Showing posts with label 138 போலீசார். Show all posts
Showing posts with label 138 போலீசார். Show all posts

Tuesday, 23 April 2013

17,138 போலீசார், 1,091 எஸ்.ஐ.,க்கள் நியமனம்: முதல்வர் ஜெ., அறிவிப்பு



காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில், 19 ஆயிரத்து, 526 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதுடன், காவல் நிர்வாகத்தை வலுப்படுத்த, 30 டி.எஸ்.பி.,க்கள் புதிதாக நியமிக்கப்படுவர். 

சட்டசபையில், காவல் துறை மானியம் மீதான விவாத முடிவில், காவல் துறை தொடர்பான, 67 அறிவிப்புகளை முதல்வர், ஜெயலலிதா வெளியிட்டார். அதன் விவரம்: காவல் துறை, தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக, இந்த ஆண்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 17 ஆயிரத்து 138 காவலர்கள், 1,091 எஸ்..,க் கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் மற்றும், 292 சிறைக் காவலர்கள் தேர்வு செய்யப்படுவர். இது தவிர, டி.எஸ்.பி., நிலை யில், போதுமான அதிகாரிகள் இல்லாததால், அந்த பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், இந்தாண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், 30 டி.எஸ்.பி.,க்கள், பணி நியமனம் செய்யப்படுவர். தமிழக சிறப்பு காவலர் இளைஞர் படை தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல்கட்டமாக, 10 ஆயிரத்து, 500 இளைஞர்கள், இப்படைக்கு தேர்வு செய்யப்படுவர். காவலர்களுக்கான பயிற்சி காலம், எட்டு மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காவலர் பயிற்சிப் பள்ளிகள், பயிற்சி மையங்களில் கட்டுமான வசதிகள், 38 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது.

4,800 குடியிருப்புகள்: காவலர்களின் சேவையை கருத்தில் கொண்டு, அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கு அருகில், குடியிருப்பு தேவைகளை, 100 சதவீதம் பூர்த்தி செய்ய, குடியிருப்புகளுக்கு தேவையான நிலம் கண்டறியப்பட்டு வருகிறது. தேசிய சராசரியை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக, 49 ஆயிரத்து, 863 காவலர்களுக்கு, குடியிருப்பு வசதிகள் தமிழகத்தில் உள்ளன. மேலும், 6,078 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டில், 4,800 குடியிருப்புகள், 575 கோடி ரூபாய் செலவில் அனுமதிக்கப்படும். உங்கள் சொந்த இல்ல திட்ட பயனாளிகள், பல்வேறு இடங்களில் பணியாற்றும் போலீசார், பயன் பெறுவதற்காக, மேலக் கோட்டையூரில், 10 ஏக்கர் பரப்பில், உயர் தரம் பொருந்திய உறைவிடப் பள்ளி துவங்கப்படும்.

போலீசாருக்கு சலுகைகள்: காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, தற்போது வழங்கப்படும் இடர்படி, 300 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும், டி.எஸ்.பி.,- .டி.எஸ்.பி.,க்களுக்கு இடர்படி, 350 லிருந்து, 450 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. போக்குவரத்து போலீசாருக் கான சீருடைப்படி, 250 ரூபாயில் இருந்து 350 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மற்றும், காவல் துறை பணியாளர்களுக்கான சீருடை தையல் கட்டணம், 250லிருந்து, 450 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. போலீசாருக்கான உணவுப்படி, சென்னையில், 100 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாகவும், மற்ற பகுதிகளில், 75 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. டி.எஸ்.பி.,க்கள் மற்றும் .டி. எஸ்.பி.,க்களுக்கு காப்பீட்டுத் தொகை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. காவல் சிறப்பு அங்காடி திட்டம், வனத் துறை சீருடை பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. மேலும், காவல் சிறப்பு அங்காடிகள், 45 இடங்களில் அமைக்கப்படுகிறது. 200 ஊரக காவல் நிலையங்களில், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்கள் மற்றும், காவல் படை தலைமையகங்களில், மகளிர் காவலர்களின் வசதிக்காக, குழந்தைகள் நல காப்பகங்கள் அமைக்கப்படுகிறது.

இதர அறிவிப்புகள்

* கடலோர காவல் படையை வலுப்படுத்த, 30 கடல் சார் காவல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
* மோப்ப நாய்களுக்கான உணவுக் கட்டணம், நாள் ஒன்றிற்கு, 85 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* தமிழகத்தில் உள்ள, 60 புறக்காவல் நிலையங்களில், ஏற்கனவே, 24 புறக்காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, இந்தாண்டு மேலும், 12 புறக்காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.
* காவல் துறையில், தொலை தொடர்பு வசதிகளை மேம்படுத்த, 3.17 கோடியில், உயர் கைபேசி கருவிகள் வாங்கப்படும்.
* அனைத்து காவல் கமிஷனரகங்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளில், காவல் உணவகங்கள் அமைக்கப்படுகின்றன.
* தமிழகத்தில், 500 போலீஸ் நிலையங்களில், 20 கோடி ரூபாயில், சூரிய சக்தியால் இயங்கும் மின்சார அமைப்புகள் பொருத்தப்படும்.
* நுண்ணறிவுப் பிரிவின் பல்வேறு பிரிவுகளில், பணியாற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, ஸ்மார்ட் போன்கள் மற்றும், மாநில நுண்ணறிவு சிறப்பு பிரிவுகளுக்கு, 50 புதிய தலைமுறை கம்ப்யூட்டர்களும் வழங்கப்படும்