விளையாட்டு வீரர்கள் அரசியலுக்கு வருவதும் தேர்தலில் போட்டியிடுவதும் புதிய விஷயம் இல்லைதான். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த மக்களவைத் தேர்தலில் கால்பந்து கேப்டன், கிரிக்கெட் கேப்டன், ஹாக்கி கேப்டன், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் என பிரபல விளையாட்டு வீரர்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள பூட்டியா கால்பந்து விளையாடிய காலத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்புகளை பெரும்பாலும் தவற விட்டதே இல்லை. இப்போது அரசியல் களத்தில் கிடைத்துள்ள வாய்ப்பையும் அவர் தவற விடமாட்டார் என்ற நம்பிக்கையில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது.
இந்த தேர்தலில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ள மற்றொரு விளையாட்டு வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை சர்வதேச அளவில் நிலை நாட்டியவர்.
இத்தேர்தலில் ரத்தோர் பாஜக சார்பில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் வைக்கும் குறியும் தப்பாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இத்தேர்தல் மூலம் அரசியல் களத்தில் புதிதாக இறங்கியிருப்பவர் கிரிக்கெட் வீரர் முகமது கைப். தனது அபார பீல்டிங் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த ஆல் ரவுண்டர். இப்போதும் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.
2000-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியா வுக்கு வென்று தந்த கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர். இப்போது காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேசத்தின் புல்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் களமிறங்கியுள்ள மிகவும் இளம் வயது (33) விளையாட்டு வீரரும் கைப்தான்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து களமிறக்கியுள்ளது காங்கிரஸ். கடந்த முறை உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசாருதீன், இந்த முறை ராஜஸ்தா னின் டோங் சவாய் மாதோபூர் தொகுதி வேட்பாளராகியுள்ளார்.
மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கி, கிரிக் கெட் விளையாட ஆயுள் கால தடை விதிக்கப்பட்ட அசார், பின்னர் மேல்முறையீடு செய்தார். 2012-ல் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் பல்வேறு சர்ச்சைகள் அசாருதீனை பின்தொடர்ந்த போதிலும், கடந்த முறை அவரது தேர்தல் வெற்றியை அது பாதிக்கவில்லை.
இப்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் ஹாக்கி கேப்டன் திலீப் திர்கே, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் சார்பில் சுந்தர்கர் தொகுயில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஓராம், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஹேமநாத பிஸ்வால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனவே தேர்தல்களம் திர்கேவுக்கு சவால் நிறைந்ததாகவே அமைந்துள்ளது.
ஜிண்டால் ஸ்டீல், பவர் நிறுவனத்தின் தலைவர் என்ற பெரிதும் அறியப்பட்ட நவீன் ஜிண்டால் துப்பாக்கி சுடுதல் வீரரும் கூட. ஸ்டேட் சூட்டிங் எனும் பிரிவில் ஜிண்டால் தேசிய சாதனையாளர். சர்வதேச அளவில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். போலா விளை யாட்டிலும் சிறந்தவரான ஜிண்டால், ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
No comments:
Post a Comment