நேற்றோடு முடிந்தது 103 ஆண்டுகள், உலகிலேயே முதல்முறையாக விமானம் மூலம் அஞ்சல்களை எடுத்துச்சென்று விநியோகித்து இந்தியா அரிய சாதனை படைத்து! மன்னர்கள் காலத்திலிருந்தே ஓலை அனுப்புவது என்பது வழக்கமாக இருந்தாலும் அஞ்சல் சேவையில், அஞ்சல் தலையை ஒட்டி, அஞ்சலைக் கொண்டுபோய்ச் சேர்க்க முன்கூட்டியே கட்டணம் வசூலிக்கும் முறையைப் புகுத்தியது பிரிட்டிஷ்காரர்கள்தான். சர் ரௌலட் ஹில் என்பவர்தான் இதை ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகுதான் ‘பிளாக் பென்னி’ என்றழைக்கப்படும் அஞ்சல் முத்திரை பயன்பாட்டுக்கு வந்தது. பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் உருவப்படத்தை அந்த அஞ்சல் தலையில் பொறித்தனர்.
விமானத்தில் பறப்பது என்ற சாதனையை உலகில் முதன்முதலாக நிகழ்த்தியவர்கள் அமெரிக்கர்கள். 1906-ல் தொடங்கி 1908-ல் விமானத்தில் பறப்பதைச் செம்மைப்படுத்தி உலகில் வழக்கத்துக்குக் கொண்டு வந்தார்கள் ரைட் சகோதரர்கள்.
அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தது பிரிட்டிஷார், விமானப் பயண சாகசத்தை சாத்தியமாக்கியது அமெரிக்கர்கள் என்றாலும் விமானத்தில் அஞ்சல் சேவையைத் தொடங்கியவர்கள் இந்தியர்கள் என்றால் வியப்பாக இல்லையா? இப்போதைய உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் நகரில்தான் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. அஞ்சல்களை விமானத்தில் அனுப்பும் வழக்கத்துக்கு முன்னோடி இந்தியாதான்.
கடிதம் பறக்கின்றதே
அலாகாபாத் நகரில்தான் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று புனித நீராடலுக்கு லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கே மகா கும்பமேளாவும் நடைபெறும். அப்படிப்பட்ட கும்பமேளாவின்போது அலாகாபாதில் இந்த சேவை முதல்முதலாகத் தொடங்கியது.
மேளாவை முன்னிட்டு, அரசு சார்பில் தொழில் – விவசாய பொருள்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. அங்கு வரும் மக்கள் விவசாயத்திலும் தொழில்துறையிலும் ஏற்பட்டுவரும் நவீன மாற்றங்களை நேரில் பார்த்து மகிழ ஏராளமான இயந்திரங்களையும் வேளாண் கருவிகளையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அதில் 2 விமானங்களும் இருந்தன! அந்த விமானங்கள் பகுதிபகுதியாகப் பிரித்து எடுத்துவரப்பட்டு அலாகாபாதில் மீண்டும் கோக்கப்பட்டு முழு வடிவம் பெற்றன.
வால்டர் ஜி வைந்தம் என்ற ராணுவ அதிகாரி, அஞ்சல்துறை அதிகாரிகளை அணுகி, சில அஞ்சல் பைகளை விமானத்தில் எடுத்துச் சென்று வேறிடத்தில் இறக்க விரும்புவதாகக் கூறினார். அவர்களும் அதற்கு அனுமதியளித்தனர். டிரினிடி சர்ச் என்ற கிறிஸ்தவ மிஷனரி அமைப்பு அதற்கு ஆகும் செலவை ஏற்க முன்வந்தது. பொருட்காட்சி மைதானத்தின் மீது அந்த விமானத்தைப் பறக்க வைத்து மக்களைப் பரவசப்படுத்துவதென்று முடிவாயிற்று.
