சாய் லூன் (Cai Lun), கியாங் (Guiyang) என்னும் ஊரில் கி.பி. 50இல் பிறந்தார். இவர் கி.பி. 75ஆம் ஆண்டு சீனாவின் ஹான்அரச வம்சச் சபையில் அடிமைப் பணியாளனாகச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் சீனாவில் அரசவைப் பணியாளர்களுக்குப் பல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. அதையெல்லாம் மீறித்தான் லூன் அங்கு வேலை பார்த்துவந்தார்.
முதலில் ஏவல் பணிகள் மட்டுமே லூனுக்கு வழங்கப்பட்டு வந்தன. எந்தப் பணியாக இருந்தாலும் தனக்குக் கொடுக்கப் பட்ட வேலைகளை முடிப்பதில் லூன் கண்ணும் கருத்துமாக இருந்தார். வேலையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பால் அவருக்கு வேலையில் உயர்ந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. அரசவை உயர்அதிகாரிகளின் செல்வாக்கும் அவருக்குக் கிடைத்தது. மேலும் மன்னன் ஹீயின் (He) நன்மதிப்பையும் வெகு சீக்கிரத்தில் பெற்றார். அதனால் பதவி உயர்வு அளிக்கப் பட்டுக் கி.பி. 89ஆம் ஆண்டு அரசின் ‘கருவிகள் மற்றும் ஆயுதத் தயாரிப்பு அலுவலகத்தின் பொறுப் பாளராக நியமிக்கப்பட்டார்.
ஹான் அரச வம்சம் முறையான எழுத்து மரபு கொண்டது. அரசு ஆவணங்கள், ஒப்பந்தங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை எழுத்து முறையில் ஆவணப்படுத்தும் வழக்கத்தை அவர்கள் பின்பற்றி வந்தனர். களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிலேட்டு போன்ற சாதனமும், பட்டுத் துணிகளுமே அதுவரை எழுதுவதற்குப் பயன்பட்டு வந்தன. அவை கையாள்வதற்குக் கடினமானதாகவும் பட்டுத்துணிகள் விலையுயர்ந்தவையாகவும் இருந்தன. அதனால் இந்தப் பழைய முறைகளுக்கு மாற்றாகப் புதிய பொருளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருந்தது.
இந்நிலையில் அரச தயாரிப்பு அலுவலகத்தின் பொறுப்பாளரான சாய் லூன், சுய ஆர்வத்தால் புதிய பரிசோதனைகளை முயன்று பார்த்தார். அப்படித்தான், மரத் துகள்களைக்கொண்டு காகிதம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அவர் கண்டுபிடித்தார். இதற்கு ஆதாரமாக இருந்தது குளவி கூடு கட்டும் முறைதான். ஒரு நாள் குளவி மரத்தைத் துகள்களாக்குவதைக் கவனித்தார். அது கூடு கட்டுவதற்காக மரத்தைக் குடைந்து துகள்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. அப்படிச் சேகரித்த துகள்களை உமிழ் நீரில் நனைத்துக் கூடு கட்டியது அந்தக் குளவி. அப்போது எழுதுவதற்காகப் புதிய சாதனம் தயாரிக்கும் வேட்கையில் இருந்த லூனுக்குப் பொறி தட்டியது. இதுபோன்ற மரத் துகள்களையே எழுதுவதற்கான சாதனம் தயாரிக்கும் மூலப் பொருளாக மாற்றலாம் என நினைத்தார்.
சாய் லூன் முதலில் கண்டுபிடித்த தயாரிப்பு முறை, மல்பெர்ரி மரப்பட்டைகளை மூலப்பொருளாகக் கொண்டதாகும். இத்தயாரிப்பு முறையைக் குளவியின் செயல்முறையை அடிப்படையாகக்கொண்டு ஐந்து நிலைகளாகப் பிரித்தார். நசுக்கப்பட்ட மரநார்களை நீரில் ஊறவைத்து, வேகவைத்து, நன்கு ஊறி ஒன்றுடன் ஒன்று அவை கலக்க வேண்டும். பிறகு அக்கலவையில் உள்ள நீரை வடிகட்ட வேண்டும். எஞ்சும் மரத் துகள்களை விரிப்பில் இட வேண்டும். விலங்குகளின் தோல்களால் ஆன விரிப்பில் வைக்கப்பட்ட மரத் துகள்களின் கலவைக்கு நல்ல அழுத்தம் கொடுக்க வேண்டும். இறுதியில் விரிப்பில் உலர்ந்த பொருள்தான் காகிதம் என இன்று நாம் அழைக்கும் எழுதப் பயன்படும் சாதனம். ஆனால் லூன், இந்த முறையை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை.
சாய் லூன் கண்டுபிடித்த இந்தக் காகித வடிவம் முதலில் ச்சீ (chi) என அழைக்கப்பட்டது. அவர் தன் புரவலர்களில் ஒருவரான அரச துணைவி டெங்க்கிடம் கி.பி.102இல் முதலில் காண்பித்தார். ச்சீ மாதிரிகள் அரசி டெங் மூலமாக அப்பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுக் கருத்து கேட்கப்பட்டது.
இறுதியில் செம்மைப்படுத்தப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட காகிதத்தையும் தயாரிப்பு முறைகுறித்தான அறிக்கையையும் கி.பி. 105இல் ஹான் வம்ச அரசர் ஹீயின் அவையில் சாய் லூன் அறிமுகப்படுத்தினார். அவரின் தொழில்நுட்ப முறை அங்கீகரிக்கப்பட்டது. சாய் லூனுக்கு பிரபு அந்தஸ்து அளிக்கப்பட்டது. இன்றைய நவீனத் தொழில்நுட்ப முறைக்குச் சாய் லூன் கண்டுபிடித்த இந்த முறைதான் ஆதாரம்.