கல்வி என்பது தலித் மக்களுக்கான சலுகை அல்ல. அவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சமூக நீதி. வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப்பட்ட காலத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பெற்ற உயர் கல்விப் பட்டங்களுக்குப் பின்னால் இருந்த பொருளாதாரச் சிரமங்கள், தடைகள் எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்கிறோம். உயர் கல்வி பெறுவதற்காகத் தான் சந்தித்த பணத் தடைகளை எதிர்கால தலித் மாணவர்கள் யாரும் எதிர்கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் பல கல்வி உதவித்திட்டங்களைத் தன்னுடைய காலத்தில் அவர் முன்மொழிந்தார்.
ஆரம்பக் கல்வி, மேல்நிலைக் கல்வி போன்ற வற்றுக்கும் அப்பால் உயர் கல்வியிலும் தலித் மாணவர்கள் மேல்நிலை பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு தலித் மாணவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கல்வி உதவித் திட்டம்தான் ‘10-ம் படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம்'. எனினும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திட்டம் சரிவரச் செயல்படுத்தப்படவில்லை. இந்தத் திட்டத்தின் பயனாளிகளான தலித் மாணவர்களும் கல்லூரி ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருக்காததால், இந்தத் திட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தையும் கவனிக்க முடியாமல் போய்விட்டது.
சுயநிதிக் கல்லூரிகளால் பின்னடைவு
1980 வரையிலும் எந்தச் செலவும் இல்லாமல் பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற தொழில் படிப்புகளைப் படித்து முடித்த தலித் மாணவர்கள், 1985-க்குப் பின் புற்றீசல் போல சுயநிதிக் கல்லூரிகள் பெருகியதும் மாபெரும் பின்னடைவைத் தொழில் படிப்புகளில் எதிர்கொண்டனர். சுயநிதிக் கல்லூரிகள் தன்னிச்சையாக நிர்ணயித்த அதிக அளவிலான கட்டணத்தொகையைச் செலுத்த முடியாமல் திணறினார்கள்.
1985-க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் மத்திய அரசு முழுமையாக வழங்கிய ‘10-ம் படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகை'யை அளிக்க மறுத்ததுதான் காரணம். இந்த அரசுகளுக்கு ஆதரவு அளித்துவந்த தலித் கட்சிகளும்கூடத் தங்களின் கல்வி உரிமை பறிபோகிறதே என்று பதறி, அரசிடம் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. இதனால், தொழில் படிப்புகளில் குறிப்பாக பொறியியல், மருத்துவப் படிப்புகளில் தலித் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் அபார வீழ்ச்சியைச் சந்தித்தனர். இந்த நிலையில், தங்குதடையின்றி சுயநிதிக் கல்லூரிகளிலும் தலித் மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசால் வழங்கப்படும் முழுக் கட்டணத்தையும் கல்வி உதவித்தொகையாக வழங்க போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டம் வழிவகை செய்தது.
ரூ.150 கோடியிலிருந்து ரூ.600 கோடி
அதன் அடிப்படையில், அரசாணை எண்: 6-ஐ அரசாணை எண்: 92-ஆக மாற்றி நிறைவேற்றும் பொருட்டு, அண்மையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரின் துணை நிதிப் பட்டியலிலிருந்து சுமார் ரூ.600 கோடியை தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக ஒதுக்கி அறிவித்தது. கடந்த தி.மு.க. அரசுடன் ஒப்பிடும்போது வெறும் ரூ.150 கோடி அளவில் மட்டுமே இருந்த கல்வி உதவிக்கான ஒதுக்கீட்டை தற்போதைய அ.தி.மு.க. அரசு நான்கு மடங்கு உயர்த்தியது ஒரு வகையில் பெரும் சாதனைதான். ஆனால், தற்போது போய்க்கொண்டிருக்கும் மாணவர் சேர்க்கையைக் கணக்கில் கொண்டால் ரூ.600 கோடி போதாது ரூ.900 கோடி தேவைப்படுகிறது.
சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் தலித் மாணவர்களுக்கு முழுக் கல்விக் கட்டணத்தையும் அளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டையும் உள்ளடக்கியதுதான் இந்த ரூ.600 கோடி. அறிக்கையின்படி பார்த்தால், பொறியியல் படிப்பில் கவுன்சிலிங் மூலமாகச் செல்ல ஆண்டுக்கு ரூ. 40,000-மும், சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் செல்ல ரூ. 70,000-மும் அரசாணை: 6-லும் அரசாணை: 92-லும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நடப்புத் துணைநிதிப் பட்டியலில் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழக சட்டமன்றத்தால் ஒப்புதல்பெற்று ஒதுக்கப்பட்ட ரூ.600 கோடியை நடைமுறைப்படுத்தும் அரசாணையை மறுத்து, “சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தலித் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதியை அளிக்க முடியாது” என்று தமிழக நிதித் துறை, சட்டமன்றத்துக்கும் மேலான ஓர் அதிகாரத்தைக் கையில் எடுத்திருப்பதாக ஓய்வுபெற்ற கூடுதல் தலைமைச் செயலர் இரா. கிறிஸ்து தாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். குற்றம்சாட்டியுள்ளார்.
நிதித் துறையின் எதேச்சதிகாரம்
சாதாரண கவுன்சிலிங் முறையில் வெறும் 15,000 தலித் மாணவர்கள்தான் பொறியியல் படிப்பில் சேர முடியும். இந்த அளவில்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் 2013-ல் தற்போது 15,000 தலித் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், அரசாணை: 92-ஐப் பயன்படுத்தி 2013-ம் ஆண்டில் சுயநிதிக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்காக 15,000 தலித் மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் (மேனேஜ்மெண்ட் கோட்டா) சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 13,000-க்கும் மேல் பொறியியல் படிப்பில் தலித் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதில்லை. இந்தப் புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது, தலித் மாணவர்களின் தேர்ச்சி வீதமும் சேர்க்கை ஆர்வமும் தற்போது இருமடங்கு உயர்ந்திருப்பது இதுவரையிலும் இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை. பொருளாதாரச் சுமைகளில் முட்டிமோதி, பொறியியல் படிக்கும் தலித் மாணவர்களும் கடன் வாங்கித்தான் படிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பார்த்தால், மருத்துவப் படிப்புக்கு கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தும் ஓராண்டுக்கு 25 தலித் மாணவர்களாவது பணம் கட்டக் கல்வி உதவியில்லாமல் படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதும் நீடித்துக்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தலைகீழாக மாற்றி, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தலித் மாணவர்களுக்கு ஒருவித சமச்சீர் முறை கிடைக்கச் செய்யக் கொண்டுவரப்பட்ட அரசாணை: 105-ஐ தமிழக முதலமைச்சருக்குத் தெரியாமலேயே, தமது அதிகார வரம்பை மீறி, தனி ஆணை ஏதுமின்றி, அதில் உள்ள சுயநிதிக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டை நிதித் துறையானது தணிக்கை செய்துவிட்டு, சட்டமன்றம் ஒப்புதல் அளித்த நிதியை வழங்க மாட்டோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல என இரா. கிறிஸ்து தாஸ் காந்தி குற்றம்சாட்டுகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை அடிப்படை உரிமையாக்கி, ‘அரசு உத்தரவாதப்படுத்தும் இறையாண்மை உறுதி' தலித் மாணவர்களின் உயர் கல்வியிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சுயநிதிக் கல்லூரிகளில் தொழில் படிப்புகள் படிக்க தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.600 கோடியை அரசாணை: 92-ன்படி அப்படியே வழங்க வழிவகை செய்வதுடன், அந்தத் தொகையை ரூ.900 கோடியாகவும் உயர்த்த வேண்டும். இதற்காக, பட்டியல்இனத் துணைத் திட்டத்திலிருந்து பிற துறைகளுக்குத் திருப்பி விடப்படும் நிதியைத் தடுத்து நிறுத்தி, அரசாணை: 106-ஐ காலாவதியாக்கி, அரசாணை எண்: 6 மற்றும் அரசாணை எண்: 92-ஐ காபந்துசெய்து, உயர் கல்வியில் தலித் மாணவர்களின் கனவு நனவாக்கப்பட வேண்டும்.
பாராமுகம், கருணை இரண்டையும் தாண்டி தலித் மாணவர்களுக்கான சமூக நீதியை இனியும் தாமதமில்லாமல் அரசு உறுதிப்படுத்த வேண்டிய காலம் இது. அதுமட்டுமல்லாமல் தலித் மாணவர்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம்.
- அன்புசெல்வம், யு.ஜி.சி. ஆய்வாளர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: anbuselvam6@gmail.com
No comments:
Post a Comment