அப்போது நாட்டின் தலைமை சர்வேயராக இருந்தவர் தான் அஞ்சல்துறைக்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். அஞ்சல் பைகளை எடுத்துச் செல்ல அனுமதிப்பது என்ற முடிவுடன், அந்த சம்பவத்தை நினைவுகூரும் விதத்தில் சிறப்பு அஞ்சல்தலையை வெளியிடவும் அவர் தீர்மானித்தார். அஞ்சல் உறையில் அழகிய வண்ணச் சித்திரம், அஞ்சல்தலை ஆகியவற்றுடன் முதல் நாள் உறை வெளியிடப்பட்டது. ‘முதல் விமான சேவை’, ‘உ.பி. கண்காட்சி அலாகாபாத்’ என்ற பொருள்தரும் இரு ஆங்கில வாசகங்கள் வட்டவடிவ முத்திரையாகத் தயாரிக்கப்பட்டு அந்த உறைமீது பொறிக்கப்பட்டன. சிறு மலைகள் மீது விமானம் பறப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டு உறைமீது பொறிக்கப்பட்டது. வழக்கமாக அஞ்சல் முத்திரை என்றால் கருப்பு வண்ணம்தான் பயன்படுத்தப்படும், அது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி என்பதால் மெஜந்தா வண்ணம் பயன்படுத்தப்பட்டது.
அந்த விமானத்தில் அதிக பாரம் ஏற்றக் கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருந்தனர். எனவே 6,500 கடிதங்களை மட்டும் ஏற்ற முடிவாயிற்று. கண்காட்சித் திடலிலிருந்து, 1911-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு அஞ்சல் பைகளுடன் விமானம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வியப்பும் மகிழ்ச்சியும் முகங்களில் ஒருசேர அந்த விமானம் தரையிலிருந்து புறப்பட்டதையும் விண்ணில் ஏறிப் பறப்பதையும் கண்கொட்டாமல் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டே நின்றனர்.
அந்த விமானம் யமுனைமீது பறந்து நைனி சந்திப்பு அருகே தரையிறங்கியது. அலாகாபாதுக்கு புறத்தில் இருந்த அந்த இடத்தில்தான் நைனி மத்திய சிறைச் சாலையும் இருந்தது. 12 கிலோ மீட்டர் தொலைவுள்ள அந்தப் பயணத்துக்கு வெறும் 13 நிமிஷங்களே பிடித்தன. அங்கே தரையிறங்கியதும் அஞ்சல் பை எடுக்கப்பட்டு அதிலிருந்தவை தரை, கடல், ரயில் என்று எல்லா வழிகளிலும் உரியவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மிகவும் அரிதானது அந்த நிகழ்ச்சி என்பதால் அதன் தனித்தன்மையைப் பாதுகாக்க அஞ்சல்துறை அதிகாரிகள் அந்த அஞ்சல் உறைகள் மீது பொறித்த வட்டமான முத்திரை இலச்சினையை உடைத்து அழித்துவிட்டார்கள். அடுத்த நாளையிலிருந்து பயன்படுத்த வேறொரு வட்டமுத்திரை தயாரிக்கப்பட்டிருந்தது.
முதல் அஞ்சல் விமானி
அந்த விமானத்தை மெஸ்ஸிய ஆரி பீக்கே என்ற 23 வயது பிரெஞ்சு ‘ஏவியேட்டர்’ ஓட்டினார். அப்போ தெல்லாம் ‘பைலட்’ என்ற சொல் புழக்கத்துக்கு வரவில்லை. திசைக்காட்டியை அவர் தன்னுடைய தொடையில் கட்டிக்கொண்டார். அஞ்சல் பை அவருடைய இருக்கைக்கு அருகில் கைக்கெட்டும் தூரத்தில் வைக்கப்பட்டது. அது மிகவும் அரிதான நிகழ்ச்சி என்பதால் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உலகின் பிற நாடுகளிலும் இருந்த மிக முக்கியப் பிரமுகர்களின் பெயர்களுக்கெல்லாம் சம்பிரதாயமாகக் கடிதங்கள் எழுதிச் சேர்க்கப்பட்டன. மோதிலால் நேரு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும் தன்னுடைய மகன் ஜவாஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதி அந்த அஞ்சல் பையில் சேர்த்திருந்தார்.
பொக்கிஷம் உள்ள இடங்கள்
பிரிட்டிஷ் மகாராணிக்கும் ஐந்தாவது ஜார்ஜுக்கும் அன்றைய இந்திய அதிகாரிகள் எழுதிய ‘முதல் விமானசேவைக் கடிதங்கள்’ இப்போதும் பக்கிங்காம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டு மிக பத்திர மாகப் பாதுகாக்கப்படுகின்றன. சுமார் 40 கடிதங்களில் அந்த விமானத்தின் புகைப்படம், அதை ஓட்டிய விமானியின் கையெழுத்துடன் இடம்பெற்றிருந்தது. 6,500 கடிதங்களில் சாதாரணக் கடிதங்கள், பதிவு அஞ்சல்கள், 40 அஞ்சல் அட்டைகள் என்று சில வகைகள் இருந்தன. அஞ்சல்தலை சேகரிப்போர் இவற்றையெல்லாம் வகைப்படுத்திக் குறித்து வைத்துள்ளனர்.
