Showing posts with label ஐ.ஏ.எஸ்.. Show all posts
Showing posts with label ஐ.ஏ.எஸ்.. Show all posts

Sunday, 21 April 2013

உண்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு: ஐ.ஏ.எஸ்., ஆக இதுவே வாய்ப்பாடு'


"உண்மை, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய மூன்றும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பாடு,'' என, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பேசினார்.

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் "சக்தி யுகம்' எனும் உற்சாகப் பேச்சு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பாலாஜி சரவணன் "சிவில் சர்வீசஸ்' எனும் தலைப்பில் பேசியதாவது:


சிவில் சர்வீசஸ் துறை சமுதாயத்துக்கு சேவை செய்யும் வாய்ப்பையும், ஓர் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. நிம்மதியான வாழ்க்கை என்பது மனதில் உருவாகும் திருப்தியை பொறுத்தது; அது சமுதாயத்துக்கு செய்யும் சேவையின் அடிப்படையில் அமையும். இத்துறையானது, பொறுப்புகளை அதிகரித்து உயரிய அந்தஸ்தை வழங்குகிறது.இளைஞர்கள் விடா முயற்சியுடன், கடுமையாக உழைத்தால் எளிதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உருவாகலாம். வாழ்வில் வெற்றி, இலக்கில் வெற்றி என இரண்டு வகை உள்ளன. வாழ்வில் வெற்றி என்பதைவிட இலக்கில் வெற்றி என்பதே சுவாரசியமானது. உண்மை, அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு இவையே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வாய்ப்பாடு.


நாள்தோறும் பத்திரிகைகளையும், 6-10 ம் வகுப்பு வரையுள்ள சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களையும் படிப்பது நல்லது. கிராமப்புற மாணவர்கள், தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களும் இத்துறையில் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.