அரசியல் வாழ்க்கை என்பதே அர்த்தமற்று, அவநம்பிக்கைளைத் தோற்றுவிக்கும் சூழ்நிலையில், ஒரு சிலரின் அரசியல் வாழ்க்கை எல்லையில்லா நம்பிக்கை ஊற்றுக்கண்களை மனதுக்குள் திறந்துவிடுகிறது. கோவையில் சில நாட்களுக்கு முன் தனது 94-வது வயதில் காலமான தோழர் பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்று.
பொதுவாழ்வில் எளிமை
டாக்டர் சுப்பராயன், ராதாபாய் தம்பதியின் நான்காவது மகளாக 1916 மார்ச் 15-ம் நாள் பிறந்தார் பார்வதி. சுப்பராயன் குமாரமங்கலம் ஜமீன்தார். சென்னை ராஜதானியின் பிரதம அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்று ராஜாஜியின் அமைச்சரவையிலும், நேருவின் அமைச்சரவையிலும் மந்திரியாக இருந்தவர். பின்னர், பம்பாய் மகாண ஆளுநராகவும் பணியாற்றினார். அதேபோல, ராதாபாயும் முதல் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். இந்திய ராணுவத்தில் தலைமைத் தளபதியாக இருந்த, ஜெனரல் பரமசிவம் குமாரமங்கலம், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றிய கோபால் குமாரமங்கலம், இந்திரா காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் ஆகியோர் இவரது உடன் பிறந்த சகோதரர்கள்.
இப்படிப்பட்ட செல்வாக்கான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காலமெல்லாம் எளிமையின் வடிவமாகவே வாழ்ந்தார் பார்வதி.
சென்னை ராஜதானியின் பிரதம அமைச்சராக சுப்பராயன் இருந்தபோது, அரசுக்குச் சொந்தமான கார் சுப்பராயன் வசம் இருந்தது. ஆனால், அவருடைய செல்ல மகளான பார்வதியோ நடந்தும் ரிக்ஷாவிலும்தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தந்தையின் இந்த எளிமையும் நேர்மையும் மகளிடமும் அப்படியே தொடர்ந்தன.
பார்வதி உயர் கல்விக்காக லண்டன் அனுப்பப்பட்டார். அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். அந்தக் காலத்தில் இவருடைய வகுப்புத் தோழியாக இருந்தவர்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி. இருவரும் ஒன்றாக இணைந்து டென்னிஸ் ஆடிய நிகழ்வைப் பலமுறை குறிப்பிட்டுள்ளார் பார்வதி கிருஷ்ணன்.
உலக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருந்தது. லண்டனில் படித்த இந்திய மாணவர்கள் நேரடியாக அரசியலில் பங்குபெறத் தொடங்கினார்கள். தோழர் பார்வதியும் அவரது சகோதரரும் பாசிஸ எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்றார்கள். இந்தச் சூழ்நிலைதான், பார்வதியை ஒரு கம்யூனிஸ்ட் ஆக்கியது. லண்டன் மாணவர் அரசியலில் செயல்பட்டுவந்த, என்.கே.கிருஷ்ணனை அப்போதுதான் சந்தித்தார் பார்வதி. அன்றைய கேரளத்தின் கொச்சியில் அமைந்த நாடாவரம்பா என்னும் கிராமத்தில் பிறந்தவர் கிருஷ்ணன். எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இன்டர்மீடியட்டில், சென்னை ராஜதானியிலேயே முதல் மதிப்பெண் பெற்று, ஐ.சி.எஸ். படிக்க லண்டனுக்கு வந்தவர். அவரைக் காதலித்து மணந்தார் பார்வதி.
ஆனால், திருமணம் படாடோபமாக அல்ல; மிக எளிமையாகவே நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்களாக இருந்த அவர்களின் திருமணம் எப்படி நடந்தது என்பதற்கு என்.கே.கிருஷ்ணன் தனது சுயசரிதையில் குறிப்பிடும் வரிகள் உதாரணம்:
“பதிவுத் திருமணம் செய்துகொள்வது என்று முடிவுசெய்தோம். கையில் காசு இல்லை. தோழர்கள், அவரவர்கள் கையிலிருந்த சிறு தொகையைக் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் திரட்டினோம். திருமணப் பதிவுத்தொகை போக, கொஞ்சம் தொகை மிஞ்சியது. நாங்கள் ஐந்தாறு பேர் மட்டும்தான். நான் வழக்கமாகச் செல்லும் இரானியன் விடுதிக்குச் சென்றோம். அங்கு, டீ குடித்துச் சமோசா சாப்பிட்டோம். அதுதான் எங்கள் திருமண விருந்து. ஆனால் அன்று, நான் அருந்திய டீயின் சுவை, எந்த டீயிலும் எந்தக் காலத்திலும் எனக்குக் கிடைத்ததில்லை.''
சிறந்த நாடாளுமன்றவாதி
தன் வாழ்க்கையையே முழு நேர அரசிய லாக்கிக்கொண்ட பார்வதி கிருஷ்ணன், சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், தேர்ந்த தொழிற்சங்கவாதியாகவும் செயல்பட்டார். போராட்டங்களில் ஈடுபட்டுப் பலமுறை சிறை சென்றுள்ளார். 1949-ல் இவர் மீது கடுமையான குற்றம் சுமத்தப்பட்டு, கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கையில், ஒரு தாய் என்ற முறையில் இவர் அடைந்த சிரமங்கள் வார்த்தைகளால் விவரிக்கக் கூடியவை அல்ல.
முதல் நாடாளுமன்றத் தேர்தலில், அதாவது 1952-ல் நீலகிரி தொகுதியில் பார்வதி கிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. 1954-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் கோவை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன் வாழ்க்கையை எப்போது ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வது என்று முடிவெடுத்தாரோ, அந்தக் கணத்திலிருந்து இறுதிமூச்சு வரை கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்தவர் பார்வதி கிருஷ்ணன். தான் ஒரு ஜமீன்தாரின் மகள் அல்லது செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவரின் வாரிசு என்ற எண்ணம் ஒருபோதும் அவரிடம் இருந்ததில்லை. அதனால்தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதாலேயே அவர் தேடப்படும் குற்றவாளியாக அலைந்தார். தலைமறைவு வாழ்க்கையைச் சுமந்தார். லண்டனில் பெற்ற கல்வி இருந்தபோதும் பசியையும் வறுமையையும் எதிர்கொண்டார்.
அரசியல் - வாரிசு அரசியலாகி, வியாபார அரசியலாக மாறிவிட்ட காலகட்டம் இது. அரசியலில் நேர்மை, கொள்கையில் உறுதி, அர்ப்பணிப்பு கொண்ட செயல்பாட்டில் போர்க்குணம் என்பவையெல்லாம் வெறும் வார்த்தைகளாகவே பார்க்கப்படும் சூழலில், கற்றுக்கொள்வதற்கு நிறையப் படிப்பினைகளைத் தந்துவிட்டே சென்றிருக்கிறார் தோழர் பார்வதி கிருஷ்ணன்.
சி.மகேந்திரன், மாநிலத் துணைச் செயலர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
No comments:
Post a Comment