Wednesday, 26 February 2014

தமிழக மாவட்டங்களின் தனி நபர் வருமானம்

தமிழக மாவட்டங்களின் தனி நபர் வருமானத்தை ஒப்பிட்டு பார்த்தால், மாநிலத்தில் கடைசி நிலையில் பெரம்பலூர், அதைவிட நான்கு மடங்கு அதிக வருமானத்துடன் முதல் இடத்தில் கன்னியாகுமரி. இதிலிருந்தே மாவட்டங்களிடையே எவ்வளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.
அண்மையில் தமிழ் நாடு அரசு வெளியிட்ட ‘புள்ளியியல் தகவல் 2013’ என்ற அறிக்கையிலிருந்து இந்தத் தகவல்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் மாநில சாராசரி தனி நபர் வருமானத்தை விட குறைவான வருமானத்தை பெற்றுள்ளன. மீதம் உள்ள 14 மாவட்டங்கள் சராசரியை விட அதிக தனி நபர் வருமானத்தை பெற்றுள்ளன. குறைந்த தனி நபர் வருமானம் உள்ள 18 மாவட்டங்களை பின் தங்கிய மாவட்டங்கள் என்றும், அதிக தனி நபர் வருமானம் உள்ள 14 மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்கள் என்று பிரித்து ஆராய்வோம்.
இந்த மாவட்டங்களை வரைபடத்தில் பார்க்கும் போது பின் தங்கிய மாவட்டங்கள் அனைத்தும் வடமேற்கு (கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி), கிழக்கு (விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர்), காவேரி டெல்டா (நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்), தெற்கு (புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி) என ஒன்றோடு ஒன்று இணைந்த மாவட்டங்கள் (ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளவை). வளர்ச்சி அடைந்த 14 மாவட்டங்கள் வடக்கில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்), மேற்கில் (ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி) தெற்கில் (விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி) என பிரிந்துள்ளன (பச்சை வண்ணத்தில் உள்ளவை).
மாவட்டங்களின் இந்த இரு தொகுப்பை வேறு புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மாவட்டங்களுக்கிடையே உள்ள பொருளாதார இடைவெளி மேலும் அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் வருகிறது.
2004-05 முதல் 2009-10 வரையிலான மாவட்டங்களின் மொத்த உற்பத்தியை ஒப்பிட்டு பார்க்கும் போது, பின் தங்கிய 18 மாவட்டங்களின் வளர்ச்சி 10.9%, இது மாநில வளர்ச்சியான 12.9% விட குறைவு, இதற்கு எதிர்மாறாக, 14 வளர்ந்த மாவட்டங்களின் வளர்ச்சி 13.3%. பின் தங்கிய மாவட்டங்களில் குறைந்த வளர்ச்சியும், முன்னேறிய மாவட்டங்களில் அதிக வளர்ச்சியும் இருப்பது இவற்றிற்கு இடையே உள்ள பொருளாதார இடைவெளியை அதிகப்படுத்தும். மிகவும் பின் தங்கிய மாவட்டமான அரியலூர் 5.7% வளர்ச்சியையும், மிகவும் வளர்ந்த மாவட்டமான கன்னியாகுமரி 16% வளர்ச்சியை அடைந் திருப்பது, புவியியல் ரீதியான பொருளாதார ஏற்றதாழ்வை தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் பின் தங்கிய பதினெட்டு மாவட்டங்களில் ஐந்து தான் மாநில சாராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை அடைந்துள்ளன, ஆனால் முன்னேறிய பதினான்கு மாவட்டங்களில் பதினோரு மாவட்டங்கள் மாநில சராசரியை விட அதிக வளர்ச்சி கண்டுள்ளன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 18 பின் தங்கிய மாவட்டங்களின் மக்கள் தொகை 33,480,399 மாநிலத் மக்கள் தொகையில் இது 46.4%; ஆனால், 14 முன்னேறிய மாவட்டங்களின் மக்கள் தொகை 38,658,559, அதாவது, மாநில மக்கள் தொகையில் இது 53.6%. இவ்வாறு வளர்ந்த மாவட்டங்களில் மக்கள் கூடுவது புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை மேலும் ஒரு புள்ளி விவரம் மூலம் அறியலாம்.
மாவட்டங்களிடையே உள்ள நகரமயமாக்கலை ஒப்பிடும் போது, மாநிலத்தில் 48.4% நகர்மயமாக்கல் இருக்கும் போதும், முன்னேறிய மாவட்டங்களில் அது 62.2% ஆகவும், பின் தங்கிய மாவட்டங்களில் நகரமயமாக்கல் 32.6% ஆகவும் உள்ளது.
மாவட்டங்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு மக்களை வளர்ந்த மாவட்டங்களில் கூடச்செய்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் மக்களுக்கு குடிநீர், கழிவு நீர் வெளியேற்றல், சாலை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்ற பொது சேவைகளை எடுத்து செல்வதில் பாரபட்சம் ஏற்படும். முன்னேறிய மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் அதிக பொது சேவைகள் கேட்டு அரசியல் ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தி அவற்றை பெற முயற்சிப்பது எளிது. முன்னேறிய மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொழில் மற்றும் சேவை நிறுவனகளும் இதற்கு துணை நிற்கும்.
பின் தங்கிய மாவட்டங்களில் நகரமயமாக்கல் குறைவு, கிராமங்கள் பரந்து விரிந்தி ருக்கும். இம்மாவட் டங்களால் அரசியல் ரீதியான நெருக்கடிகள் கொடுத்து தேவையான அளவு பொது சேவைகளை பெற முடியாது. எனவே, புவியியல் ரீதியில் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதல் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் அடிப்படை சமூக பொருளாதார கட்டமைப்பு வசதிகள் சமமாக அளிக்கப் படவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்தின் புவியியல் ரீதியான பொருளாதாரக் காரணிகளை அறிந்து வெவ்வேறு தொழில்களை வளர்க்க வேண்டும். இவ்வாறான புவியியல் ரீதியான பொருளாதாரத் திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே, மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். நம்மிடையே ஒரு தெலுங்கானா தேவை இல்லை.

No comments:

Post a Comment