Saturday, 15 February 2014

வேதநாயகம் பிள்ளையின் மரபு முகம்

தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய ச. வேதநாயகம் பிள்ளைக்கு இரண்டு முகங்கள் உண்டு. முதலாவது அவரது மரபுப் புலமையும் செயல்பாடும். உ.வே. சாமிநாதையரின் ஆசிரியரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்றிருந்தவருமாகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் மரபிலக்கியங்களைக் கற்றவர் வேதநாயகம் பிள்ளை.
1858ஆம் ஆண்டு ‘நீதி நூல்’ எழுதினார். 400 செய்யுள்களைக் கொண்ட இதை 1859இல் வெளியிட்டார். பின்னர் மேலும் 200 செய்யுள்கள் சேர்த்து 1860இல் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். இந்நூலுக்குச் சாற்றுகவி எழுதிய 56 புலவர்களில் திருவருட் பிரகாச வள்ளலாராகிய இராமலிங்கம் பிள்ளையும் ஒருவர். இந்நூலில் அவர் கூறியுள்ள பல்வேறு நீதிகள் அக்காலகட்டத்தை நேராகவும் எதிர்மறையாகவும் காட்டக்கூடியன. அவரது பரந்த உள்ளத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களும் அந்நூலில் உள்ளன. ‘பூதலப் பொருள்கள் யார்க்கும் பொதுமை’ என்று எழுதியுள்ளார். ‘ஒளிமுடி யொடும் பிறந்தே உலகம் ஆண்டவரும் இல்லை; எளியராய் ஓடொன்று ஏந்தி இங்கு உதித்தவரும் இல்லை’ என்பதும் நீதிநூல் கருத்து.
அவர் எழுதிய பிற செய்யுள் நூல்கள்: பெண் மதி மாலை, திருவருள் மாலை, தேவ தோத்திர மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி. மாலை, அந்தாதி ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் அவர் எழுதியிருக்கிறார். பெண்மதி மாலை நூலில் அக்காலப் பெண்களுக்கு அறிவுரைக் கருத்துக்கள் பலவற்றைச் சொல்லியுள்ளார். அவையெல்லாம் பெரும்பாலும் மரபான விழுமியம் சார்ந்தவையே. ‘புருஷன் நல்வார்த்தை தட்டாதே’, ‘மாமிமேல் வன்மம் காட்டாதே’, ‘தலையணை மந்திரம் தீது’ முதலிய கருத்துக்களை வலியுறுத்துகிறார். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதையும் அங்கங்கே வலியுறுத்தியுள்ளார். ‘ஞான புஸ்தகங்களை வாசி’ என்றும் ‘கற்றவளே துரைஸாநி’ என்றும் எழுதியுள்ளார். பிற நூல்கள் அனைத்தும் பக்தி சார்ந்தவை.
சர்வ சமய சமரசக் கீர்த்தனை என்பது அவர் எழுதிய கீர்த்தனை நூல். தெலுங்கு மொழியில் கர்நாடக சங்கீத ராகங்கள் பாடப்பட்டுவந்த காலத்தில் தமிழ் மொழியில் கீர்த்தனைகளை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை. இறைவனைப் போற்றிப் பாடும் கீர்த்தனைகளைத் தமிழில் எழுதியது மட்டுமல்ல, அவர் காலத்துச் சமூக நிலைகளையும் கீர்த்தனைகளில் முன்வைத்தார். தாது வருடப் பஞ்சம் ஏற்பட்ட கொடிய காலத்தில் ‘பஞ்சம் தீர் ஐயா - உனையன்றித் தஞ்சம் ஆர் ஐயா’ என்னும் கீர்த்தனையைப் பாடினார். அக்காலத்தில் அதிகாரியாக இருந்த அவர் கஞ்சித் தொட்டி அமைத்து மக்கள் பசியைப் போக்க முயன்றார். அதனால்தான் கோபாலகிருஷ்ண பாரதியார் ‘புருஷருள் மேரு’ என்று பாராட்டிப் பாடினார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘குளத்தூர் கோவை’ என்னும் ஓர் சிற்றிலக்கிய நூலை வேதநாயகம் பிள்ளையின் மீது பாடினார்.
நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்பதால் அங்கு நடக்கும் பல்வேறு நடைமுறைகளை வேதனையோடு பதிவு செய்திருக்கிறார். ‘அண்டப் புரட்டன் அந்த வாதி - அகிலாண்டப் புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி’ என்று எழுதியுள்ளார். அக்காலத்தில் இருந்த லஞ்ச நடைமுறை பற்றிப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
வேதநாயகம் பிள்ளை பாடிய தனிப்பாடல்கள் பல பெருஞ்சுவை தரும் நயமுடையவை. ஒருமுறை சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்து அளவளாவியிருந்த வேதநாயகம்பிள்ளை திரும்பி வந்தபின் அவருக்குச் செய்யுள் வடிவில் கடிதம் எழுதினார்.
ஊர்வந்து சேர்ந்தேன் என்றன் உளம்வந்து சேரக் காணேன்
ஆர்வந்து சொலினும் கேளேன் அதனையிங் கனுப்பு வாயே.
தமிழ்ச் செய்யுள்கள் கட்டுவதில் நல்ல பயிற்சியுடையோருக்கே அமையக் கூடிய இயல்பான சொல்லோட்டமும் சந்தமும் வேதநாயகம் பிள்ளைக்கு கைவந்திருந்தது. தமிழ் சார்ந்து சிந்திப்பதற்கு இந்த மரபு முகம் அவருக்கு உதவியது. இதற்கு மாறான இன்னொரு முகத்தையும் கொண்டிருந்தார். அது நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம்.

No comments:

Post a Comment