பயன் தரக்கூடிய பொருளை அல்லது பணியை உருவாக்குவது உற்பத்தி. பொதுவாக உற்பத்தி என்றால் பல உள்ளீட்டுப் பொருட்களை சேர்த்து புதிய பொருள் அல்லது பணி உருவாவது என்று நினைக்கிறோம். இதில் ஒன்றும் தவறில்லை. பல உள்ளீட்டு பொருட்களைக் கொண்டுதான் சாதாரண காகிதம் முதல் ஆகாய விமானம் வரை உற்பத்தி செய்கிறோம். ஆனால், இது மட்டுமே உற்பத்தி இல்லை.
ஒரு பொருளின் உருமாற்றம்கூட உற்பத்திதான். நெல், அரிசியாகிற போதுதான் அதன் பயன்பாடு கூடுகிறது. துணி சட்டையான பிறகுதான் பயன்பாட்டிற்கு வருகிறது.
ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வதுகூட உற்பத்திதான். ஏன்? நெல் அதிகமாக விளைகின்ற கிராமங்களிலேயே இருந்துவிட்டால், அதனால் என்ன பயன்? கிராமத்தில் உள்ள அனைவரும் எல்லா நெல் உற்பத்தியையும் நுகர முடியுமா? அதே நெல் நகரத்திற்கு வரும்போது அதன் பயன்பாடு கூடுகி
றது, மதிப்பு உயர்கிறது.
எனவே, பயன்பாட்டை கொடுக்கிற எந்த ஒரு நடவடிக்கையும் உற்பத்திதான்.
உற்பத்தி காரணிகள் (Factors of Production)
ஒரு பொருளை உற்பத்தி செய்ய பல பொருட்கள் தேவைப்படுகின்றன. நெல் உற்பத்திக்கு என்னவெல்லாம் தேவை – நிலம், நீர், உழைப்பு, கலப்பை, எருது, கத்தி, நெல் விதை, உரம், பூச்சுக்கொல்லி மருந்து, இன்னும்பல. இதை எல்லாம் இணைத்து உற்பத்தியை நடைமுறைபடுத்த விவசாயி. உற்பத்திக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் நான்கு காரணிகளாக பிரித்து வகைப்படுத்தலாம்.
நிலம், உழைப்பு, முதல், தொழில் முனைவு அல்லது நிறுவனம். இந்த நான்கு காரணிகளும் சேர்ந்துதான் பொருள்/பணி உற்பத்தி செய்கின்றன. தொழில் முனைவு பற்றி ஏற்கெனவே ஒரு முறை பார்த்திருக்கிறோம். இப்போது மற்ற மூன்று பற்றி பார்ப்போம்.
No comments:
Post a Comment