மனிதனின் மகிழ்ச்சிக்காக ஜல்லிக்கட்டு என்ற பெயரில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரும் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
“பொழுதுபோக்குக்காக பயன் படுத்தப்படும் விலங்குகளை தடை செய்யும் பட்டியலில் காளையும் உள்ளது. இதை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டை அனுமதிக்கலாம்” என மத்திய விலங்குகள் வாரிய செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி முன்வைத்த வாதம்: “ஜல்லிக்கட்டு நடத்த விதிமுறைகளை வகுத்து, 2009-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த விதிமுறைகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவதால், ஆயிரக்கணக்கில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் 500 ஆக குறைந்து விட்டன.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை. வாடிவாசல் வழியாக வெளியேறும்போது தள்ளிவிடப்படுகின்றன. இன்னும் கடுமையான விதிமுறைகள் விதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டு பாரம்பரிய நிகழ்ச்சி என்பதால் தடை விதிக்கக் கூடாது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மனிதனின் மகிழ்ச்சிக்காக விலங்குகளை துன்புறுத்தும் காலம் மலையேறி விட்டது. அதை ஏற்க முடியாது” என்று கண்டிப்புடன் கூறினர்.தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் துவிவேதி, “விலங்குகள் வதை தடைச் சட்டத்தில், காளைகளின் கொம்புகளை சீவுதல், ஆண்மைத் தன்மை அகற்றுதல், முத்திரை குத்துதல், மூக்கணாங்கயிறு கட்டுதல் ஆகியவை அனுமதிக்கப் பட்டுள்ளன.
உணவுக்காக விலங்கு களை கொல்வதும் அனுமதிக்கப் பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் சிறிய அளவில் காளைகள் துன்புறுத்தப்படுவது ஏற்கக் கூடியதே” என்றார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அந்தச் சட்டம் மனிதர்களுக்காக இயற்றப்பட்டது. நாங்கள் விலங்குகளின் பார்வையில் பார்க்கிறோம்” என்று கருத்து தெரிவித்தனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment