Friday, 4 April 2014

குரூப்-2 தேர்வு பணிக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு: ஏப்ரல் 7-ல் நடக்கிறது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்-2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 7-ம் தேதி நடக்கிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜய குமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு1-ல் (குரூப்-2 தேர்வு) அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பரில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், நேர்காணல் அல்லாத எஞ்சியுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வும் செய்யும் பொருட்டு, 2-வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட 256 பேரின் தற்காலிக பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.
கலந்தாய்வு ஏப்ரல் 7-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்கும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்புக்கடிதம் விரைவு அஞ்சல் மூலம் தனியாக அனுப்பப் பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை மேற்கண்ட இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், தமிழ்வழியில் படித்தவர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான காலியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் நிரப்புவதற்கான கலந்தாய்வு பின்னர் நடக்கும்.
இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.
டிசம்பரில் நடந்த குரூப்-2 தேர்வுக்கு விரைவில் முடிவு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அதன் தலைவர் நவநீதிகிருஷ்ணன் தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுஅட்டவணையின்படி, தேர்வு முடிவு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, “மதிப்பீடு தொடர்பான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிட்டு விடுவோம்” என்றார்.
வருடாந்திர தேர்வுஅட்டவணையின்படி, அடுத்த குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரம் வெளியிடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,064 காலியிடங்களை நிரப்ப கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. ஏறத்தாழ 8 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment