நிதி முதலீடு ( financial investment)
நிதி முதலீடு என்பதை முதலீடு என்ற அர்த்தத்தில் அன்றாடம் பயன்படுத்துகிறோம். கடன் பத்திரங்களை (bond, shares, mutual fund, deposits, etc) வாங்குவது நிதி முதலீடு. நிதி முதலீட்டின் மூலம் வட்டி, ஈவுத் தொகை (dividend), முதல் லாபம் (capital gain) ஆகிய வருவாய்களை எதிர்பார்க்கிறோம். நிதி முதலீடு செய்வதால் பொருளாதாரத்தில் உற்பத்தித் திறன் அதிகரிப்பதில்லை. உதாரணமாக என்னிடம் உள்ள பங்கு அல்லது கடன் பத்திரத்தை நீங்கள் வாங்குவதால், நிறுவனத்தின் முதலீட்டு தொகை உயராது. ஆனால் நிறுவனத்தின் பங்கு அல்லது கடன் பத்திரத்தின் உரிமை மட்டுமே என்னிடமிருந்து உங்களுக்கு மாற்றப்படுகிறது.
உண்மை முதலீடு (real/physical investment)
முதல் பொருட்களை வாங்குவதற்கு செய்யப்படும் செலவுகள் உண்மை முதலீடாகும் (இயந்திரங்கள், உற்பத்தி செய்யப்பட பொருட்கள்). பொருளியல் ஆய்வில் உண்மை முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் அது பொருளாதாரத்தின் உற்பத்தி சக்தியை/திறனை அதிகரிக்கிறது. எனவே, பொருளாதார வளரிச்சிக்கு உண்மை முதலீடு வளரவேண்டும். உண்மை முதலீடு வளர, நிதி முதலீட்டு சந்தை சிறப்பாக செயல்படவேண்டும். நிதி முதலீட்டு சந்தை சிறப்பாக இருந்தால் மட்டுமே, உண்மை முதலீடு செய்ய மக்கள் முன்வருவார்கள்.
முதலீடு (investment)
நடப்பு நுகர்வை குறைத்து, அதனால் கிடைக்கும் வளங்களை முதலீடு செய்யவேண்டியுள்ளது. எனவே, ஒரு பொருளாதாரத்தில் முதலீடு அதிகரிக்க வேண்டுமெனில், நடப்பு நுகர்வு குறைய வேண்டும்.
என்னிடம் மீன் வலை இல்லை. நான் தினமும் ஐந்து மணிநேரம் கைகளால் மீன் பிடித்துகொண்டிருந்தேன். நாளொன்றுக்கு ஐந்து மீன்கள் வரை பிடிப்பேன். ஒரு நாள் இரண்டு மீன்களை பிடித்தபிறகு, மீதம் உள்ள நேரத்தில் ஒரு மீன் வலை தயாரிக்க தொடங்கினேன். அடுத்த ஐந்து நாட்களில் ஒரு மீன் வலை செய்துவிட்டேன். இப்போது, நான் நாளொன்றுக்கு மூன்று மீன்கள் நுகர்வதை குறைத்து, அதனால் சேமித்த 15 (3X5=15) மணிநேரத்தை முதலீடு செய்து ஒரு மீன் வலை என்ற முதல் பொருளை தயாரித்தேன்.
வலை என்பதை ஏன் முதல் பொருள் என்று சொல்லவேண்டும்? அது முதலீட்டின் வெளிப்பாடு. மீன் வலை நேரடி நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்பட்டது இல்லை. ஆக, அது உற்பத்தி செய்யப்பட உற்பத்தி காரணி. வலையை கொண்டு நான் மீன் பிடிக்கும் போது தொடர்ந்து பல நாட்கள் வரை எனக்கு அதிக மீன்கள் கிடைக்கும். இது பொருள் முதலினால் எனக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய். இப்போது முதலீடு, முதல் ஆகியவற்றின் தொடர்பும், தன்மைகளும் விளங்கும்.
No comments:
Post a Comment