பாலைவனங்கள் என்றால் தண்ணீரே இருக்காது. அங்கு வாழும் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்யும்? தண்ணீர்த் தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளும்?
உலகில் வாழும் பல உயிரினங்களுக்கும், வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பை இயற்கையே கொடுத்திருக்கிறது. அதில் ஒட்டகமும் ஒன்று. ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் திமில் போன்ற மேட்டுப் பகுதியைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த இடத்தில் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர்ச் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. இதோடு, ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீர் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது. திமிலில் சேமிக்கப்படும் கொழுப்பு உணவுப் பொருட்களின் மூலம் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இந்த வளர்சிதை மாற்றம் மூலம் ஒட்டகத்துக்குத் தானாகவே நீர் கிடைத்துவிடும்.
இதை வைத்தே சில வாரங்கள் வரை நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் தாக்குப்பிடிக்க முடியும். இப்படி மீண்டும் மீண்டும் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் ஒட்டகத்தால் முடியும். உடலுக்குள்ளே நீரைத் தேக்கி வைத்துக்கொள்வதால்தான் ஒட்டகத்தைப் ‘பாலைவனக் கப்பல்’ என்றழைக்கிறார்கள்.
No comments:
Post a Comment