Wednesday, 12 February 2014

சரோஜினி நாயுடு பிறந்த தினம் (பிப். 13- 1879)

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு சுதந்திரப் போராளி. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குடும்பத்தின் மூத்த மகளாக சரோஜினி நாயுடு பிறந்தார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிஸாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

12-வது வயதில் சரோஜினி நாயுடு அவரது மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, பல்வேறு தலைப்பிலான புத்தகங்களைப் படித்தார். 1895 ஆம் ஆண்டு, பதினாறு வயதில் முதன் முதலாக லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்காக சென்றார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார்.

1905-ம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார். 1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார்.

ஜவகர்லால் நேருவை 1916-ம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தார். 1925-ம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார். 1919-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலெட் சட்டத்தினைப் பிறப்பித்தது. இதன் வழியாக விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்பட்டது.

மோகன்தாஸ் காந்தி அவர்கள் எதிர்த்துப் போராட ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இதில் முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார். ஜுலை 1919-ம் ஆண்டு சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதர் ஆனார். ஜுலை 1920-ல் அவர் இந்தியாவிற்கு திரும்பினார். ஆகஸ்ட் 1 அன்று மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 1924-ம் ஆண்டு, கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் ஒருவராக சரோஜினி அவர்கள் திகழ்ந்தார். அக்டோபர் 1928-ம் ஆண்டு நாயுடு நியூ யார்க்கிற்கு சென்றார். அங்கு நிலவிய ஆப்ரிக்க அமெரிக்க மற்றும் அமெரிக்க இந்திய இனப் பாகுபாடுகளைக் கண்டு கவலையுற்றார். அங்கிருந்து திரும்பிய பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினரானார்.

ஜனவரி 26, 1930-ல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று மோகன்தாஸ் காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி அவர்களுடன் ஜனவரி 31, 1931-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மோசமான உடல் நிலை காரணமாக நாயுடு உடனடியாகவும் காந்தி 1933-ம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டனர்.

1931-ம் ஆண்டு அவர் காந்திஜி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார். அக்டோபர் 2, 1942-ம் ஆண்டு அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மோகன்தாஸ் காந்தி அவர்களுடன் நாயுடு அவர்கள் ஒரு பாசமான உறவினைக் கொண்டிருந்தார். காந்தி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்று அழைப்பார்.

1947-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நாயுடு பங்கேற்றார். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ஆளுனராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமைடைந்தர்.

No comments:

Post a Comment