மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள அவலாஞ்சி மலையின் உச்சி. அடர்ந்த சோலைக் காடுகளின் இடையே, பவானியின் நதி சிறு ஊற்றாகத் தொடங்கும் தொடக்கப் புள்ளி. வெள்ளி கண்ணாடிப் பாளம் போல் சிறு அருவியாகக் கொட்டிக்கொண்டிருந்தாள் பவானி. அந்தப் பிறப்பிடத்தில் பவானி அம்மன் காட்டுக் கோயிலைக் கட்டியிருந்தார்கள். குளிர்ந்த தண்ணீரில் தலையை நனைத்து, கையில் அள்ளிப் பருக, உடல் நனைந்து, உள்ளம் இனித்தது.
அநேக முறை காடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் தென்னிந்திய நதிகளுக்கு ஆதாரமான மலை உச்சிகளில் இருக்கும் சோலைக் காடுகள் (Shola forest), புல்வெளிக் காடுகளுக்கு (Grass lands) பயணம் செல்ல வேண்டும் என்கிற அதிதீவிர ஆசை சமீபத்தில்தான் நிறைவேறியது. அதிதீவிர ஆசை என்று இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அக்காடுகளைப் பற்றிச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மூலம் ஏற்கெனவே நான் தெரிந்துகொண்ட தகவல்கள்தான்.
ஆங்கிலேயர் நமது மலை வாசஸ்தலங்களில் காலூன்றிய பின்பு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் உச்சியில் சோலைக் காடுகளுக்கு இடையிடையே இருக்கும் புல்வெளிக் காடுகளை விநோதமாகப் பார்த்தார்கள். அன்றைய ஆங்கிலேயச் சூழலியாளர்களுக்கும் புல்வெளிக் காடுகளின் உயிர் சூழல் புரியவில்லை.
அவர்களில் சிலர் புல்வெளிக் காடுகளைப் பயன்பாடற்ற நிலம் (Waste land) என்றும், இன்னும் சிலர் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளுக்காக உருவாக்கிய புல்வெளிகள் என்றும் முடிவுக்கு வந்தனர். புல்வெளிக் காடுகளை அழித்துத் தங்களது எரிபொருள் தேவைக்கான வாட்டில் (Wattle tree) எனப்படும் சீகை மரம், தேவதாரு (Pine), தைல மரம் (Eucalyptus), சாம்பிராணி மரம் (Cyprus tree) ஆகியவற்றை நட்டார்கள்.
தொடர்ந்த அவலம்
நாடு விடுதலை அடைந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும்கூட, நமது வனத்துறையும் மேற்கண்ட மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தது. இமயமலை தொடர், விந்திய மலை தொடர், மேற்கு, கிழக்கு மலை தொடர் உள்ளிட்டவற்றில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் இருக்கும் சோலைக் காடுகளின் ஊடேயும், புல்வெளிக் காடுகளை அழித்தும் இம்மரங்கள் நடப்பட்டன. நட்ட வேகத்தில் இவை அதிவேகமாக வளர்ந்து, பரவின. இதற்குக் காரணம், அவை நம் இயல் தாவரங்கள் இல்லை என்பதுதான். அயல் தாவரங்களுக்கு, நம் மண்ணில் இயற்கை எதிரிகள் குறைவு.
மேலும் இம்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவு ஆதாரம் இல்லை என்பதால் பெரும் பாலான பறவைகள், விலங்குகள் இம்மரங்களை நாடுவதில்லை. பறவைகளின் வருகை குறைந்ததால் சோலைக் காடுகளின் பாரம்பரிய மரங்களான அத்தி, நீர்மத்தி, வேலம், புங்கன், நாவல், கருப்பாலை, இலுப்பை ஆகிய மரங்களின் இயல்பான இனப்பெருக்கமும் மட்டுப்பட்டது. அதற்குக் காரணம், பறவைகள் உண்ட பிறகு, அவற்றின் எச்சம் வழியாக வெளியேறும் விதையிலிருந்தே ஆரோக்கியமான கன்று முளைக்கும். ஒரு கட்டத்தில் சோலைக் காடுகள் சீர்குலைந்து அழியத் தொடங்கின.
சீகை உள்ளிட்ட அயல் மரங்கள் வளர்ந்திருக்கும் பகுதியில் வேறு மரங்கள், புல்வெளிகளை வளரப் பெரிதாக அவை அனுமதிக்காது. அவற்றின் மரபணு சார்ந்த தற்காப்பு தகவமைப்பு அப்படி. சீகை மரம், தைல மரம் போன்றவை விதைகளைக் காற்றில் வேகமாகப் பரவச் செய்து, இனவிருத்தி செய்வதில் திறன்மிக்கவை. நிலத்தடி நீரையும் அதிகமாக உறிஞ்சுபவை. மேற்கண்ட பாதிப்புகள் வெளியே தெரியாத நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டில்தான் இவை ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சூழலியாளர்களும் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்து எடுத்துரைத்தார்கள்.
