அந்த மனித வளத் துறைத் தலைவர் அழகாக பி.பி.டி போட்டு பேசிக் கொண்டி ருந்தார். கார்பரேட் எதிக்ஸ் பற்றி. அந்த பன்னாட்டு நிறுவனம் தங்கள் பணியாளர்களை எப்படி இதற்கு பயிற்சி கொடுக்கிறது, கண்காணிக்கிறது என்றெல்லாம் விளக்கினார்.
நிறுவன ஒழுக்கம், நெறிமுறைகள் மற்றும் விழுமியங்கள் குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் ஏன் இப்படி திடுதிப்பென்று எல்லாரும் ஒழுக்கப் பாடம் எடுக்கிறார்கள்? நிறுவனங்களில் மோசடிகளும் நெறிமுறை கேடுகளும், கம்பெனியின் விழுமியங்களுக்கு புறம்பான செயல்களும் அதிகரித்துள்ள தாக அவரே சொன்னார்.
மதியம் பேசிய நான் எதிக்ஸ் பற்றி பயிற்சி அளிக்க வேண்டிய அளவில் நம் பணியாளர்களை வைத்திருப்பது எதைக் காட்டுகிறது என்று கேள்வி எழுப்பினேன். எங்கள் ஊரில் புதிதாக ஐந்து காவல் நிலையங்கள் வந்துள்ளன என்றால் என்ன பொருள்; சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது என்று! அதேபோல எங்கள் ஊரில் மெயின் ரோடு பூரா மருத்துவமனைகள் என்றால் என்ன பொருள்? உடல் நலம் குன்றியோர் அதிகரித்திருப்பதுதானே? அதுபோல திடீரென்று எல்லாரும் எதிக்ஸ் பேசுவது மக்களை ஒழுக்க சீலர்களாக ஆக்குவதற்கு அல்ல. தவறான நடத்தைகளால் நிறுவன பெயரும் வியாபாரமும் சந்தையில் சரிந்தால் அதை ஈடுகட்ட இதையெல்லாம் செய்ய வேண்டும். இதில் தவறு எதுவுமில்லை.
என் கவலை அது பற்றியல்ல. ஒரு பொது அபிப்பிராயம் இங்கு வளர்ந்து வருகிறது. இந்த தலைமுறையிடம் ஒழுக்கக் குறைவு அதிகரித்து வருவதாகவும், அதனால் அவர் களை வழிப்படுத்த இதெல்லாம் தேவைப்படுவதாகவும்! ஒழுக்கம் என்பதே ஒரு வினோத விலங்கு. யார் எதை எங்கு எப்படி செய் கிறார்கள், அதை யார் எங்கு எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கு ஏற்ப அர்த்தப்படுத்திக் கொள்ளப் படுகிறது.
தவிர இளைய தலைமுறை அதில் குறைபட்டுள்ளது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அவர்களின் இந்த குறைபாட்டிற்கான தார்மீக பொறுப்பை சென்ற தலைமுறை தானே எடுத்துக் கொள்ள வேண்டும்? அவர்களின் வளர்ப்பும் ஆளாக்குதலும் தானே இதற்கு பெரும் காரணம்? இதை ஏன் சௌகரியமாக மறந்து விடுகிறோம்?
“போன் வந்தால் நான் இல்லை என்று சொல்!” என்று தகப்பன் பணிக் கையில் “பொய் சொல்லுதல் பெரிய தவறில்லை; அப்பா எல்லா பொய்களும் சொல்லிவிட்டு வெற்றிகரமாக வாழ் கிறார்! அதனால் பொறுப்புகளில் தப்பிக்க பொய் சொல்லலாம்” என்று குழந்தை புரிந்து கொள்கிறது. “இன்ஸ்பெக்சன் வந்தால் இதை மட்டும் இப்படிக் காட்டலாம். அவனுக்கு இப்படி கொடுத்தால் வேலை நடக்கும்” என்று மேலதிகாரி சொல்லும்போது அது எழுதப்படாத பணி விதியாகிறது.
நம் லாபத்திற்காக இயற்கையை, அரசாங்கத்தை, பொதுமக்களை எப்படி நடத்துகிறோம் என்று பாருங்கள். அதே போலத்தான் பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் நடத்து வோம். அதைப் பார்த்துத்தான் அவர்களும் பிறரை நடத்தக் கற்றுக் கொள்வார்கள்.
பிறரை கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொள்ளுதலை Vicarious Learning என்கிறோம் உளவியலில். தாயைப் போலவே மகள் பாத்திரம் பிடிப்பதும், அப்பா கோபத்தில் திட்டும் வார்த்தை வெளியில் மகனுக்கு சுலபமாக வருவ தும் இதனால்தான். பிரபு தேவா நடனத்தை பொடிசுகள் டி.வி பெட்டி முன் ஆடுவதும் இதனால்தான்.
வேலையில் பாஸ் உடல் மொழியும் வார்த்தைகளும் இதனால்தான் மிக எளிதாக உள் செல்கிறது. அதனுடன் அவர்களின் நிர்வாக நெறிமுறைகளும் திறன்களும் துணைக்குச் செல்கின்றன.
