Showing posts with label வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு. Show all posts
Showing posts with label வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு. Show all posts

Thursday, 10 October 2013

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு


பொருள்களின் வேதியியல் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில், அவற்றை கணினி மூலம் உருவகப்படுத்தும் "சிமுலேஷன்' முறையைக் கண்டறிந்த மார்ட்டின் கார்ப்லஸ் (83), மைக்கேல் லெவிட் (66), ஏரியே வார்ஷெல் (72) ஆகிய மூன்று மூலக்கூறு விஞ்ஞானிகள், வேதியியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து நோபல் பரிசுக்கான நடுவர் குழு தெரிவிக்கும்போது, ""சிக்கலான வேதியியல் செயல்முறைகளை, பல அடுக்கு மாதிரிகள் மூலம் எளிமைப்படுத்தி விளக்கும் செயல்முறையை உருவாக்கியதற்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இவர்கள் உருவாக்கியுள்ள செயல்முறை, மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன. நவீன வேதியியலுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று.

இந்தச் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு அனைத்து வேதியியல் துறைகளும் பயன் பெறும் என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பின் சிறப்பம்சம்.

சூரியத் தகடுகளை திறனேற்றம் செய்வது, வாகனங்களின் செயல்திறனை அதிகரிப்பது, மருந்துகள் தயாரிப்பது போன்ற பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் வேதியியல் விஞ்ஞானிகளுக்கு இவர்களது கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமையும்'' என்று நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிசுத் தொகையான 12.5 லட்சம் டாலரை (சுமார் ரூ.7.7 கோடி) மூவரும் பகிர்ந்து கொள்வார்கள். டிசம்பர் 10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் பாரம்பரிய முறைப்படி நடைபெறவிருக்கும் விழாவில், இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படும்.

மார்ட்டின் கார்ப்லஸ் (83)

ஆஸ்திரியாவில் பிறந்தவரான இவர், அமெரிக்கா, ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், ஆஸ்திரியாவின் ஸ்டிராஸ்பர்க் பல்கலைக்கழகத்திலுள்ள உயிரி இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

மைக்கேல் லெவிட் (66)

அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உயிரி இயற்பியல் விஞ்ஞானியாகவும், கட்டமைப்பு உயிரியல் விரிவுரையாளராகவும் பணியாற்றி வரும் லெவிட், அமெரிக்க - பிரிட்டன் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். மரபணு மற்றும் புரதங்களின் மூலக்கூறு இயக்கங்களை முதல்முறையாக கணினி மூலம் உருவகப்படுத்தியவர் இவர்.

எரியே வார்ஷல்(72)

இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள இவர், இஸ்ரேலில் பிறந்தவர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரையாளராகவும், இஸ்ரேலிலுள்ள வெய்ஸ்மான் அறிவியல் கழகத்தின் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்திலும் பணியாற்றி வருகிறார்.