ஆனால் என்னவொரு துரதிர்ஷ்டம், அந்தக் கடிதங் களைப் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற நினைப்பில்லாமல் தொலைத்து விட்டனர்; அல்லது சேதமடைய விட்டுவிட்டனர். அந்தக் கடிதங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டவர்களிடம்கூட மிகவும் நைந்த நிலையில்தான் இருக்கின்றன. அஞ்சல் அட்டைகளில் சுமார் 10-தான் இன்னும் இருக்கின்றன. (அதில் ஒன்று இந்தக் கட்டுரையாளரிடம் ஸ்ரீரங்கத்தில் பத்திரமாக இருக்கிறது!)
இந்த அஞ்சல் சேவையை ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை பிப்ரவரி 3-வது வாரத்தில் சிறிய செய்தியாகப் பிரசுரித்திருந்தது. இந்த சம்பவம் குறித்த விவரங்களைச் சேகரித்தபோது, இந்த விமானச் சேவையை ஒத்திவைத்த தகவலும் தெரியவந்தது. இந்த விமானம் தரையிறங்கும் இடத்தில் முள்செடிகளும் புதர்களும் இருந்ததால் விமான டயர் பஞ்சராகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டு, அதைச் சுத்தப்படுத்தினால்தான் விமானத்தைத் தரையிறக்க முடியும் என்று கூறப்பட்டது. நைனி சிறையிலிருந்த கைதிகள்தான் பாடுபட்டு அந்த இடத்தை விமானம் இறங்கக்கூடிய தளமாக மாற்றினர்.
அஞ்சல் விமானியின் பேட்டி
பின்னர், அந்த விமானப் பயணம் குறித்து விமானி பீக்கே சுவையான பேட்டி தந்திருந்தார். “தரையிலிருந்து 120 அடியிலிருந்து150 அடி உயரம் வரைக்கும்தான் பறந்தேன். யமுனை நதியைப் பார்த்ததும் இதைப் பத்திர மாகக் கடக்க முடியுமா என்ற சந்தேகம் தோன்றியது. அப்படி பறந்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய எருமைக் கூட்டத்தைப் பார்த்ததும் திகைத்துப்போனேன். விமானத்தை இறக்குவதற்குள் இன்னும் என்னவெல்லாம் வருமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. நான் ஓட்டிய விமானத்தின் திறன் 50 குதிரை சக்தி. அதன் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீட்டர் என்று மட்டுப்படுத்தியே ஓட்டினேன்” என்று அதில் விவரித்திருந்தார்.
சிறப்புகள்
1974-ம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். விமான அஞ்சல் சேவை தொடங்கி 100 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 2011-ல் அவருடைய புகைப்படத்துடன் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. இந்திய அஞ்சல்துறையும் தன்னுடைய பொன்விழா, முதல் விமானப் பயண நூற்றாண்டு விழா ஆகிய காலங்களில் சிறப்பு அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் வெளியிட்டு அவரைக் கௌரவப்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும்விட பிப்ரவரி 18, 1911-ல் வெளியான உறையே மிகவும் விலைமதிக்க முடியாததாகும். விமானி தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப் படத்துடன் அவருடைய கையெழுத்தும் பொறிக்கப்பட்ட கடிதங்கள் 40 அந்த அஞ்சல் பையில் இருந்தன.
இந்த அரிய கடிதம் மேலும் 3 பேரிடம் இந்தியாவில் இருக்கின்றன. மும்பையைச் சேர்ந்த தீருபாய் மேத்தாவிடமும், பாட்னாவில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பாளர் ஒருவரிடமும், புதுடெல்லியில் உள்ள ‘டாக் பவன்’ அருங்காட்சியகத்திலும் அவை உள்ளன. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ஒன்றும் அமெரிக்க அஞ்சல்தலை சேகரிப்பாளரிடம் ஒன்றும், ஜெர்மானியரிடமும் எஞ்சியவை இருக்கின்றன.
- பி. சௌந்தரராஜன், தலைவர், அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம், திருச்சி, தொடர்புக்கு: sounderr2000@gmail.com
No comments:
Post a Comment