் காண்பது கண் முன்னால் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது பெட்ராவை முதலில் கண்டபோது.
ஜோர்டானுக்குள் அதன் வடக்குப் பகுதியிலிருந்து நுழைந்தபோது, எல்லை தாண்டுதல் அவ்வளவு கெடுபிடியாக இல்லை. எல்லையைத் தாண்டியவுடன் கண்ணுக்குத் தெரிவது ஜோர்டானின் அரசரான இரண்டாம் அப்துல்லாவின் சுவரொட்டிகள். எங்களது வழிகாட்டி ஆங்கிலம் அழகாகப் பேசினார். அன்போடு இருந்தார். இந்தியர்களை ஜோர்டானியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றார். எதனால் என்று சொல்லவில்லை.
போன ஆண்டு ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது - உலகிலேயே இனச் சகிப்பு இல்லாத மக்கள் அதிகமாக இருக்கும் நாடு எது என்பதை அறிய. முதலிடத்தில் வந்தது ஜோர்டான். இரண்டாவது இடத்தில் இந்தியா. இந்தக் கருத்துக்கணிப்பு எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதற்கு அளவுகோல், அது பாகிஸ்தானை சகிப்புத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்று என்று கூறுவதுதான்!
ஜோர்டானிய அரசு
ஜோர்டானிய அரசு ‘ஹஷெமைட் பரம்பரை’என்று அழைக்கப்படுகிறது. இது ஏதோ மிகப் பழைய அரசு என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இதன் முதல் அரசர் அப்துல்லா 1946-ம் ஆண்டுதான் பதவியேற்றார். ஆட்டோமான் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் அவர்.
இப்போதுள்ள அரசர் இந்தப் பரம்பரையின் நான்காவது அரசர். அரபு வசந்தம் உச்சத்தில் இருந்தபோது, இவருக்கு எதிராகவும் கிளர்ச்சி எழுந்தது. அரசருக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்ததால், கிளர்ச்சி முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. நான் பலரிடம் கேட்டேன். மன்னர் நல்லவர் என்றுதான் சொல்கிறார்கள்.
ஜோர்டானின் பொருளாதாரம்
ஜோர்டானுக்குச் சென்றபோது ஏதோ வயல்களும் சோலைகளும் மட்டுமே கொண்ட நாட்டுக்குள் போவது மாதிரி இருந்தது. எங்களது வழிகாட்டி ஜோர்டானின் பொருளாதாரத்துக்கு விவசாயம் மூன்று சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது என்று சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
ஜோர்டானுக்கு எண்ணெய் வளம் கிடையாது. ஆனாலும், அரபு நாடுகளிலேயே அதிகப் பிரச்சினைகள், குறிப்பாக பணப் பிரச்சினைகள் இல்லாத நாடாக அது இருந்தது. சதாம் ஹுசைன் இராக்கில் இருந்த வரை எண்ணெய் மிகவும் குறைந்த விலையில் கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே, ஜோர்டானில் யாரைக் கேட்டாலும் அநேகமாக அவர்களுக்குப் பிடித்த தலைவர் சதாம் ஹுசைன் என்றுதான் சொல்கிறார்கள்.
இப்போது எண்ணெய் விலை அதிகரித்ததுபோல வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவிட்டது. 21-ம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் ஏழ்மை குறைந்திருந்தாலும், ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகரித்து விட்டதாக, உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரினால், ஜோர்டானுக்குள் அகதிகளின் வரவு அதிகரித்துவிட்டது. சுமார் எட்டு லட்சம் பேர் என்கிறார்கள். ஜோர்டான் ஜனத்தொகையில் 10 சதவீதத்துக்கும் மேல். இதைத் தவிர, இரண்டு லட்சம் இராக்கிய அகதிகளும் பல வருடங்களாக இருக்கும் பாலஸ்தீனிய அகதிகளும் உள்ளனர்.
ஜோர்டானின் தலைநகரமான அம்மான் அதிகம் கவரவில்லை. நெபாடியர்களால் கட்டப்பட்ட பெட்ராவுக்கு விரைந்தோம்.
நெபாடியர்கள்
கிறிஸ்துவுக்கும் முந்தைய நூற்றாண்டுகளில் இந்தியா, சீனா வரை சென்று வணிகம் செய்தவர்கள் நெபாடியர்கள். இவர்கள் அரேபியர்கள் என்று சொல்லப்பட்டாலும், எங்கிருந்து வந்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், இவர்கள் ஐரோப்பாவிலிருந்து தொடங்கி இந்தியா, சீனா வரையில் சென்ற வணிகப் பாதையில் மிக முக்கியமான இடத்தில் இருந்ததால், பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள்.
அகழ்வாராய்ச்சி செய்தபோது, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பானைகளின் துண்டுகள் கிடைத்திருக்கின்றன பெட்ராவில். சீனாவுக்குச் செல்லும் வழியில் இருந்த தமிழகத் துறைமுகங்களில் சில நாட்கள் செலவிட்டுத்தான் அவர்கள் சென்றிருக்க வேண்டும்.
