பம்பிள் பீக்களால் (துளைபோடும் வண்டு) மிகவும் உயரமான இடங்களிலும் பறக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கு சீனாவில் உள்ள உயர்ந்த மலைப்பகுதிக்குப் பயணம் செய்து, பாம்பஸ் இம்பிடுசஸ் வகையைச் சேர்ந்த ஆறு ஆண் பம்பிள் பீக்களைச் சேகரித்தனர்.
அந்தத் தேனீக்களை ஒரு பெட்டியில் வைத்து அடைத்து, அங்குள்ள ஆக்சிஜன் அளவையும், காற்றின் அடர்த்தியையும், வெப்ப நிலையையும் உயரமான பகுதிகளில் இருப்பதைப் போன்று ஆய்வாளர்கள் செயற்கையாக உருவாக்கினார்கள்.அந்தப் பரிசோதனையில் கடல்மட்டத்திலிருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சூழலில், அந்த வண்டுகளால் பறக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
சில வண்டுகள் 30 ஆயிரம் அடிகளுக்கு மேல்கூடப் பறக்கக்கூடியவை என்று தெரியவந்துள்ளது. இது எவரெஸ்ட் சிகரத்தைவிடவும் உயரமானது (29,000 அடி அல்லது 8,848 மீட்டர்). இந்தப் பம்பிள் பீக்கள் ஒவ்வொரு முறை சிறகை அடிக்கும்போதும் தலையையும் வயிற்றையும் நோக்கித் தங்கள் சிறகின் கோணத்தை விஸ்தரித்துக்கொண்டே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.