விழித்துக்கொண்டார்கள்!
அதற்குப் பிறகு அவசரமாக விழித்துக்கொண்டது தமிழக வனத்துறை. 2011ஆம் ஆண்டு தொடங்கி அயல் மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. முதல் கட்டமாக மலைப் பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் சீகை மரங்களை வனத்துறை அப்புறப்படுத்திவருகிறது. தமிழகத்தில் அவலாஞ்சி, மேல் பவானி சோலைக் காடுகளில் இப்பணி தற்போது நடந்துவருகிறது.
சோலைக் காடுகளுக்கு இவை ஒரு பக்கம் தொந்தரவு எனில், இன்னொரு பக்கம் யூபடோரியம் (eupatorium), உன்னிச் செடி (Lantana camara) போன்று ஆங்கிலேயர் காலத்தில் அழகுக்காகக் கொண்டுவரப்பட்ட அந்நியப் புதர் மலர்ச் செடிகள் பேராபத்தை உருவாக்கிவருகின்றன. இவற்றை அழிப்பது குறித்த செயல்திட்டம் இதுவரை யோசிக்கப்படவில்லை. உன்னிச் செடியை மட்டும் மரப்பொருள் தொழில் மற்றும் மருந்து உற்பத்திக்குப் பயன்படுத்தச் சிலர் முயற்சித்தனர். ஆனால், அதுவும் முழு வெற்றியைப் பெறவில்லை.
சோலையும் புல்வெளியும் எதற்கு?
சோலையும் புல்வெளியும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை. புல்வெளிக் காடுகள் இல்லை எனில், சோலைக் காடுகள் இல்லை. புல்வெளிக் காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான இயற்கையின் சங்கிலிக் கண்ணிகளில் ஒன்று.
சமவெளிப் பகுதிகளைவிட மலை உச்சிகளில் மழைப் பொழிவு பல மடங்கு அதிகம். மழைப் பொழிவின்போது மலை உச்சிகளில் இருந்து கட்டற்றுப் பாயும் வெள்ளப் பெருக்கில் இருந்து, சமவெளிகளைக் காக்கும் அரண்கள் புல்வெளிக் காடுகளே. புல்வெளிக் காடுகளின் மண்ணுடன் இயைந்த வேர்ப் பகுதிகள் மழைப் பொழிவின் மொத்த நீரையும் சிந்தாமல் சிதறாமல் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை .
அங்குச் சேகரமாகும் நீர் படிப்படியாகக் கீழே கசிந்து இடையிடையே இருக்கும் அடர்ந்த சோலைக் காடுகளுக்குத் தண்ணீர் ஆதாரமாகத் திகழ்கின்றன. சோலைக் காடுகளுக்கு மட்டுமே உரித்தான செடி, கொடி, மரங்களின் வேர்ப் பகுதியின் கடற்பஞ்சு போன்ற அமைப்பு, நீரை உறிஞ்சி தேவைக்குப் போக மீதியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிடுகின்றன. தூய்மையான எதிர்த் திசை சவ்வூடு பரவல் முறை இது.
இதுவே ஆயிரக்கணக்கான சிற்றோடைகளாகவும் அருவிகளாகவும் மலையிடுக்குகளில் இருந்து வழிந்தோடி ஆறுகளாக உருப்பெறு கின்றன. நமது வாழ்வாதாரங்களான காவிரி, பவானி, பாலாறு, நொய்யல், கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி என எல்லாத் தென்னிந்திய நதிகளும் இப்படித்தான் உருவாகின்றன. அவலாஞ்சி மலை உச்சியில் நீர் ஊற்றுகளிலும் புல்வெளிக் காடுகளிலும் மேற்கண்ட அற்புதச் செயல்முறையைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. சோலைக் காடுகளின் அழிவுதான், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தென்னிந்திய நதிகளின் வறட்சிக்கு முக்கியக் காரணம் என்பது புரிந்தது.
ஊர் திரும்புகையில் மேட்டுப்பாளையம் நகரத்தை அடுத்த ஓர் இடத்தில் அவலாஞ்சியில் சிறியதாகத் தோன்றிய பவானி ஆற்றுத் தீரத்தைக் காண முடிந்தது. ஏராளமான கழிவுகளுடன் கறுப்பாகச் சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்தது. மனசு கனத்தது, கண்கள் பனித்தன.
No comments:
Post a Comment