தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான "நோட்டா பட்டன்" நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.
அதேபோல தேர்தலில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான அத்தாட்சி சீட்டு, 20 ஆயிரம் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அறிவித்துப் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இது தொடர்பாக கூறியது:
வேட்பாளர்களில் யாரையும் தேர்தெடுக்கவில்லை என்பதை தெரிவிக்கும் வாய்ப்பு இத்தேர்தலில் நாட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
முன்னதாக டெல்லி, ராஜஸ் தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த நோட்டா முறை முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசி வேட்பாளரின் பெயருக்கு கீழ் இந்த நோட்டா பட்டன் இருக்கும். அதனை அழுத்துவதன் மூலம் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் பதிவு செய்ய முடியும் என்றார்.
புதிய வசதியுடன் கூடிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விக்கு பதிலளித்த சம்பத், வாக்குப் பதிவு இயந்திரங்கள் முழுமையாக நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று உறுதிபடத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment