மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார்.
தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார். மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு.
பிறப்பு: ஏப்ரல் 24, 1820 -ல் கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்(இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் போப் (ஜார்ஜ் உக்லோ போப்).
கல்வி: குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
தமிழகம் வருகை: விவிலிய நூற்கழகத்தில் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழகத்திற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
சாயர்புரத்தில் தங்கியிருந்த போது அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நண்பராகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு தொடக்கப் பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப்.
திருமணம்: 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.
தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என 3 பாகமாக எழுதினார். தமிழ்ப் புலவர்களையும், தமிழ்த் துறவிகளையும் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.
தமிழ்த் தொண்டு:
* இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
* 1886 ஆம் ஆண்டு திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். Sacred Kural என்ற அவரது மொழியாக்கம் மிகச்சிறப்பானதாகப் போற்றப்படுகிறது.
இது தவிர நாலடியார்(1893), திருவாசகம் (1900) போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தார். இவைகள் தமிழ்-ஆங்கில அகராதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜி.யு.போப் எழுதிய இலக்கண நூல்கள் தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்று பல பதிப்புகள் கண்டவை.
ஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப் மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது. தனது முதுமைக்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய போப் ஒரு நாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை விவரித்திருக்கிறார். அதனைக்கேட்டு பரவசமடைந்த நண்பர், " நீ கண்டிப்பாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும்" என்று வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு போப் தனது முதுமையினைக் குறிப்பிட்டு, அது நீண்ட நெடிய பணி அவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்று நம்பிக்கையில்லை எனக் கூறியிருக்கிறார். அதற்கு போப்பின் நண்பர்" ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் நீண்டகாலம் வாழ்வதற்குண்டான வழி.நீ கண்டிப்பாக இப்பணியினை நிறைவேற்றுவாய் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்".அதன் பின்னர் மொழிபெயர்ப்பினை துவக்கிய போப் தனது எண்பதாவது வயதில் இப்பணியினை முடித்திருக்கிறார்.தனது 80ஆவது பிறந்தநாளன்று எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"I date this on my eightieth birthday. I find by reference that my first Tamil lesson was in 1837. This ends, as I suppose, a long life devoted to Tamil studies. It is not without deep emotions that I thus bring to a close my life's literary work."
* புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.
* தமிழ் மீது பெரும் பற்று பெற்ற போப் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
மறைவு: தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப் தனது 88ஆவது வயதில் 12.02.1908 மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன் தன் கல்லறையை எழுப்ப ஆகும் செலவில் ஒரு பகுதி தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டும் என்றும் தனது கல்லறையின் மீது "A Student of Tamil" இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று செதுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜி. யு. போப் சிலை நிறுவப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment