Monday, 10 February 2014

திருச்செந்தூர் கோயில்:
ஒரு வரலாற்று உண்மை

திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி, அங்குள்ள சிலைகளை டச்சுக்காரர்கள் எடுத்துச் சென்றனர். அதைக் கொடுத்துவிடுமாறு அப்போது தென் தமிழகத்தை ஆண்ட திருமலை நாயக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு டச்சுப் படைகள் ஒரு லட்சம் ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர்.

இது நடந்தது, 1648ஆம் ஆண்டு வாக்கில். 
ஆனால் இதற்கு மாறான கட்டுக் கதை ஒன்றுதான் இன்று வரலாறாக பேச்சுவழக்கில் உள்ளது.
 திருமலை நாயக்கர் (1623-1659), 1646ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் தனது ஆட்சிக்கு உட்பட்ட காயல்பட்டணம் நகரில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். அந்தக் காலகட்டத்தில் திருமலை நாயக்கர் போர்த்துகீசியருடனும் வணிகத் தொடர்பு வைத்திருந்தார். அதனால் டச்சுக்காரர்கள் கோட்டை கட்டுவதை போர்த்துகீசியர்கள் விரும்பவில்லை.
அதனால் டச்சுப் படையின் படகைப் பொருட்களுடன் கைப்பற்றி, அதைப் போர்த்துகீசியர் அழித்தனர். டச்சுப் படை அப்போது மலபார், கொழும்பு போன்ற இடங்களில் கோட்டைகள் கட்டி, வலுவான படைகளுடன் இருந்தது. அவர்கள் கொழும்பில் உள்ள தங்கள் தலைமையகத்திற்கு உதவி கேட்டனர்.
தலைமையகம் காயல்பட்டணத்தில் இருந்த டச்சுப் படைகளுக்காக 10 படகுகளில் படைகளை அனுப்பிவைத்தது. அந்தப் படகுகள் மணப்பாடு அருகே தரையிறங்கியது. அவர்கள் வீரராமபட்டணத்தில் இருந்த போர்த்துகீசியர்களின் தேவாலயத்தைக் கைப்பற்றினர். மேலும் அந்தப் படைகள் முன்னேறி திருச்செந்தூர் முருகன் கோயிலையும் துப்பாக்கி முனையில் கைப்பற்றியது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கோயில் கைப்பற்றப்பட்டதால் தெய்வ பயமும் அவர்களிடம் சேர்ந்துகொண்டது. இது குறித்து, மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிட்டனர். திருமலை நாயக்கர், டச்சுப் படைகளுக்குக் கடிதம் அனுப்பினார். கோயிலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் காயல்பட்டணத்தில் அவர்கள் கோட்டை தாக்கப்பட்டதற்கு ஈட்டுப் பணம் தருவதாகவும் அவர் உறுதி தந்தார்.
மன்னரின் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தூத்துக்குடியை நோக்கி முன்னேறி அதைக் கைப்பற்றினர் (தென்னிந்திய அரசிதழில், 1658இல் டச்சுப் படைகள் தூத்துக்குடியைக் கைப்பற்றியதாகக் குறிப்பு உள்ளது). 40, 000 ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர். அது மிகப் பெரிய தொகை.
இந்த இழுபறிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இதற்கிடையில் திருச்செந்தூர் மக்கள் தங்களாகவே ஒன்றிணைந்து ஒரு படையைத் திரட்டுகின்றனர்.
600 பேர்கள், 60 குதிரைகள், 4 யானைகள் கொண்ட ஒரு படையை உருவாக்குகிறார்கள். டச்சுப் படைகளை எதிர்த்துப் போரிடுகிறார்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 50 வீரர்கள் இறந்து விடுகிறார்கள்.
1648இல் டச்சுப் படையினர் திருச்செந்தூர் கோயிலில் உள்ள சிலைகளுடன் திருச்செந்தூரை விட்டுக் கிளம்பிச் செல்கிறார்கள். சிலைகளுக்குப் பிணயமாக அவர்கள் ஒரு லட்சம் ரியால்கள் கேட்டனர்.
திருமலை நாயக்கரும் அவரது முகவரான வடமலைப் பிள்ளையனும் டச்சுப் படைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒரு நால்வர் குழுவை அனுப்பினர். பாட்டவியாவில் உள்ள டச்சு கவர்னருக்கு இவர்களின் கோரிக்கை தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் திருமலை நாயக்கர் கொடுக்கும் தொகையை ஏற்றுக்கொண்டு சிலைகளைத் திருப்பிக்கொடுக்க ஆணையிடுகிறார்.
1651ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீட்கப்பட்ட சிலைகள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. ஆனால் இந்தச் சம்பவம் குறித்துப் பல்வேறு விதமான கதைகளும் புழக்கத்தில் உள்ளன.

சான்றுகள்கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
(கலைமகள் 1939), A history of tinnevelly by robert caldwell, caldwell r.bishop, Gazetteer of South India Volume 1, By W. Francis
Prof. K. A. Nilakanta Sastri published in Kalaimagal 1939 xvi p. 412
reproduced in Somasundaram Pillai, pp. 46-7

No comments:

Post a Comment