Showing posts with label 2. Show all posts
Showing posts with label 2. Show all posts

Wednesday, 23 October 2013

2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்க முடிவு


இப்போதைக்கு வராது முதுகலை ஆசிரியர் தேர்வுப பட்டியல்

ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது. இதனால், இறுதி தேர்வுப் பட்டியல், இப்போதைக்கு வராது என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வு நடந்தது. அடுத்தடுத்த பணிகளை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறி, ஐகோர்ட், மதுரை கிளையில், ஒரு தேர்வர், வழக்கு தொடர்ந்தார். தமிழ் பாடத்திற்கு, மறு தேர்வை நடத்த, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறு தேர்வை நடத்துவதா, அல்லது கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வதா என, இதுவரை, டி.ஆர்.பி., முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒரு பணிக்கு, ஒருவர் வீதம், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று துவங்கியது. மாநிலம் முழுவதும், 14 மையங்களில், நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இன்றும், தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், வரலாறு பாடத்தில், 111 மதிப்பெண் எடுத்தும், தமக்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தை, டி.ஆர்.பி., அனுப்பவில்லை என்றும், இதே மதிப்பெண் எடுத்த மற்றவர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, ஜான் ஆபிரகாம் என்பவர், ஐகோர்ட், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், விலங்கியல் பாடம் சம்பந்தமாகவும், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, நாகமுத்து, ஒவ்வொரு பாடத்திலும், கடைசி, "கட்ஆப்' மதிப்பெண் பெற்றவர் வரை, அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன் பட்டியலை, கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். இதன் காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டிய நிலைக்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது குறித்த அட்டவணையை, விரைவில் தயாரிக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. எனவே, இப்போதைக்கு, தேர்வுப் பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

80 சதவீதம் பேர் நியமனம்:

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் தாமதத்தால், மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்காமல் இருக்க, 2,645 முதுகலை ஆசிரியர்களும், 3,900 பட்டதாரி ஆசிரியர்களும், தற்காலிக அடிப்படையில், பணி நியமனம் செய்ய, கடந்த, 7ம் தேதி, முதல்வர் உத்தரவிட்டார். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, ""80 சதவீத ஆசிரியர், பணியில் சேர்ந்துவிட்டனர். மீதம் உள்ள, 20 சதவீத ஆசிரியர்களும், இந்த வார இறுதிக்குள் சேர்ந்துவிடுவர்,'' என்றார். "ரெகுலர்' முதுகலை ஆசிரியர் நியமனம் தள்ளிப்போகும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனம், மாணவர்களுக்கு, பெரிதும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.