Monday, 24 March 2014

நாணயங்கள் படுத்தும் பாடு

எங்கே போனாலும் கையில் ஒரு சிறு துணிப்பையோடு போவது என் பழக்கம். பணப்பை, மூக்குக் கண்ணாடி, தூவல் ஆகியவற்றோடு நிறையச் சில்லறை நாணயங்களும் அதில் இருக்கும். பேருந்தில் போகும் போது பயணிகள், 4 ரூபாய் 5 ரூபாய்ச் சீட்டுக்குக் கவலைப் படாமல் 50 ரூபாய், 100 ரூபாய்த் தாள்களை நீட்டுவதையும், நடத்துநர் எல்லாருக்கும் சில்லறை கொடுக்கப் படாதபாடு படுவதையும் பார்த்துச் சரியான சில்லறை கொடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன். கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கடைக்காரர் சில்லறைக்காகப் படும் தொல்லையைக் குறைக்கவும் செய்கிறேன்.
ஆனால், இப்படிச் சில்லறை கொடுக்கும்போது அவர்கள் மகிழ்கிறார்கள். நான் படாதபாடு படுகிறேன்! எது ஒரு ரூபாய், எது இரண்டு ரூபாய், எது ஐம்பது காசு என்று கண்டுபிடிப்பது பெரிய பாடாகிவிடுகிறது. நம் அரசு ஒரே மதிப்புள்ள நாணயத்தை மிகக் குறுகிய கால இடைவெளியில் சிறிதும் பெரிதுமாய் இரண்டு மூன்று வடிவங்களில் ஏன் வெளியிடுகிறது என்பது புரியாத புதிராயிருக்கிறது! ஒரு ரூபாய் நாணயத்தை விட இரண்டு ரூபாய் நாணயம் பெரிதாயிருந்தால் சரி, சிறியதாயிருக்கிறதே. எப்பொழுதும் சிறிதாயிருந்தா லாவது பழக்கப்பட்டுப் பழக்கப் பட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் இரண்டு ரூபாய் நாணயத்திலேயே ஒன்று சிறிதா யிருக்கிறது! சிறிதாயிருக்கும் இரண்டு ரூபாய்க்கும் ஒரு ரூபாய்க்கும் எழுத்தைக் கூர்ந்து பாராமல் வேறுபாடு கண்டுபிடிக்கவே முடியாது. அதை விட மோசம், ஒரு ரூபாயிலும் சிறியது வேறு, பெரியது வேறு! சிறிய ஒரு ரூபாய்க்கும் ஐம்பது காசு நாணயத்துக்கும் வேறுபாடே தெரியவில்லை! பல முறை இரண்டு ரூபாய் என்று ஒரு ரூபாயைக் கொடுப்பதும், ஐம்பது காசுக்கு ஒரு ரூபாயைக் கொடுப்பதும், இதனால் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையே வேண்டாத உராய்வு ஏற்படுவதும் நேரம் வீணடிக்கப்படுவதும் தேவையா? இந்தப் புதிய நாணய அடிப்பு முறைக்கு எந்த உலக்கைக் கொழுந்து காரணம் என்பது தெரியவில்லை!
பழைய கால நாணயங்களில் இந்தக் குழப்பம் ஏற்பட்டதே இல்லை. அந்தக் காலத்தில் ஒரு சல்லி, இரண்டு சல்லி, காலணா, அரையணா, ஓரணா, இரண்டனா, நான்கணா, எட்டணா, ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தன. ஓரணாவுக்குக் குறைந்த மதிப்புடைய நாணயங்கள் செப்பு நாணயங்கள். மற்றையவை நிக்கல் (தொடக்கத்தில் ஓர் உருபா வெள்ளியில் இருந்தது). ஒவ்வொன்றுக்கும் அததற்குரிய தனி வடிவம். இப்பொழுது ஒரு ரூபாயா, இரண்டு ரூபாயா என்று கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பதுபோல் அப்பொழுது பார்க்கத் தேவையே இல்லாதிருந்தது. தொலைவிலிருந்து பார்த்தால்கூடத் தெரிந்துவிடும்.
ஓரணா வட்டமாய், விளிம் பில் வளைவு நெளிவுடன் இருக்கும். இரண்டணா வளைசதுர மாயிருக்கும். மற்றவையெல்லாம் அவை யவற்றின் மதிப்புக்குத் தகுந்தபடி சிறியவும் பெரியவுமாயிருக்கும். எந்த நிலையிலும் குழப்பம் ஏற்பட்டதேயில்லை. நம்மையெல்லாம் குழப்பி வேடிக்கை பார்க்க நம் மக்களாட்சி அரசுக்கு என்ன மன அரிப்போ தெரியவில்லை!
ம.இலெ. தங்கப்பா, சாகித்திய அக்காடமி விருதுபெற்ற எழுத்தாளர்.

No comments:

Post a Comment