முதல் உலகப் போரின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை நடத்த இங்கிலாந்து அரசு தயாராகிவருகிறது. 1914இல் தொடங்கி நான்கு வருடங்கள் நடந்த அப்போரின் ஒவ்வொரு திருப்புமுனைச் சம்பவங்களையும் நினைவுபடுத்தும் வகையில் பல நிகழ்வுகளும் இங்கிலாந்தில் நடக்கவுள்ளன. ‘எல்லாப் போர்களையும் நிறுத்துவதற்காக நடத்தப்பட்ட போர்’ என்று கருதப்படும் முதல் உலகப் போரிலிருந்து பெற்ற படிப்பினைகள் தொடர்பான தேசிய அளவிலான விவாதங்களும் அங்கே எழுந்துள்ளன.
ஒரு கோடியே 60 லட்சம் பிரிட்டன் வீரர்கள் பலியான, 2 கோடி வீரர்கள் படுகாயம் அடைந்ததற்குக் காரணமான முதல் உலகப் போரே வீணானது என்றும், ஒரு தலைமுறை இளைஞர்களையே பலிகொடுத்தது பெரும் தவறு என்றும் விவாதங்கள் நடந்துவருகின்றன. அதே நேரத்தில் ஜெர்மனியின் ஏகாதிபத்திய ஆசையைத் தகர்த்து ஐரோப்பாவில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்கு இந்தப் போர்தான் காரணமாக இருந்தது என்றும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
முதல் உலகப் போரை ஒரு தவறான நடவடிக்கையாகப் பார்ப்பவர்கள் தேசபக்தி, தியாகம் மற்றும் வீரம் போன்ற நற்பண்புகளைச் சிறுமைப்படுத்துவதற்கு முயல்வதாக இங்கிலாந்தின் கல்விச் செயலார் மிக்கேல் கோவ் டெய்லி மெய்லில் எழுதியுள்ளார். வரலாற்றுப் பேராசிரியர் ரிச்சர்ட் இவான்ஸ் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக அவர் இப்படி எழுதியுள்ளார்.
பேராசிரியர் இவான்ஸ் தி கார்டியன் இதழில் எழுதிய கட்டுரையில், 1914இல் தொடங்கிய போருக்காக அமர்த்தப்பட்ட வீரர்கள் நாகரிகத்துக்காகவும், மேலான உலகத்தைப் படைப்பதற்காகவும் தாங்கள் போராடியதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது தவறான எண்ணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரைக் கொண்டாட வேண்டாம்
பிரிட்டனைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சேர்ந்து போரைக் கொண்டாட வேண்டாம் என்று கூறி ஒரு பகிரங்கமான கடிதத்தை இங்கிலாந்து அரசுக்கு எழுதியுள்ளனர். இந்தக் கடிதம் ‘No Glory in War’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 70 பேர் கையெழுத்திட்டுள்ளனர். நடிகர்கள் ஜூட் லா, சைமன் கல்லோ , வனேசா ரெட்க்ரேவ், கவிஞர் கரோல் ஆன் டஃபி, எழுத்தாளர் மைக்கேல் மார்பர்கோ இசையமைப்பாளர் பிரியன் இனோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அக்கடிதத்தில், “முதல் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக டேவிட் கேமரூன் ஐந்து கோடியே 50 லட்சம் ஈரோ பணத்தைச் செலவழிக்க இருப்பதாகக் கூறியிருப்பது மிகவும் சங்கடத்தைத் தருகிறது. இதைக் கொண்டாடுவதற்குப் பதில் வல்லரசு நாடுகள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட உலகம் முழுவதும் பல துயரங்களுக்கு வித்திட்ட போர் இது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் இருக்கும் வேளையில், சர்வதேச அமைதியை வலியுறுத்துவதற்கான தருணமாக இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
நேசத்தை உணர்த்தும் நிகழ்வு
தி ரியல் ஹிஸ்டரி ஆப் வேர்ல்ட் வார் 1 நூலை எழுதிய டாக்டர் பாக்னர், “ஐரோப்பாவை மையமாக வைத்து நடந்த போர் இது. உலகச் சந்தையை விஸ்தரிப்பதற்காக, ஆதிக்கம் செலுத்துவதற்காக உலக நாடுகள் நடத்திய போர் இது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கிய ஆயுதப் போட்டி 1914இல் பெரும் போராக வெடித்தது. வங்கிகளை நடத்தியவர்களும், ராணுவத் தளபதிகளும் சேர்ந்து நடத்திய போர் இது. தங்கள் நாட்டுக் குடிமக்களின் உயிர் பற்றி அவர்கள் யாரும் கவலைப்படவேயில்லை. தங்களது ஆதிக்கத்தில் உள்ள நாட்டுக் குடிமக்களின் உயிரையும் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை” என்கிறார்.
