வங்கி முதலீடு (BANK CAPITAL)
வங்கியின் முக்கிய முதலீடு அதனின் பங்கு முதலீடாகும். பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு முதலீடு அதிகமாகவும், பொதுமக்களின் பங்கு முதலீடு குறைவாகவும் இருக்கும். பிரித்தளிக்கப்படாத லாபமும் ஒரு வகை முதலீட்டு பணம்தான். இவையல்லாமல் வேறு பல சிறுசிறு முதலீட்டு வகைகளும் உள்ளன.
வங்கி கொடுத்த கடன் திரும்ப வராதபோது, வங்கியில் வைப்புக் கணக்கில் பணம் வைத்தவர்களுக்குப் பணம் கொடுப்பதற்குப் பெரிதும் உதவுவது இந்த ‘வங்கி முதலீட்டு பணம்’. எனவே, ஒரு வங்கியின் நிதி ஆரோக்கியமாக உள்ளது என்பதை அறியும் குறியீடுகளில் வங்கி முதலீட்டு அளவும் ஒன்று.
முன்னுரிமை துறைகள் (Priority Sector)
வங்கிகள் கடன் கொடுக்கும் போது சில துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றிற்கு அதிக கடன் கொடுக்கவேண்டும். முன்னுரிமை துறைகள் என்றால்என்ன? எத்துறைகளுக்கு சரியான நேரத்தில், போதுமான கடன் கிடைக்கவில்லையோ, அவை முன்னுரிமை துறைகளாகும்.
விவசாயம், மிகச்சிறிய, சிறிய தொழில் நிறுவனங்கள், கல்வி, வீடு கட்டுதல், ஏற்றுமதி போன்றவை முன்னுரிமை துறைகளாகும். பொதுவாக வங்கிகள் கொடுக்கும் கடனில் 40 சதவீதம் இவ்வாறான முன்னுரிமைத் துறைகளுக்கு கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் உண்டு.
இதில் வியசாயத்திற்கு மட்டுமே 18 சதவீதம் கொடுக்கவேண்டும். மேலும், சிறு விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள், கைவினைக் கலைஞர்கள், scheduled வகுப்பினர், பழங்குடியினர் போன்ற நலிந்தோருக்கு, அதிக முன்னுரிமை கொடுக்கவேண்டும். இம்முன்னுரிமை துறைகளுக்குக் கொடுக்கப்படும் கடன்கள் மீதான வட்டி எவ்வளவு வசூலிக்கவேண்டும் என்பதை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் அவ்வப்போது தெரிவிக்கின்றன.
அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (Basic Savings Bank Deposit Account)
இந்தியாவில் நிதித் துறையின் சேவைகள் எல்லாருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு முன்பு ‘No frills’ கணக்கு என்பதை வங்கிகளில் நடைமுறைப்படுத்தினர். இப்பொது அதனை ‘அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு’ என்று மாற்றி உள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக இந்த சேவை தரப்படுகிறது. இந்த சேமிப்பு கணக்கில் எப்போதும் குறைந்தபட்சத் தொகை ஒன்றினை வைக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இதில் பரிவர்த்தனை செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு சில நிபந்தனைகளும் உண்டு.
No comments:
Post a Comment