ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐஆர்என்எஸ்எஸ்-1பி செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் கட்டமைப்பு (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்) என்ற செயல் முறை திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக, 7 வழிகாட்டும் (நேவிகேஷன்) செயற்கைக்கோள் களை இஸ்ரோ அனுப்ப உள்ளது. அதன் முதல்படியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ செயற்கைக்கோள் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான 50 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) மாலை 5.14 மணிக்கு திட்டமிட்டபடி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக் கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் புகையை உமிழ்ந்தவாறு விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது.
விண்ணில் ஏவப்பட்ட 19.40 நிமிடங்களில் புவிச்சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி
இந்த செயற்கைக்கோளில் போக்குவரத்துக்கு உதவும் வகையிலும், தூரத்தை கணக்கிடும் வகையிலும் பல்வேறு நவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூபிடியம் அணு கடிகாரம், சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட கருவிகள் உள்ளன. 1,500 கி.மீ. கடல் எல்லை, கடல் வழிகளை கண்காணிக்கவும், அதன் தகவல்களை துல்லியமாக பெறவும் முடியும்.
இந்த செயற்கைக்கோள் தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்குவரத்தை கண்காணிக்கவும் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண் காணிக்க மற்றும் உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாகனப் போக்குவரத்தை துல்லியமாக கண்காணிக்கவும் முடியும். சிறப்பு அம்சம் என்னவென்றால், மொபைல் போன் வழியாகவும் இந்த தகவல்களைப் பெற முடியும்.
இதன் மூலம் மலை ஏறுபவர்கள், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் பயன் பெற முடியும். புவிசார் தகவல் களைப் பதிவு செய்யவும், வரை படங்களை அறிந்து கொள்ளவும் இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும்.
பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் எக்ஸ்சஸ் வகையை சேர்ந்தது. 3,20,000 கிலோ எடை கொண்டது. 5-வது முறையாக இந்த வகை ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்த ராக்கெட் அதிக எடை கொண்ட செயற்கைக் கோளை செலுத்த பயன்படுத்தப் படுகிறது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக்கோள் 1,432 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
மேலும் 2 செயற்கைக்கோள்
மொத்தம் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அவற்றில் 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் 2 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்.
No comments:
Post a Comment