Wednesday, 26 February 2014

கைக்கு எட்டும் ஐ.எப்.எஸ்.!

என்னதான் தனியார் வேலையில் சம்பளமும் வசதிகளும் அதிகம் என்றாலும், இன்னமும் உயர் அரசுப் பதவிகளுக்கான ஆர்வம் இளைய தலைமுறையிடம் குறையவில்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ். அதிகாரி ஆகும் கனவுகளுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்கிறார்கள். முதல் முயற்சியிலேயே சிலர் வெற்றி கண்டாலும், அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகும் வெற்றியைச் சுவைப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது.
ஒரு முயற்சியில் இறங்கும் போதே, அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்ட மனோ பாவத்துடன் செயல்படுவது வெற்றியை உத்தரவாதப் படுத்தும் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதை நிரூபித்திருப்பவர் வி.பி.கௌதம் (22) என்ற இளம் பொறியாளர். அண்மையில் வெளியான இந்திய வனப் பணி (ஐ.எப்.எஸ்.) தேர்வில், அகில இந்திய அளவில் 3ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கௌதம்.
ஐ.எப்.எஸ். தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஐ.எப்.எஸ். தேர்வுக்கு எப்படிப் படிக்க வேண்டும்? என்னென்ன படிக்க வேண்டும் எனப் பல்வேறு உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார் கௌதம்:
முதலில், தேர்வுக்குத் தயாராகும்போதே நமது மனோபாவத்தை (Attitude) மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது வெற்றி பெற்றுவிட்ட மனநிலையோடு தேர்வுக்குப் படிக்க வேண்டும். போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் மனதில் ஊக்கம் இருக்கும் என்றாலும், அதைக் கடைசி வரை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
போட்டி என்பது வெளியே இருந்து வருவதில்லை. நம்மிடம் இருந்துதான் வருகிறது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, முழு ஈடுபாடு, விடாமுயற்சி (Perseverance) இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முதல் முயற்சியிலேயே வெற்றிபெற வேண்டும் என்று நினைக்க வேண்டும். மறு முயற்சி (Attempts) குறித்து யோசிக்கவே கூடாது.
முதல்நிலைத் தேர்வுக்குப் படிக்கும்போதே மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்துக்கும் தயாராகிவிட வேண்டும். முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுத் தாளைப் போல 2ஆவது தாளான நுண்ணறிவுத் திறன் தேர்வுக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுங்கள். கொஞ்சம் மெனக்கெட்டுப் படித்தால் அதிக மதிப்பெண் வாங்கிவிடலாம்.
தினசரி 3 முதல் 4 மணி நேரம் நாளிதழ்கள் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். நாளிதழ் படிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். விரைவாக விடை யளிக்கப் பயிற்சி பெறு வதைக் காட்டிலும், விரைந்து யோசித்துப் பதில் எழுதிப் பழகுவது மெயின் தேர்வில் அதிகம் கைகொடுக்கும்.
பொது அறிவு, விருப்பப் பாடம் ஆகியவற்றுக்கு நாமே சொந்தமாகக் குறிப்பு எடுத்துப் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். குறிப்பு எடுக்கும்போதே நம்மை அறியாமல் படிக்க ஆரம்பித்துவிடுவோம். புதிய விஷயங்களில் ஆர்வம் இருந்தால்போதும். எதையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். அடிப்படையில் நான் ஒரு என்ஜினியர். ஆனால், ஐ.எப்.எஸ். தேர்வுக்காக அறிவியல் பாடங்களைப் புதிதாகத்தான் படித்தேன். ஆர்வம் இருந்ததால் அவற்றைப் படிப்பதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை என்கிறார் கௌதம்.
ஐ.எப்.எஸ். பணி வாய்ப்பு கள் குறித்துத் தமிழ்நாடு தேயிலை, தோட்டக்கலை நிர்வாக இயக்குநர் எஸ். பாலாஜி கூறுகையில் "ஐ.எப்.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப் படுவோருக்கு உத்தராகண்ட் தலைநகர் டெராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வனவியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப் படுகிறது. பயிற்சியை நிறைவு செய்யும்போது எம்.எஸ்சி. பட்டம் வழங்கப்படும். ஐ.எப்.எஸ். பணியில் சேருவோர் உதவி வனப் பாதுகாவலர் நிலையில் இருந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வரை படிப்படியாகப் பதவி உயர்வு பெறுவர். மாவட்ட வன நிர்வாக அலுவலகம் முதல் வனத்துறை ஐ.ஜி. போன்ற உயர் பணிகளுக்கும் செல்ல முடியும்” என விளக்கினார்.
தமிழக அரசின் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஐ.எப்.எஸ். குறித்த இலவசப் பயிற்சி முகாமைச் சென்னையில் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் மேற்கண்ட யோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய டைரக்டர் ஜெனரல் வெ.இறையன்பு, அகில இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தின் முதல்வர் பிரேம்கலா ராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

No comments:

Post a Comment