நெபாடியர்கள் முதலில் நாடோடிகளாகத்தான் இருந் தார்கள், கூடாரங்களில் வசித்தார்கள் என்று வரலாறு சொல்கிறது. இவர்கள் பாலைவனத்துக்கு மத்தியில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் கட்டிய கனவு நகரம்தான் பெட்ரா.
பெட்ரா
பெட்ராவைப் பற்றி எழுதுவது இயலாத காரியம். அது விவரிக்க முடியாத அழகையும் ஆச்சரியத்தையும் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது. தற்கால உலக அதிசயங்களில் ஒன்றாக அது அறியப்படுகிறது என்று சொல்வது, கம்பன் ஒரு கவிஞன் என்று சொல்வதுபோல. கண்களால் பார்த்தாலும் பெட்ராவை முழுவதும் உள்வாங்கிக்கொள்வது இயலாத காரியம். கனவில் காண்பது கண் முன்னால் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது பெட்ராவை முதலில் கண்டபோது.
பெருஞ்சுவர்களுக்கு இடையே
பெட்ரா நகரம் சீக் (Siq) என அறியப்படும் மலைச் சுவர்களுக்கு இடையே இருக்கும் பாதையின் முடிவில் இருக்கிறது. இந்தப் பாதையையே உலக அதிசயங்களில் ஒன்றாகக் கணக்கில்கொள்ள வேண்டும். இருபுறமும் நூறுலிருந்து இருநூறு மீட்டர்கள் வரை ஓங்கி நிற்கும் மலைச்சுவர்கள். சுவர்களைச் செதுக்கி அதன் வழியாகத் தண்ணீர் செல்வதற்காகக் களிமண் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன.
சில இடங்களில் இன்னும் அந்தக் குழாய்கள் இருக்கின்றன. இந்தப் பாதையில் நடப்பதை அபாயகரமாக ஆக்குபவர்கள் குதிரைவண்டிக்காரர்கள். காற்று வேகத்தில் வரும் குதிரைகளின் கால்களுக்கு அடியில் செல்லாமல் தப்பிக்க சுவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
கஜானா
முடியவே வேண்டாம் என்று நாம் நினைக்கும்போது பாதை முடிந்துவிடுகிறது. மலைச் சுவர்களின் இடையே ஒரு திருப்பத்தில் கஜானா என்று அழைக்கப்படும் இளஞ் சிவப்பு அதிசயம் கண்களுக்கு முன்னால் பளீரென்று வரும்போது மூச்சு நின்றுவிடும்போல இருக்கிறது.
40 மீட்டர்கள் உயரமுள்ள இந்தக் கட்டிடம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மலையைக் குடைந்து, ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. நெபாடிய அரசர்களில் ஒருவர் புதைக்கப்பட்ட இடம். கிரேக்க பாணியில், கொரிந்தியன் தூண்களுடன் இருக்கும் இதற்குப் பெயர் கஜானா (புதையல்) என்று கொடுக்கப்பட்டதால், இங்கு புதையல் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தவர்களின் தடங்களும் இங்கு இருக்கின்றன.
இருதளங்களில் இருக்கும் தூண்களுக்கு இடையே கிரேக்கக் கடவுளர்கள் மற்றும் குதிரை வீரர்களின் சிற்ப அடையாளங்கள் இருக்கின்றன. 1849 வரை அவை இருந்திருக்கின்றன. டேவிட் ராபெர்ட்ஸ் என்ற ஓவியர் அவற்றின் படங்களை வரைந்திருக்கிறார். கடந்த 150 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கஜானாவுக்கு இருபுறங்களிலும் பெட்ரா விரிகிறது. அசீரிய, எகிப்திய, கிரேக்க, ரோமாபுரி மற்றும் பைசாண்டிய பாணிக் கட்டிடங்கள். மேற்கத்தியக் கட்டிடப் பாணியின் பயிலரங்கம்போல இருக்கிறது. கனவு எல்லையில்லாமல் விரியும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று.
வழிகாட்டி
எங்களது வழிகாட்டி விடாமல் பேசிக்கொண்டு வந்தார். ஒரு இடத்தில் நிறுத்தி, ‘‘இந்தச் சிற்பத்தைப் பாருங்கள். குறிப்பாக, அதன் காலணியைப் பாருங்கள்’’ என்றார். அதில் ஏதோ எழுதியிருந்தது. என்ன என்பது சில வருடங்களுக்கு முன்னால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. எழுதியிருப்பது என்ன? சிறிது இடைவெளிக்குப் பின் அவரே சொன்னார்:
“மேட் இன் சைனா.”
- பி.ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம் - தமிழ் நாவலாசிரியர்,
பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
No comments:
Post a Comment