தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடும் அளவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யும் சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் பெருகியுள்ளது.
ஒரு காலத்தில் கிரிக்கெட் தெரியாவிட்டால் கவுரவக் குறைச்சல் என்று கருதும் நிலை நம் நாட்டில் பரவலாகவே இருந்தது.
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் கணக்கு இல்லையென்றால் அதேபோல் கருதும் நிலை இப்போது உருவாகி வருகிறது. அதுவும், குறைந்த விலை செல்போன்களில் கூட இன்டர்நெட்டும், ரூ.10-க்குக் கூட ‘நெட் பேக்கும்’ வந்து விட்டதால் `பேஸ்புக்’, `டுவிட்டர்’, `வாட்ஸ் ஆப்’ போன்ற சமூக வலைத் தளங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற சேவைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.
இந்தியாவில் தற்போது சுமார் 6.5 கோடி பேர் சமூகவலைத்தளங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த நட்பு வலை, சென்னை, மும்பை போன்ற மாநகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களுக்கும் பரவியுள்ளது.
5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 150-லாவது சமூகவலைத்தள பயன்பாட்டாளர்களின் பங்களிப்பு வெற்றியை நிர்ணயிக்கும் அம்சமாக இருக்கும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
2009 மக்களவை தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 ஆண்டுகாலத்தில் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சித் தலைவர்கள், கணக்குத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மைத்ரேயன்
எம்.பி, கனிமொழி எம்.பி, ஹெலன் டேவிட்சன், கார்த்தி சிதம்பரம், சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் என பல அரசியல் தலைவர்கள் நீண்ட நாட்களாகவே பேஸ்புக் கணக்கு வைத்து ஏராளமான நண்பர்களையும், பாலோயர்களையும் பெற்றுள்ளனர்.
டுவிட்டரிலும் குஷ்பு உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து தகவல் களை ‘அப்டேட்’ செய்து ஆயிரக்கணக்கான பாலோயர்களை பெற்றுள்ளனர்.
கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதியும் பேஸ்புக்கில் உறுப்பினராக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூகவலைத்தளங்களை நிறுவியவர்களை வாழ்த்தி அறிக்கை விடு மளவுக்கு அவர், அவற்றின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். சமீபத்தில், அதிமுக-வில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற தனிப்பிரிவே தொடங்கப்பட்டு, கட்சிகளின் அறிக்கைகள், கொள்கைகளை பரப்பி வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிலநாள்களுக்கு முன்பு பேஸ்புக் பக்கம் தொடங்கியுள்ளது.
புதிய தலைவலி
சமூகவலைத்தளங்களை பொதுமக்கள் மட்டும் பயன்படுத்தி வந்தவரை பிரச் சினையில்லை. கடந்த மக்களவை தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் பெருமளவில் ஈடுபாடு காட்டத் தொடங்கியிருப்பதும், தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தி பல கோடி செலவில் பிரச்சாரங்களை பெருமளவில் செய்து (நிறைய பிரெண்ட்ஸ் மற்றும் பாலோயர்களை பெற்றுத் தருவது…..சில நேரங்களில் போலி பிரெண்ட்ஸ்களை கூட அதிக அளவில் உருவாக்குவதாக புகார் எழுந்துள்ளது) வருவது என புதிய வர்த்தகப் பரிமாணத்தை சமூக வலைத்தளங்கள் பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையம் சுதாரிப்பு…..
குறுகிய காலத்தில், அதிக செலவின்றி பலபேருடன் நெருங்க முடிவதால் சமூகவலைத்தளங்களை அரசியல்வாதிகள் பெரிதும் நம்பத் தொடங்கியுள்ளனர். இப்படி, அசுர சக்தியாக வளர்ந்துவிட்ட சமூக வலைத்தளங்களின் தாக்கத்தை உணர்ந்த தேர்தல் ஆணையம் சுதாரித்து, அவற்றை கட்டுப்படுத்த இம்முறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது எந்த சமூகவலைத்தளங்களில் கணக்கு உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை புகுத்தியுள்ளது.
மேலும், இணையதளம், சமூக வலைத்தளங்களில் அரசியல் விளம் பரங்களைச் செய்யவும் கட்டுப் பாடு களை விதித்துள்ளது. அவற்றில் விளம்பரம் செய்ய வேட்பாளர்கள், கட்சிகள் செலவிடும் தொகை, தேர்தல் செலவுக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆனாலும், அவற்றை எப்படி கணக்கிடுவது என்பதை வரையறுக்க முடியாமல் தேர்தல் ஆணையத்தினர் முடிவெடுக்க முடியாமல் உள்ளனர்.
தமிழக கட்சிகள் அதிருப்தி
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட இது தொடர்பான கேள்விக்கு தேர்தல் துறையினரால் முழுமையாக பதில் கூற முடியவில்லை என்று அரசியல் கட்சியினர் புகார் கூறியிருந்தனர். எனவே, இந்த கட்டுப் பாடுகளெல்லாம் அரசியல் கட்சியினரை சமூகவலைத்தளங் களில் கட்டுக்குள் வைத்திருக்க உதவுமா என்பதை பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment