Saturday, 15 February 2014

எம்பிபிஎஸ் 2 ஆண்டு நீட்டிக்கும் முயற்சி வாபஸ்- மாணவர்கள் போராட்டத்தால் பணிந்தது மத்திய அரசு

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகள் நீட்டிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
தற்போது எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்ய ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த ஆண்டு முதல் ஓராண்டு அதிகரித்து ஆறரை ஆண்டுகளாக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திட்டமிட்டது. மேலும் மருத்துவ மாணவர்கள் ஓராண்டு கட்டாய கிராமப் பணியும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதன்படி எம்.பி.பி.எஸ். படிப்பை ஏழரை ஆண்டுகளாக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இதில் கிராமப்புற கட்டாய சேவை திட்டம் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அந்தத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மருத்துவக் கவுன்சிலுக்கு கடிதம் எழுத மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
மருத்துவ மாணவர்கள் போராட்டம்
இந்தத் தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியே கசிந்தது. அன்றைய தினமே பெருந்திரளாகக் கூடிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களுடன் மேலும் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இணைந்ததால் போராட்டம் வலுவடைந்தது. டெல்லியைச் சேர்ந்த எய்ம்ஸ், குரு தேஜ் பகதூர், சப்தர்ஜங், மௌலானா ஆசாத், லேடி ஹாடிங், தீன்தயாள் உபாத்யாயா, வர்தமான் மகாவீர், ராம்மனோகர் லோகியா மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த சில நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகள் டெல்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
மத்திய சுகாதாரத் துறை அறிக்கை
அதன் பிறகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கிராமப்புற கட்டாயப் பணி திட்டம் தொடர்பான அரசாணையை நிறுத்தி வைக்க அமைச்சர் குலாம் நபி ஆசாத் உத்தரவிட்டுள்ளார்.
எம்.பி.பி.எஸ். படிப்பை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை. அதுபோன்று திட்டமும் இல்லை. 2015-16ம் ஆண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் சேர கிராமப்புற கட்டாய சேவை அவசியம் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சங்கத் தலைவர் பேட்டி
தங்களின் கோரிக்கைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் குஷங்கரா பாதக் ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘‘கட்டாய கிராமப் பணியை செய்ய மாட்டோம் என நாங்கள் கூறவில்லை. அதை எங்கள் பாடத்திட்டத்திலேயே சேர்த்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்.
இப்போதைய போராட்டம் நாட்டின் மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரவ இருந்ததால் மத்திய அரசு பணிந்துள்ளது” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment