தேர்தல்களையொட்டி அறிவிக்கப்படும் நிதிநிலை அறிக்கைகள்மீது எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம். வழக்கமாக மார்ச் மாதம் 20-ம் தேதிக்கு மேல்தான் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யும். தேர்தல் ஆண்டுகளில் சற்று முன்னரே தாக்கல் செய்வது வழக்கம். நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த 2004-ம் ஆண்டு, பிப்ரவரி 11-ம் தேதி அ.இ.அ.தி.மு.க. அரசால் அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை (2004-05) தாக்கல் செய்யப்பட்டது; 2009-ம் ஆண்டு தி.மு.க. அரசு பிப்ரவரி 17-ம் தேதி நிதிநிலை அறிக்கையை (2009-10) தாக்கல் செய்தது. தேர்தல் அறிவிப்பு வந்த பின்பு அரசு புதிய திட்டங்கள், கொள்கைகள் வெளியிடக் கூடாது என்பதால் இந்த நடைமுறை. அதன்படி இந்த ஆண்டும் வழக்கத்தைவிட ஒரு மாதம் முன்னரே மாநில அரசின் நிதிநிலை அறிக்கை 2014-15 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரப் பின்புலம்
இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் கே. ரோசய்யா கடந்த நிதியாண்டு (2012-13) தமிழகப் பொருளாதாரம் 4.14% வளர்ச்சியடைந்தது எனவும் இந்த ஆண்டு (2013-14) 5% என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் சுணக்கம் இரண்டு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று, அரசின் வரிவருவாய் குறையும், அதே நேரத்தில் அரசின் செலவுகளைக் குறைக்க முடியாமல், சில நேரங்களில் அதனை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் வரும்.
வரி வருவாய்
மாநில உள்நாட்டு உற்பத்தி (நடப்பு விலையில்) இந்த நிதியாண்டில் 17.12% வளர்ச்சியும் அடுத்த நிதியாண்டில் 16.50% வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையை இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ள நீண்ட கால நிதித் திட்டம் கூறுகிறது. நம் மாநில உற்பத்தியில் அரசின் சொந்த வருவாயின் பங்கு 2011-12 தொடர்ந்து அதிகரித்துவருவதால், பொருளாதார வளர்ச்சியின் சுணக்கம் பெரிய அளவில் மாநில வருவாயைப் பாதிக்கவில்லை. இதில் குறிப்பாக, மதுபான வரி வருவாயின் பங்கு அதிகம். மதுபான உற்பத்தி மீதான கலால் வரி வருவாயும் மதுபான விற்பனை வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்துவருவதால், அரசுக்கு வரி வருவாய் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.
நடப்பு நிதியாண்டைவிட, அடுத்த நிதியாண்டில் மாநிலப் பொருளாதார வளர்ச்சி 16.50% இருந்தாலும் மாநில அரசின் சொந்த வரி வருவாய் 9.53% மட்டுமே வளரும் என்றும் மாநிலப் பொதுச்செலவு 10.58% மட்டுமே வளரும் என்று நிதிநிலை அறிக்கை கூறுகிறது.
நிதிப் பற்றாக்குறை
ஒரு ஆண்டில் மாநில வருவாய்ப் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்றும், நிதிப் பற்றாக்குறை உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது என்றும் மாநில அரசின் ‘நிதிப் பொறுப்புச் சட்டம்’ கூறுகிறது. வருவாய் கணக்கில் பற்றாக்குறை ஏதும் இல்லாமல் நிதிப் பற்றாக்குறையை மூன்று சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துவது சட்டப்படி கட்டாயம் என்பதால், புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது அரசுக்குச் சிரமமாக இருந்திருக்கிறது.
செலவுத் திட்டங்கள்
இந்த நிதியாண்டில்கூட வடகிழக்குப் பருவமழை குறைவாக இருந்ததாலும், தென்மேற்குப் பருவமழையால் பெரிய பயன் ஏதும் கிடைக்காததாலும், விவசாய உற்பத்தி குறைவாகவே இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மானியம் வழங்க வேண்டிய அவசியம் வரும். இதற்காகப் பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ. 242.54 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது பலருக்கும் ஏமாற்றம் அளிக்கலாம். அதே நேரத்தில், தேசிய விவசாய வளர்ச்சித் திட்டம், நீர்வள - நிலவளத் திட்டம், விவசாய நடவடிக்கைக்கு இயந்திரம் வழங்குதல், தேசியத் தோட்டக்கலைத் திட்டம், தமிழ்நாடு பஞ்சு விவசாயத் திட்டம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத் தக்கது.
தமிழ்நாட்டில் மக்கள்தொகை பெருகிவருவதும், குறிப்பாக 15-59 வயதுடையோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும். இதனை எதிர்கொள்ளும் விதமாகத் தொழில் திறன் வளர்ப்பதற்காகப் பெரிய முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் எடுக்காதது வருத்தமளிக்கிறது.
மின் உற்பத்தியில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் எந்த நிலையில் உள்ளன, அவற்றின் மூலம் எவ்வளவு மின் உற்பத்தி பெறுகிறோம், நம் மின் தேவை அடுத்த ஆண்டுகளில் எவ்வளவு வளரும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்ற அறிவிப்புகள் இல்லாமல், மின் போக்குவரத்து, மின் பகிர்வுக்கான திட்டங்கள் மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளன.
தமிழகத்தில் சமூக-பொருளாதார வரலாற்றில் சமூக நீதி ஒரு மைல் கல். இது எல்லா ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கையிலும் பிரதிபலிக்கும். அந்தத் தொடர்ச்சி விட்டுவிடாமல், அடுத்த நிதியாண்டிலும், உணவு, கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, குடிநீர் என்ற எல்லா சமூகச் செலவுகளும் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.
கிராமங்களில் 2000 பொதுவான சேவை மையங்களைத் திறப்பது, அதேபோன்ற மையங்களை நகரங்களிலும் திறப்பது, மதுரை-தூத்துக்குடி ‘தொழில் மேம்பாட்டு வழித்தடம்’ தாழ்வாரம் உருவாக்குவது, சிப்காட்டின் இரண்டு திறன் மேம்பாட்டு மையங்கள் திறப்பது ஆகிய புதிய திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்றாலும், இந்தத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுபற்றி நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பு இல்லை. அந்தந்தத் துறைகளின் மானியங்கள் சமர்ப்பிக்கப்படும்போது, நிதி ஒதுக்கீடுபற்றி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்போம்.
2014-15 ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வந்ததால், அதில் கவர்ச்சித் திட்டங்களை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே. ஆனால், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மாநிலத்தை மீட்டெடுக்கப் புதிய முயற்சிகள் ஏதும் இதில் இல்லை. அதே நேரத்தில், நிதிநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் மாநில அரசு வெற்றிபெற்றுள்ளது.
- இராம. சீனுவாசன், இணை பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
No comments:
Post a Comment