Sunday, 5 January 2014

ராணுவப் பணியில் சேர்வது எப்படி?

இந்தியத் துணைக் கண்டத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் முதலிடம் வகிக்கிறது நமது ராணுவத் துறை. இதில் சேர்ந்து பணியாற்றுவது அநேக இளைஞர்களின் கனவு. இந்திய ராணுவத்தின் முப்படைகளான விமானப்படை, கடற்படை, தரைப்படையில் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6-வது ஊதியக்குழு மூலம் ராணுவப் பணிக்கு கிடைக்கும் கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகள் நாட்டுப் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, குடும்பப் பாதுகாப்புக்கும் உறுதி அளிப்பதாய் உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் நேரடியாக ராணுவத்தில் சேரலாம். பெண்கள் தனியாக ‘வுமன் என்ட்ரி ஸ்கீம்’ மூலம் சேர்த்துக்கொள்ளப் படுகின்றனர். என்.டி.ஏ. (நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி) தேர்வு, டி.இ.எஸ்., (டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம்) தேர்வு மூலம் ராணுவப் பணிகளில் இளைஞர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகின்றனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் என இரு முறை என்.டி.ஏ. தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த தேர்வு வரும் ஏப்ரல் 20-ம் தேதி நடக்கிறது. ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.nda.nic.in, www.upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு தயாராகலாம்.
என்.டி.ஏ. தேர்வு ஆர்மி விங் மற்றும் நேவி-ஏர்ஃபோர்ஸ் விங் என்ற 2 பகுதிகளைக் கொண்டுள்ளது. பிளஸ் 2-வில் எந்த குரூப் எடுத்த மாணவர்களும் ஆர்மி விங் தேர்வு எழுதலாம். திருமணமாகாதவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். 157.5 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். எந்த வகையிலும் உடல் கோளாறுகள் இருக்கக்கூடாது.
நேவி-ஏர்ஃபோர்ஸ் விங் தேர்வு எழுதுபவர்கள் பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் எடுத்திருக்க வேண்டும். இது 2 தேர்வுகளை உள்ளடக்கியது. முதல் தாள் கணிதம். 300 மதிப்பெண். இரண்டாவது தாள் ஜெனரல் எபிலிட்டி. இதில் ஆங்கிலம்-200; ஜெனரல் எபிலிட்டி - 400 என மொத்தம் 600 மதிப்பெண். ஜெனரல் எபிலிட்டி தேர்வில் இயற்பியல், வேதியியல், பொது அறிவு, வரலாறு, விடுதலைப் போராட்டம், புவியியல், நடப்பு நிகழ்வுகள் தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்.
சைனிக் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு என்.டி.ஏ. தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் படிப்பவர்கள் மட்டுமே ராணுவப் பணியில் சேர முடியும் என்பது தவறான கருத்து. சாதாரண பள்ளியில் படிப்பவர்களும் இத்தேர்வை எழுத முடியும். 10ம் வகுப்பில் இருந்தே தயாரானால் எளிதாக தேர்ச்சி பெறலாம்.
டி.இ.எஸ். தேர்வு மூலம் 85 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கடந்த நவம்பரில் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஜூலையில் முதல் தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவில் 70% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு எஸ்.எஸ்.எஸ்.இ. நேர்முகத் தேர்வு போபால், பெங்களூர், அலகாபாத் ஆகிய மூன்று மாநகரங்களில் ஒன்றில் நடத்தப்படும்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு அடிப்படை ராணுவப் பயிற்சி, மூன்று ஆண்டு தொழில்நுட்ப பயிற்சி, பணி வழங்கப்பட்ட பிறகு ஓராண்டு பயிற்சி என மொத்தம் 5 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பிறகு, முறைப்படி ராணுவப் பணியில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். இதற்கு www.joinindianarmy.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


No comments:

Post a Comment