Wednesday, 5 March 2014

ஏப்ரல் 7-ல் தொடங்கி 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 24-ல் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும் என டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
9 கட்ட தேர்தல்:
ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 17, 24, 30 ஆகிய தேதிகளிலும். மே மாதத்தில் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மே 12.ல் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 2 மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் 92 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறும் நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் 3 மாநிலங்களில் 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் யூனியன் பிரதேசங்களிலும் 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ஆறாம் கட்ட தேர்தலில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 7-ஆம் தேதி நடைபெறும் எட்டாவது கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 12-ஆம் தேதி நடைபெறும் 9-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் 3 மாநிலங்களில் 41 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் வாக்குப்பதிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஏப்ரல் 24-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 29-ல் தொடங்கி ஏப்ரல் 5 வரை நடைபெறும். ஏப்ரல் 7-ல் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 24-ல் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், மே 16-ல் எண்ணப்படுகின்றன.
ஆலந்தூர் தொகுதி இடைத் தேர்தல்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதியே ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெறும். பண்ருட்டி ராமச்சந்திரன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், ஒடிஷா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திரத்தில் சீமாந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தனித்தனியே 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். அதன்படி, ஏப்ரல் 30-ல் தெலங்கானா பகுதியிலுள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கும். சீமாந்திராவிலுள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஒடிஷாவில் ஏப்ரல் 10-ம் தேதி 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 17 ஆம் தேதியில் 77 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் ஏப்ரல் 12-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
சிறப்பு முகாம்:
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9-ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும், அன்று புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை:
மக்களவைத் தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் மே 16-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார்.
வாக்கு உரிமையை பயன்படுத்தவும்:
தேர்தல் தேதிகளை அறிவிக்கும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், தேர்தலில் வாக்கு அளிக்கும் தகுதி உடைய இந்திய மக்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் வாக்கு உரிமையை பயன்படுத்த வேண்டும் என்றார்.
வாக்காளர்கள் தேர்தலில் நியாயமான, ஜனநாயக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் உச்ச பட்ச நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணைய அறிவிப்புகள்:
*வரும் மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் இது கடந்த ஆண்டை விட 12% அதிகமாகும்.
*வாக்குச்சாவடிகளுக்கு அருகில் குடிதண்ணீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை போன்ற அடிப்படை வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
*தேர்தலில், வேட்பாளர்களை நிராகரிக்கும் 'நோட்டா' வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அமல் படுத்தப்படும்.
*தேர்தலில் குளறுபடிகளை தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு முதல் முறையாக வழங்கப்படும்.
*வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த 1952.ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின் போது 176 மில்லியனாக இருந்ததது. அது தற்போது 16-வது மக்களவைத் தேர்தலில் 814 மில்லியனாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment