ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்ஞான இருளைப் போக்க ஆன்மிக வெளிச்சம் பாய்ச்சியவர் ஸ்ரீராமானுஜர். பெருமாளின் ஆதிசேசன் அவதாரமாகப் போற்றப்படும் மகான் அவர். தன் வாழ்நாள் முழுவதும் தம்முடைய குருமார்களைப் போற்றிய அற்புதமான பிறவி அவர்.
ராமானுஜரின் இளமைக் கால குருவாக முதலில் அமைந்தவர் யாதவ பிரகாசர். கல்வி, கேள்வி ஞானங்களில் தேர்ச்சிபெற்றவரான யாதவ பிரகாசர் அளித்த சில அத்வைத விளக்கங்களில் ராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. பெருமாளின் ஞானத்தை இயல்பிலேயே பெற்றிருந்த ராமானுஜருக்கு தன்னுடைய குருவின் பொருந்தாத விளக்கங்கள் கேட்டுக் கண்ணீர் பெருகியது.
வாதத்தில் குருவை மிஞ்சிய சீடனாக இருக்கும் ராமானுஜரால் தனக்கு சிறுமையே ஏற்படும் என்று எண்ணிய யாதவ பிரகாசர், அவரையில் கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்துவிடும் எண்ணத்தோடு, காசிக்கு சீடர்களுடன் பயணமானார். காசியை நெருங்கிவிட்ட நேரத்தில் ராமானுஜரின் தம்பி கோவிந்தன் குருவின் திட்டத்தைக் கூறி ராமானுஜரைக் காப்பாற்றுகிறார். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே இரவில் பெருமாளின் கருணையால் வந்து சேர்கிறார் ராமானுஜர்.
இளம் வயதில் ராமானுஜருக்கு இறைவனால் கிடைத்த அருள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. ராமானுஜரைக் கொல்வதற்குத் துணிந்த யாதவ பிரகாசரே பின்னாளில் அவரின் சீடராகிறார். பெரும் பண்டிதரான யக்ஞமூர்த்தி பதினேழு நாள் ராமானுஜரோடு தர்க்க வாதங்களில் ஈடுபடுகிறார். பதினெட்டாம் நாள் வாதம் புரிவதற்குச் சென்ற ராமானுஜரின் கால்களில் சரணைந்து, இனி நான் வாதம் செய்யப்போவதில்லை… என்னை உங்களின் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பணிவோடு கேட்கிறார். அவருக்கு அருளாளப் பெருமானார் என்னும் நாமத்தை சூட்டி ஆட்கொள்கிறார் ராமானுஜர்.
குருவின் பொருட்டு பெருமாளிடம் சில சமயங்களில் ஊடலும் புரிந்துள்ளார் ராமானுஜர். ஆளவந்தாரைக் காண ஆவலுடன் காடு, மலை கடந்து பெரியநம்பியுடன் பயணப்படும் ராமானுஜர் திருவரங்கம் சென்று சேர்வதற்குள், ஆளவந்தார் இறைவனடி சேர்ந்துவிடுகிறார்.
திருவரங்கப் பெருமானைத் தரிசித்துச் செல்லும்படி ராமானுஜரிடம் ஆளவந்தாரின் சீடர்கள் கூறுகின்றனர். அதற்கு ராமானுஜர், “பெரும் மகானாகிய ஆளவந்தாரைக் கவர்ந்துவிட்ட திருவரங்கனை நான் சேவிக்கமாட்டேன்” என்று காஞ்சிக்கு புறப்பட்டுவிடுகிறார் ராமானுஜர்.
சாதி ஏற்றத்தாழ்வை ராமானுஜர் கடுமையாக எதிர்த்தார். சாதி ஏற்றத்தாழ்வை தம்முடைய மனைவி கொண்டிருந்தார் என்பதே அவரின் துறவறத்துக்கு ஒரு காரணம். அவரின் தாம்பத்ய வாழ்வில் மூன்று முறை ராமானுஜரின் மனைவி இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்துகிறார்.
திருக்கச்சி நம்பிகளுக்கு வீட்டின் நடையிலேயே உணவு அளிக்கிறார் ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள். அதன் பின், வைணவர் ஒருவருக்கு ஆகாரம் அளிக்குமாறு கூற வீட்டில் ஒன்றுமில்லை என்று பொய் சொல்லிவிடுகிறார். ராமானுஜரின் குரு பத்தினியாருடன் சேர்ந்து கிணற்றிலிருந்து நீர் அள்ளும் போது தகாத சொற்கள் கூறி அதன்காரணமாக அவர்கள் வீட்டை விட்டே வெளியேறுவதற்குக் காரணமாயிருக்கிறார். இந்த மூன்று நிகழ்வுகள் அவரை துறவறத்துக்கு தூண்டுவதாக அமைந்தன.
பெரிய நம்பிகள் என அழைக்கப்படும் மகாபூரணர், திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருமலையாண்டான் எனப்படும் மாலாதரர் என்னும் ஐவரும் ராமானுஜரின் குரு பீடத்தை அலங்கரித்தவர்கள்.
ராமானுஜர் ஆன்மிக உலகுக்கு அளித்திருக்கும் மிகப் பெரிய கைங்கரியம் பாஷ்யம். பிரம்ம சூத்திரத்துக்கான விளக்கம் இது. இதைச் செய்வதற்கு அந்த சூத்திரத்திற்கான கிரந்தம் வேண்டும்.  பாதராயண மகரிஷி படைத்த கிரந்தத்தைத் தேடி காஷ்ருக்கு யாத்திரை போகின்றனர் ராமானுஜரும் அவரின் சீடர் கூரத்தாழ்வாரும். பல அற்புதங்களுக்குப் பிறகு ராமானுஜர் பிரம்ம சூத்திரத்தின் விளக்கத்தைக் கூற கூரத்தாழ்வார் எழுத, பாஷ்யம் உண்டாகிறது.
வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ரங்க கத்யம், வைகுண்ட கத்யம், நித்யம் ஆகிய நூல்களையும் ராமானுஜர் படைக்கிறார்.
பெருமாள், நம்பிகளிடம் ராமானுஜருக்குச் சொல்லுமாறு கூறிய ஆறு விஷயங்கள்
உலகத்தின் காரணராகிய நாமே முழுமுதற் கடவுள்.
ஜீவாத்மாவிலிருந்து வேறுபட்டவனே பரமாத்மா.
மோட்சத்தை அடைய விரும்புபவர்களுக்கு உபாயமாவது சரணாகதியே.
என் அடியவர்கள் என்னை நினைவில் கொள்ளாவிடினும் அந்திம காலத்தில் அவர்களுக்கு முக்தி அளிப்பேன்.
உடலை விட்டு உயிர் நீங்கிய பின் என் பக்தர்களுக்கு பரமபதத்தையே அளிக்கிறேன்.
நற்குணங்கள் அனைத்தும் நிரம்பப்பெற்ற மகானாகிய பெரிய நம்பிகளையே ராமானுஜர் ஆச்சார்யராகப் பற்றக் கடவது.
இந்த ஆறு கட்டளைகளையும் தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார் ராமானுஜர். இதன் வெளிப்பாடே, தம்முடைய குருவான திருக்கோட்டு நம்பியிடம் தாம் கற்ற நாராயண மந்திரத்தை எல்லோரும் அறிய கோபுரத்தின் மேல் நின்று கூறியது. பரிபூரணமான பக்தியும் சரணாகதியுமே இறைவனை அடைவதற்கான எளிய வழி என்பதே ராமானுஜரின் வாக்கு.