இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆச்சரியம் தரும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. வாக்காளர் வாக்களிக்கும் முன்னர் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரைச் சரியாகத் தேர்தெடுத்திருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முதன்முதலாக வரும் தேர்தலில் சோதனை முறையில் சில தொகுதி களில் இந்த வசதி பரிசோதிக்கப்பட உள்ளது.
இந்த வசதியில், ஒரு வாக்காளர் தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கான பட்டனை மின்னணு இயந்திரத்தில் அழுத்தியவுடன் ஒரு பிரிண்ட் அவுட் வெளிவரும். அதில் வேட்பாளரின் வரிசை எண், பெயர், தேர்தல் சின்னம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். எனவே வாக்காளர் தனது வேட்பாளரின் தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் வாக்களிக்கலாம். தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்குத்தான் வாக்கைச் செலுத்துகிறோமா என்பதை வாக்களிக்கும் முன்னரே உறுதிப் படுத்திக்கொள்ள வாக்காளருக்கு உதவுவதே இந்த வசதியின் நோக்கம். தேர்தல் முறைகேட்டைக் கண்டுபிடிக்கவும், தேர்வு முடிவுகளைத் தணிக்கை செய்யவும் இது உதவும்.
தேர்தலில் நோட்டா (NOTA) என்னும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வாக்காளர்கள் 2014 தேர்தலில் முதல்முறையாக மேற்கண்ட வேட்பாளர்களில் ஒருவருமில்லை என வாக்குப் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்கிறது தேர்தல் ஆணையம்.
மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்குக் கீழே இறுதியாக இவர்களில் ஒருவருமில்லை (NOTA) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப் பட்டனை அழுத்துவதன் மூலம் வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவுசெய்ய முடியும். இந்த வசதி, தில்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஷ்கார் மற்றும் மிசோராம் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் அமலாக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் தேர்தல் கண்காணிப்பு செய்தியாளர் என்னும் கருவியையும் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் மது விநியோகம், பணப்பரிமாற்றம், அளவுக்கு அதிகமான தேர்தல் செலவு போன்ற விதிமீறல்களைக் கண்டுபிடிக்க இயலும். இந்தக் கருவி, குற்றம் நடைபெறும் நேரம், இடம், குற்றமிழைக்கும் நபரின் புகைப்படம் போன்றவற்றை உடனடியாக அருகிலுள்ள தேர்தல் ஆணைய கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிவிடும். ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இது செயல்படும்.
தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கும் நபர்களை மத்திய அரசு நியமிக்கிறது. இவர்கள் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைக் கண்காணிப்பார்கள். அனைத்துக் கண்காணிப்பாளர்களின் விவரங்களும் உள்ளூர் செய்தித்தாள்களில் பிரசுரமாகும். எனவே பொதுமக்கள் எளிதில் இவர்களை அணுக இயலும்.
இது போக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவையும் அபிடவிட்டையும் இணையம் வழியாகப் பதிவுசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவின் வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மாற்றுப் பாலினத்தினர் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதிகளை எல்லாம் பயன்படுத்தி இந்தத் தேர்தலில் 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment