Thursday, 10 April 2014

உணவு தானியங்கள் சரிவர பாதுகாக்கப்படுவதில்லை: கிடங்குகள் பற்றாக்குறை - அசோசேம் அறிக்கை

இந்தியாவில் விளையும் உணவு தானியங்களில் 40 சதவீதம் சரியான விதத்தில் பாதுகாக்கப்படுவதில்லை என்று தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பான அசோசேம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான கிடங்குகளில் பாதுகாக்கப்படும் உணவு தானியங்களில் 40 சதவீதம் உரிய வகையில் பாதுகாக்கப்படவில்லை. இவற்றை பாதுகாப்பதற்கு தொழில் ரீதியிலான அணுகு முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. அரசுக் கிடங்குகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இதனால் 3.5 கோடி டன் தானியங்கள் உரிய வகையில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
நாட்டிலுள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளில் 70 சதவீதம் அரசு கிடங்கு களாகும். இவற்றில் 11 கோடி டன் உணவு தானியங்கள் சேமிக்கப்படுகின்றன. 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் கூடுததலாக 3.5 கோடி டன் தானியங்களை சேமிப்பதற்குத் தேவையான கிடங்குகள் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
அறுவடை காலங்களில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான உணவு தானியங்கள் உரிய வகையில் பாதுகாத்து வைக்கப்படுவதில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தையில் உணவுப் பொருள்கள் தாராளமாக கிடைப்பதற்கு உணவு தானிய பாதுகாப்பு கிடங்குகள் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட வேண்டும். இவை நவீன வசதியுடன் கூடியதாக இருத்தல் அவசியம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
உரிய வகையில் உணவு தானியங்கள் பாதுகாக்கப்படாதது, சரியான வகையில் இவற்றைக் கையாளாதது உள்ளிட்ட காரணங்களால் 30 சதவீத உணவு தானியங்கள் வீணாவதாக அசோசேம் இயக்குநர் ஜெனரல் டி.எஸ். ரவாத் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு உணவு தானிய மூட்டையும் அது பதப்படுத்துவதற்கு முன்பு குறைந்தபட்சம் 6 தடவையாவது திறக்கப்படுகின்றன. இது சரியான நடவடிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக உணவு தானிய கிடங்குகள் கட்டப்படும் அதேவேளையில் ஏற்கெனவே உள்ள கிடங்குகளை பழுது பார்த்து அவற்றை நவீனமயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள கிடங்குகளில் 12 சதவீதம் மட்டுமே வேளாண் விளைபொருள்களை சேமித்து வைக்கின்றன. மற்றவை தொழில்துறை சார்ந்த கிடங்குகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிடங்குகளின் தேவை ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சியை எட்டி வருகிறது. 2015-16-ம் ஆண்டில் இத்துறை ரூ. 35 ஆயிரம் கோடி சந்தை வாய்ப்பாக இருக்கும் என்று அசோசேம் அறிக்கை தெரிவிக்கிறது.
வேளாண் மட்டுமின்றி அனைத்துத் துறையின் வளர்ச்சிக்கு மற்றும் வர்த்தகத்துக்கு கிடங்குகள் அவசிய மானதாகும். மேலும் வேளாண் உணவு சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதில் கிடங்குகளின் பங்கு மிக முக்கியமானது. உணவு கிடங்குகள் அதிகம் இருப்பதன் மூலம்தான் விலைவாசியைக் கட்டு்க்குள் வைக்க முடியும். பொருள்களும் மக்களுக்கு இடையூறின்றி கிடைக்கும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
போதுமான எண்ணிக்கையில் கிடங்குகள் இருந்தால்தான் அறுவடை அல்லாத பிற காலங்களில் உணவு தானியங்களை சேமித்து வைக்க முடியும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment