Saturday, 1 March 2014

குடும்ப அட்டை இல்லாமல் வருமான சான்றிதழ் பெறலாம்: இ-சேவை மையங்களில் புதிய வசதி

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற இனி ஒவ்வொரு முறையும் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை.
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இ- சேவை மையங்களில் ஒரு முறை தங்கள் சான்றிதழ்களை சமர்பித்து ஒரு பிரத்யேகமான எண்ணை பெற்ற பிறகு அதை பயன்படுத்தியே சான்றிதழ்களை பெறலாம்.
சென்னையில் 14 இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், விதவைகளுக்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், உள்ளிட்டவைகளை ஒரே இடத்தில் பெறலாம்.
இன்னும் சில நாட்களில் தண்ணீர் வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவைகளையும் செலுத்தலாம். மயிலாப்பூர் மையத்தில் தற்போதிலிருந்தே வரி மற்றும் மின் கட்டணத்தையும் செலுத்தலாம்.
கேன்(CAN) எண்
இந்த இ-சேவை மையங்களில் விண்ணிப்பதாரர் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உள்ளிட்ட தங்களது சான்றுகளின் அசலை தர வேண்டும். அவை ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்படும். பின்பு பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் கணினியில் அலுவலரால் பதிவு செய்யப்படும்.
பிறகு 13 இலக்கு கொண்ட கேன் (CAN) எண் தரப்படும். இந்த கேன் எண்ணைக்கொண்டு வேண்டிய சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து கணினி துறை அதிகாரி கூறுகையில், “இனி, அசல் சான்றுகள் எப்போதும் தேவைப்படாது. கேன் எண்ணை கூறினாலே விண்ணப்பதாரரின் தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும்,” என்றார்.
ஆனால் இந்த கேன் எண் அச்சு நகலாக தரப்படாததால், மையத்தில் உள்ள அலுவலர் கூறும் போது மட்டுமே குறித்துக் கொள்ள முடியும்.
எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்
விண்ணப்பம் எந்த அதிகாரியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலமாக விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். தயாரான சான்றிதழை இ-சேவை மையத்திலேயே பெறலாம்.
வருமான சான்றிதழும் சாதி சான்றிதழும் இருந்தால் தான் ஒபிசி சான்றிதழ் பெற முடியும் என்பதால், அந்த சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரின் நேரடி ஒப்புதலுக்கு பிறகு தான் பெற முடியும்.
எங்கு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்:
தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இது போன்ற மையங்கள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, கேன் எண்ணைப் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயங்கும். தற்போது எழும்பூர்-நுங்கம்பாக்கம், மாம்பலம்-கிண்டி, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி தாலுகா அலுவலகங்களிலும், அடையார், அண்ணா நகர் மற்றும் பேசின் பிரிட்ஜ் மண்டல அலுவலகங்களிலும், சைதாப்பேட்டை, அசோக் நகர் சென்னை குடிநீர் அலுவலகங்களிலும், ஆறு நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகளுக்கே தெரியவில்லை
அடையார் மண்டல அலுவலகத்தில் இந்த இ சேவை மையம் இருப்பது அங்கிருக்கும் அலுவலகர்கள் பலருக்கே தெரியவில்லை. அடையார் மண்டல அலுவலகத்துக்கு வந்திருந்த திருவான்மியூரில் வசிக்கும் கௌரி, “ நான் பிறப்பு சான்றிதழ் வாங்க வந்துள்ளேன். சாதி சான்றிதழ் வாங்க தாலுகா அலுவலகம் போக வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன்.
அருகில் இருப்பவர் கூறியபோது தான் இதே அலுவலகத்தில் சாதி சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்தது,” என்றார். மயிலாப்பூரில் இ சேவை மையம் தாலுகா அலுவலகத்திலேயே அமைந்திருப்பதால் அங்கு முதல் நாளான புதன்கிழமை 70 பேர் வரை வந்திருந்தனர்.

No comments:

Post a Comment