ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 5.14 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏவப்பட்ட 20-வது நிமிடத்தில் புவிச்சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 58 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. ராக்கெட்டை ஏவுவதற்கான சோதனைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக் கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்ணில் ஏவப்பட்டவுடன் சுமார் 20 நிமிடங்களில் பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 284 கி.மீ. தொலைவும், அதிகபட்சமாக 20,652 கி.மீ. தொலைவும் கொண்ட புவிச்சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக் கோள் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்கும். தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்கு வரத்தை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள் ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்தது.