Sunday, 23 February 2014

தலைவர்கள் அறிவோம்: முத்துராமலிங்கத் தேவர்

விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார். வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர்.
பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்.
இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.
20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.
மன்னராக இல்லாவிட்டாலும் மன்னராக விளங்கியவர். தமிழகம் உயர தமிழ் வளர தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை முத்துராமலிங்கத் தேவர்.
பிறப்பு: தமிழகத்தின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார். தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
கல்வி: இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்பப் பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927 இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்க தேவருக்குச் சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் 1939 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் மறைந்தார்.
குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்:
தென்னக அரசியலில் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதத்தை தேவர் கையில் எடுத்ததும் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கர்களின் பார்வை திரும்பியது.  1920 ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் மேற்கண்ட பகுதிகளில் இவர் சுற்றுப்பயணம் செய்து மக்களை திரட்டினார்.
அப்போது 19 கிராமத்தைச் சேர்ந்த மறவர் சமூகத்தினர் இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசால் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடத்தினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்ததால் இந்த சட்டம் நீக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டு தனது பத்தொன்பது வயதில் சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்’ என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.
‘ஐயா, இந்த வழக்குகளை நடத்த வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன்’ என்றவுடன், பெரிய குடும்பத்துப் பிள்ளை அல்லவா? சீனிவாச அய்யங்கார் அவ்வளவு பெரிய மாளிகையில் அவரை வரவேற்று உபசரித்து, ‘நான்கு நாள்கள் காங்கிரஸ் மாநாடு இங்கே நடக்கிறது. அந்த வேலையில் இருக்கிறேன். நான்கு நாள் கழித்து, இந்த வழக்கு விசயங்களை, இந்த ஆவணங்களைப் பார்க்கிறேன்’ என்று சொல்கிறார்.
பிறகு சில நிமிடங்கள் கழித்து அவர் கேட்கிறார், ‘இந்த நான்கு நாள்களும் நீங்கள் இங்கேயே தங்க முடியுமா?’ என்று கேட்கிறார். எதற்காக ஐயா கேட்கிறீர்கள்? என்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பெரிய ஓட்டல்கள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்கள் கிடையாது. விருந்தினர் விடுதிகள் கிடையாது. தலைவர்களை முக்கியமான வீடுகளில்தான் தங்க வைப்பார்கள். நாட்டின் புகழ் வாய்ந்த தலைவர்கள் அவர் காந்தியாராகட்டும், நேருவாகட்டும், திலகராகட்டும் அந்தத் தலைவர்களை எல்லாம், வீடுகளில் தங்கவைப்பார்கள். அது வழக்கம்.
‘நான்கு நாட்கள் நான் சொல்கின்ற ஒரு சிறுபணியை, நீங்கள் செய்ய முடியுமா?’ என்று கேட்கிறார். தேவர் திருமகன் ஆங்கிலமும் நன்கு பேச வல்லவர், ‘சொல்லுங்கள் செய்கிறேன்’ என்கிறார்.
‘ஒன்றுமில்லை; வட இந்தியாவில் இருந்து பெரிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு தலைவருடைய வீட்டில், அவரோடு இருந்து அவரை மாநாட்டுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அவருடைய செளகரியங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை உடனிருந்து கண்காணித்து உதவிசெய்வதற்கும் உங்களால் இயலுமா?’ என்றார். ‘தாராளமாகச் செய்கிறேன், மகிழ்ச்சியாகச் செய்கிறேன்’ என்கிறார். தேவர் வாழ்விலே அதுதான் திருப்பம்.
இந்த விலாசத்தில் இருக்கின்ற வீட்டுக்குச் சென்று, அந்தத் தலைவரிடத்தில் இவரை அறிமுகப்படுத்தி வைத்து, ‘உங்களுக்கு உதவியாக இருப்பார் இந்த இளைஞர்’ என்று சொன்னார். அந்தத் தலைவர்தான் நேதாஜி. இப்படித்தான் உறவு மலர்ந்தது. சந்தர்ப்பங்கள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்துகின்றன பாருங்கள்!
நாட்டுக்கு அருட்கொடை அவர்கள் சந்திப்பு. இத்தென்னாட்டுக்கு அருட்கொடை அந்தச் சந்திப்பு.
வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு நான்கு நாட்களும் உறுதுணையாக தேவர் இருந்த அந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், அவர் பொது வாழ்வுக்கு வருகிறார்.
அப்போதுதான வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்கார் தலைமையில் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அதன் பிறகு தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார்.
1936 மாவட்ட வாரிய தேர்தல்: குற்றபரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936 ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்காக உழைத்தார். பின்னாளில் வந்த மாவட்ட வாரிய தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.
1937 மாநில தேர்தல்: 1937 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திட இளைஞர்களை திரட்டினார். தேவரின் இந்த செயல்பாடுகள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.
1937 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றிபெற்றார்.
பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய அரசின் முதல்வரான C.ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர்.
காமராஜர் தேர்தலில் நிற்க முடியாத நிலையில் இருந்த போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி சாத்தூர் தொகுதியில் நிற்க வைத்து கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