இதில் முக்கியமானது பேசும் வார்த்தைகளும் பேசாத ஒழுக்கமும் முரண்படுகையில் அங்கு பேசாத ஒழுக்கம்தான் பின்பற்றப்படுகிறது. “எல்லாத்தையும் ப்ராஸஸ் மீறாம செய்யணும்பா” என்று சொல்லிக்கொண்டே “எப்படியாவது இதை இன்னிக்கு முடி!” என்று உணர்த்தினால், அங்கு வழிமுறைகள் மீறப்பட்டு அன்றே அது அவசரமாக நடந்து முடியும்! இப்படித்தான் நாம் அனைவரும் நெறிமுறைகள் கற்கிறோம்.
நெறிமுறையும் நம்பிக்கை போலத்தான். ஆயிரம் வார்த்தைகள் புரிய வைக்காததை ஒரு செயல் புரிய வைக்கும். ஒவ்வொரு மேலாளரும் விழுமியம் கற்றுத் தரும் ஆசான். ஆனால், அது வகுப்பறைகளில் நடைபெறுவதில்லை. அன்றாட அலுவல் பணியில் கற்றுக் கொள்ளப்படுகின்றன!
நாம் காணும் அனைத்து மக்களின் ஒழுக்கமும் நேர்மையும் நம் வாழ்வு சார்ந்த மதிப்பீடுகளை மாற்றுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள் என நாம் பெரிதும் மதிக்கும் நபர்களே தவறுகள் செய்யும் பொழுது அதன் தாக்கம் நமக்குள்ளும் ஏற்படுகிறது.
அதுபோல, ஒரு நிறுவனம் அரசாங் கத்தையோ, வாடிக்கையாளரையோ, தொழிலாளரையோ யாரை மோசம் செய்தாலும் அது பொது மக்கள் பார்வையில் நம்பிக்கை இழக்கிறது. Corporate Fraud என்று கூகுள் செய்து பார்த்தால் இன்றைய தூக்கத்தை நீங்கள் இழப்பது நிச்சயம்!
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல்தான் சர்வ ரோக நிவாரணி போல இந்த கார்ப்பரெட் எதிக்ஸ் பயிற்சியை வைத்துக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியம் என்றால் ஏன் எம்.பி.ஏ வில் முக்கிய பாடமாக இல்லை? பள்ளிகளில் மாரல் சயின்ஸ் பாடத்தையே தவறவிட்ட நிலையில் இதை எதிர்பார்ப்பதே தவறுதான்!
இந்த கேள்விகள் கிளப்பிய சூட்டின் தன்மை உணர்ந்து என் அமர்வின் நெறியாளர் என் மென்னையைப் பிடித்து என்னை திசை திருப்பினார். இந்த புனித பசுவைத் தொடுவதாவது? அதுவும் மாணவர்கள் மத்தியில் எப்படி? அமர்வு முடிந்து நெருப்பு கனன்று கொண்டிருந்தது.
அகத் தூய்மை தலைமைப் பண்பிற்கும் நிறுவன நெறிகளுக்கும் எவ்வளவு முக்கியம் என தேனீர் இடைவெளியில் மாணவர்களிடம் பேசினேன். அப்போது நிறுவன மோசடிகளின் விலை பற்றி ஒரு பேராசிரியர் பிரமாதமாக பட்டியல் போட்டுக் காண்பித்தார். கைகுலுக்கல்களும் ‘கட்டிப்பிடி’ வைத்தியமுமாய் விடைபெற்ற பின்னும் மனம் பேசாத அம்சங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆர் படங்களின் தலைப்பு களை வைத்தே Value Clarification பற்றி கருத்தரங்கம் நடத்தலாம் என்று தோன்றியது. நல்லவன் வாழ்வான். நீதிக்குப்பின் பாசம். திருடாதே. தாய்க் குப்பின் தாரம். நீதிக்கு தலை வணங்கு.
எங்கோ தவறவிட்ட அடிப்படைப் பாடங்களை அவசரமாக அடுத்தத் தலைமுறைக்கு கடத்த வேண்டும். யாரை மிதித்து ஓடினாலும் கடைசியில் பணம் சம்பாதித்து ஜெயிக்கணும் என்கிற அவசர பாடத்தை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். அரசியல்வாதியும் தலைவனும் நம் விழுமியங்களிலிருந்து தோன்றியவர்கள் என்று புரிய வைக்க வேண்டும்.
கெட்ட செய்தி கொடுப்பவர்களுக்கு ஒரு வியாபார நோக்கம் உள்ளது; அதை உதறி விட்டு நல்ல செய்திகளை உருவாக்கலாம் வா என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மை என்பது யாரும் பார்க்காத போது நீ செய்யும் செயலில் இருக்கிறது என்பார்கள். நெறி முறைகளை புகட்ட சிறந்த வழி அதற்கு நாம் முன் மாதிரியாகத் திகழ்வதே. எல்லா காலத்திலும் இருட்டு இருந்திருக்கிறது. எல்லா காலத்திலும் வெளிச்சமும் வந்திருக்கிறது.
சூது கவ்வும் என்று அரை குறையாக சொன்னதற்கு பரிகாரமாய், அதன் பின் தருமம் வெல்லும் என்பதையும் சேர்த்துச் சொல்வோம்!
gemba.karthikeyan@gmail.com
No comments:
Post a Comment