Tuesday, 18 February 2014

மதிப்பும் பயன்பாடும் - என்றால் என்ன?

மதிப்பு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு, ஒன்று, பொருளின் பயன்பாட்டு மதிப்பு. மற்றொன்று, பொருளின் வாங்கும் திறன் அல்லது பரிவர்த்தனை மதிப்பு. அதிக பயன்பாட்டு மதிப்புள்ள பொருளுக்கு குறைந்த பரிவர்த்தனை மதிப்பும், அதிக பரிவர்த்தனை மதிப்புள்ள பொருளுக்கு குறைந்த பயன்பாட்டு மதிப்பும் இருக்கும்.
தண்ணீரைவிட வாழ்க்கைக்கு பயனுள்ள பொருள் வேறெதுவும் இல்லை, ஆனால் அதனால் எதையும் வாங்க முடியாது. இதற்கு மாறாக, வாழ்க்கைக்கு எவ்வித பயனும் இல்லாத வைரத்தால் எதையும் வாங்க முடியும்.
பயன்பாட்டு, பரிவர்த்தனை மதிப்புகளை விளக்கப் பயன்படும் இந்தக் குறிப்பு, இதில் இல்லாத வேறு ஒன்றை விளக்கவும் பயன்படும்; அது தான் “இறுதிநிலை”. வாழ்வதற்குத் தேவை இல்லாத வைரத்திற்கு ஏன் அதிக விலை? வாழ்வதற்கு அவசியமான தண்ணீருக்கு ஏன் குறைந்த விலை? இந்த கேள்வி 1700 பின் பகுதியில் தொடங்கி 100 ஆண்டுகள் விவாதிக்கப்பட்டு 1800களின் பின்பகுதியில் விடை கிடைத்தது.
ஒரு பொருளை நுகரும் போது கிடைக்கும் மொத்த பயன்பாட்டைவிட இறுதிநிலை பயன்பாடுதான் அதன் விலையை நிர்ணயிக்கும் என்பதுதான் அந்த விளக்கம். இதில் இறுதிநிலை என்பதை விளக்குவது சற்று கடினம்; கவனமாக படிக்கவும்.
எனக்கு தாகமாக உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன் என்று எடுத்துக்கொள்வோம். முதல் 100 மில்லி லிட்டர் (மி.லி) குடிக்கும் போது கிடைத்த பயன்பாட்டைவிட கடைசி 100 மி.லி., குடிக்கும் போது கிடைக்கும் பயன்பாடு குறைவு என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். ஒவ்வொரு கூடுதல் நுகர்வுக்கும் கிடைக்கும் கூடுதல் பயன்பாடு குறைந்துகொண்டே போவதைக் கவனிக்கவும். இதன் காரணம் என்ன?
முதல் 100 மி.லி. குடிக்கும் போது என்னிடம் தண்ணீரே இல்லை. அதுவே என்னுடைய 90% தேவையை பூர்த்திசெய்த பிறகு கடைசி 100 மி.லி., குடிக்கிறேன். ஆகவே, ஒரு பொருள் நம்மிடம் அதிகமாக இருந்தால் (நுகர்ந்தாலோ), அதற்கு அடுத்த கூடுதல் வருகை (நுகர்வு) நமக்கு அதிக பயன்பாட்டைக் கொடுக்காது.
நம் தேவையைவிட தண்ணீர் அதிகமாக இருப்பதால், அதனின் இறுதிநிலை பயன்பாடு குறைவு, ஆகவே அதனின் ரூபாய் மதிப்பும் குறைவு. அதற்கு மாறாக, நம் தேவையைவிட வைரம் குறைவாக இருப்பதால், அதனின் இறுதிநிலை பயன்பாடு அதிகம், ஆகவே, அதனின் ரூபாய் மதிப்பும் அதிகம்.

No comments:

Post a Comment