இந்த விவாதங்களுக்கெல்லாம் அப்பால் ஆகஸ்ட் 4ஆம் தேதி, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்விலிருந்து நான்கு ஆண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக 10 மில்லியன் ஈரோ பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2012 இல் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராக இருந்த ஜென்னி வால்ட்மேன் இந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.
முதல் உலகப்போர் தொடர்பான வரலாற்று ரீதியான ஆய்வுகளிலும் இத்தருணத்தில் ஆர்வமும், நடவடிக்கைகளும் ஆரம்பித்துள்ளன. 35 மில்லியன் ஈரோ செலவில் புதுப்பிக்கப்பட்ட இம்பீரியல் போர்க் அருங்காட்சியகம் ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முதல் உலகப்போரின் முக்கியமான தருணங்கள் காலவாரியாகப் புகைப்படங்களாக வைக்கப்பட உள்ளன. இந்தியா போன்ற காலனி நாடுகளிலிருந்து பங்கெடுத்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்கள் முக்கியக் கண்காட்சிகளை ஏற்கனவே நடத்தி வருகின்றன.
முதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவை முன்னிட்டுப் பதிப்பகங்களும் புதிய புத்தகங்களை சந்தைக்குள் இறக்கி வருகின்றன. போர் எதிர்ப்புக் கவிதைகளை எழுதிய ராணுவ வீரர்களான வில்ப்ரட் ஓவன் மற்றும் சிக்ப்ரீட் ச சூன் போன்றவர்களின் கவிதைகளை வாசித்துப் பார்க்கும் ஆர்வம் புதிய தலைமுறை வாசகர்களுக்கு உருவாகியுள்ளது.
முதல் உலகப் போரின் போரில் ஜெர்மானிய வீரர்களும், பிரிட்டீஷ் வீரர்களும் கடுமையாகத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த 1914ஆம் ஆண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் போர் நிறுத்தப்பட்டது. இரு தரப்பு வீரர்களும் எல்லைகளைத் தாண்டி, பரஸ்பரம் பரிசளித்துக்கொண்டனர். சேர்ந்து கால்பந்து விளையாடினர். கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடினார்கள். இறந்த வீரர்களைச் சேர்ந்து புதைத்தனர். போரின் பயனின்மை மற்றும் மனிதர்களுக்கு இடையே உள்ள நேசத்தை உணர்த்தும் அருமையான நிகழ்வு இது.
ப்ளாண்டர்ஸ் பகுதியில் நடந்த இந்த நிகழ்வை மீண்டும் இங்கிலாந்தில் கொண்டாட உள்ளனர். முதல் உலகப் போர் உலகத்துக்கு விடுத்த செய்தியாக பிளாண்டர்சில் நடந்த கால்பந்தாட்ட விளையாட்டை நாம் நினைவுகூர்வதே பொருத்தமாக இருக்கும்.
ஆதாரம் : A just war or a catastrophe? - பார்வதி மேனன் - தி இந்து (ஆங்கிலம்).
No comments:
Post a Comment