தொழிலாளர்களின் தோழன்: 1930 ல் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தேவர் பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு TVS தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.
திரிபுரி காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்: 1939 ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52-வது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் மீண்டு போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவக திரட்டினார்.
பின்னர் காந்தியின் தலையீட்ட்டால் நேதாஜி அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22 ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் நேதாஜியுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6 ஆம் நாள் நேதாஜி மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் நேதாஜியை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினை கூட்டினார்.
சிறை வாசம்: வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று காரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. இதுபோன்ற அடக்கு முறைகளுக்கு அடிபணியாத தேவர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார்.
சிறை வாசத்திற்கு பின்பு: மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948 -ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர் கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழத்தின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று தேவர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் கூட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948 -ல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.
1952 பொது தேர்தல்: 1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டப்பேரவை என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டப்பேரவை உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு:
1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் நாக்பூரில் நடந்தது. இதில் சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணை தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர்
1957 பொது தேர்தல்: 1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.
தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இம்முறையும் இரண்டு தொகுதியிலும் வெற்றிபெற்றார். இந்த முறை தேவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை துறந்தார்.
இராமநாதபுரம் கலவரம்: தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அமோக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கரையாக்கபட்டன.
இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17 ஆம் நாள் தில்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலுவுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தலித் சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.
இதற்கிடையில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் என்கிற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் துரதிஷ்டவசமாக கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சற்று நேரத்தில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு, இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் இந்த வழக்கில் சம்மந்த பட்டிருப்பாரோ என்று சந்தேகிக்க கூட இடமில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு. தேவரை நிரபராதி என்று இந்த வழக்கில் இருந்து 1959 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார்.
வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ்(INDC - முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.
பின்னர் 1962 -ல் மீண்டு லோக்சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஓரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனாலும் இவர் தில்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது. தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்று விடுகிறார்.
மறைவு: வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காகவே வாழ்ந்த உத்தமத் தலைவர் பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் அவரது 55-வது பிறந்த நாளன்று இயற்க்கை எய்தினார். இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும். 1957-ல் இம்மானுவேல் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.
கொள்கைகள்: * ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
* தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்
* வீரமற்ற விவேகம் கோழைத்தனம் - விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும். ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். அதேநேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சி தனது அழிவின் பாதையில் சென்றது. இந்த கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறந்த பேச்சாளர்: தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.
ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.
தங்க கவசம்: 
ஆள் தூக்கிச் சட்டத்தை அடியோடு அகற்றுவதற்குத்
தோள்தட்டி நின்றாரடி கிளியே
துணிவுள்ள தேவர் சிங்கம் 
என்ற நாட்டுப்புறப் பாடலுக்கேற்ப தன்னுடைய வாழ்வில், அடக்குமுறைகளை எதிர்த்து நாட்டுக்காகப் போராடிய தலைவர், தனக்கென்று எதையுமே நாடிக்கொள்ளாத தேடிக் கொள்ளாத, விளம்பரப்படுத்திக்கொள்ளாத தலைவருக்கு  இன்றைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2010 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.

No comments:

Post a Comment