மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் இந்து கடவுளான 'ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி' உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
மதச்சார்பற்ற நாடான இந்தியா வில் வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெங்க ளூரை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் டி.நாராயண மூர்த்தி, மத்திய நிதி அமைச்சகத் திற்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
'தி இந்து' செய்தியாளரிடம் அவர் கூறுகையில், ''கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் 'ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவியின் உருவப்படம் பொறித்த 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார்.'ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயில் வாரியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் 'ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி' நாணயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
மதச்சார்பற்ற நாட்டில் இந்து கடவுளின் படமா?
‘பல்வேறு மொழிகளையும், பல்வேறு மதங்களையும் பின்பற் றும் மக்கள் வாழும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு’ என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுள் உருவம், மத வழிபாட்டு அடையாளங்கள், மதங்களைப் பரப்பும் நிறுவனங்கள் ஆகியவற்றின் படங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.
ஆனால் ' மாதா வைஷ்ணவ தேவி' நாணய விஷயத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை. வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய மத்திய அரசே, இந்து மத கடவுளின் உருவத்தை நாணயத்தில் பொறித்தால் மக்களிடையே பிரிவினை ஏற்படாதா?
நாணயங்களை வெளியிடும் மத்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி சில விதிமுறைகளை வகுத்தது. 'பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் நாணயங் களிலும்,ரூபாய் நோட்டுகளிலும் அதை வெளியிட்ட ஆண்டை கட்டாயம் பதிப்பிக்க வேண்டும்' என்பதே அது.
ஆனால், 'ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி' உருவம் பொறிக்கப்பட்டுள்ள நாணயத்தில், அதை வெளியிட்ட ஆண்டு பொறிக்கப்படவில்லை. எனவே, 'ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி' உருவப்படம் பொறித்த 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்றார்.
நாணயம் பதுக்கல்...
கடந்த ஜனவரி 16-ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட 'ஸ்ரீ வைஷ்ணவ தேவி' உருவப்படம் பொறித்த நாணயம் ஒருபக்கம் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில், மறுபக்கம் பொதுமக்களிடையே மூடநம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.
இந்த நாணயம் தங்கள் கைக்கு வந்ததும், பலர் அதை மீண்டும் புழக்கத்தில் விடாமல் சேகரிக்கத் தொடங்கினர். இந்த நாணயத்தை 'கல்லா பெட்டியில்' வைத்திருந்தால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என நம்புவதால்,கையில் வந்தடையும் 'ஸ்ரீ வைஷ்ணவ தேவி' நாணயத்தை வியாபாரிகள் வெளியே தருவதில்லை.
பொதுமக்களில் சிலரோ இந்த நாணயத்தை கையில் வைத்திருந்தால் பணம் பெருகும்.இது மிகவும் ராசியான நாணயம் எனக் கூறி, அதை சேகரிக்க தொடங்கியுள்ளனர். இதனால், இந்த நாணயங்களின் புழக்கம் குறைந்துவிட்டது. கடந்த ஜனவரி 16-ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி ரூ.10, ரூ.5 நாணயங்கள் அடங்கிய 1000 பைகளை மக்களின் புழக்கத்திற்கு வெளியிட்டது.ஒவ்வொரு பையும் 2500 நாணயங்களை கொண்டது.
No comments:
Post a Comment