மில்லிங் எனப்படும் ஆலையிடுதல் பற்றிதான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் யுரேனியத்தை அப்படியே மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது. அதைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனில், அதை யுரேனியம் மஞ்சள் கேக் என்று அழைக்கப்படும் ஒரு பொருளாக மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றுவதற்கு முதல் படியாக யுரேனியத்தை பொடிப்பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லா துகள்களும் ஒரே அளவில் இருப்பது முக்கியம். இந்த செயல்பாட்டின் போது அவ்வபோது தண்ணீர் சேர்க்கப்படும். கழுவிப் பிரிப்பதற்கான திரவமும் சேர்க்கப்படும். இதன் பிறகு அமிலக்கழுவல் நடைபெறும்.
சல்ப்யூரிக் ஆசிட் கொண்டு யுரேனியம் பிரிக்கப்படும். கனிமத்தில் சுண்னாம்புக்கல் அதிகமாக இருந்தால் அல்கலைன் லீச்சிங் எனப்படும் செயல்முறை பின்பற்றப்படும். காரணம், சுண்னாம்புக்கல் அதிகமிருந்தால் அமிலக்கழுவலில் அதிக அளவிலான ஆசிட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இரண்டு விதமான லீச்சிங்கிலும் ஒரே மாதிரியான சூழல் மற்றும் சுகாதார பிரச்னைகள் இருப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர்களும் யுரேனியம் எதிர்ப்பாளர்களும் சொல்கிறார்கள்.
ஆலையிடுதலின்போது உருவாகும் கழிவுகள்தாம் இந்தப் பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணம் என்று சொல்லப்படுகிறது. சுமார் 90 சதவிகிதம் யுரேனியம் கனிமத்திலிருந்து பிரிக்கப்படுவதால் மிஞ்சியிருக்கும் தோரியம், ரேடியம், ரேடான் மற்றும் ஈயம் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கதிரியக்கம்தான் கவலைக்குரியது என்கிறார்கள் அவர்கள். அங்கு மெற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த எச்சங்களின் தன்மைகளும் மாறலாம். ஆலையிடுதலில் ஆபத்தை விளைவிக்கும் சில அம்சங்களைப் பார்க்கலாம்.
ஆலையிடுதல் போதும் ரேடன் 222 வாயு வெளியேறும் என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இது நுரையீரலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. யுரேனியம் தூசு ஏற்றுதலின் போது காற்று நிலையில் மாற்றம் இருந்தால் ஆபத்தான தூசுக்கள் காற்றில் கலக்கலாம். ஆனால் இது பருவ நிலையை பொருத்தது. நேரடியான காம்மா கதிர்வீச்சு மில்லிங்கில் இருக்கும் இன்னொரு பிரச்னை. மில்லிங் செயல்பாடுகளின் போது 90 சதவிகிதம் யுரேனியம் பிரிக்கப்பட்டுவிட்டாலும், மிச்சமிருக்கும் கழிவுகளில் 86 சதவிகிதம் கதிரியக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மில்லிங்கின் இன்னொரு முக்கிய பிரச்னை நிலத்தடி நீர் மாசு என்று சொல்லப்படுகிறது. மில்லிங் கழிவு சேமிப்பில் உள்ள திரவக் கழிவுகள் வெளியேறி நிலத்தடி நீரோடு கலந்துவிடும் என்பது முக்கியமான ஒரு பிரச்சினை. குறிப்பாக அமில கழுவல் முறையை பயன்படுத்தும் மில்களில் இது கவலையளிக்கும் ஒன்று. காரணம், அல்கலைன் லீச்சிங் முறையை விட ஆசிட் லீச்சிங் (அமிலக்கழுவல்) முறையில் தண்ணீரோடு எளிதில் கலக்கும் கழிவுகள் வெளியேறும். 1980ல் வெளியான அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் (Nuclear Regulatory Commission) ஓர் ஆய்வின் படி ஆலை செயல்படும்போது 95 சதவிகிதம் நிலத்தடி நீர் மாசு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
யுரேனியம் ஆலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. ஆனால் அடிப்படையில் கதிரியக்க அபாயங்கள் இருப்பதை எல்லா ஆய்வுகளும் ஏற்றுக்கொள்வதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். தவிர, ஆலையில் வேலை செய்பவர்களுக்கு கூடுதலான ஆபத்துகள் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, ஆலையிடுதலில் பயன்படும் சல்ப்யூரிக் ஆசிட் (Sulphuric acid) கண்களுக்கும் தோலிற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால், இன்னொரு பக்கம் அணுசக்தி ஆதரவாளர்கள் மில்லிங்கில் வெளியேறும் கதிரியக்கம் மிகவும் குறைந்தவை என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 2010ல் கனடாவில் மேற்கொண்ட ஆய்வில் யுரேனியம் சுரங்கங்கள் அல்லது ஆலைகளின் அருகில் வாழும் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
யுரேனியத்தைப் பொருத்தவரையில் இன்னொரு பெரிய சிக்கல், சுரங்கம் மற்றும் ஆலையை மூடுதல். ஆலை மற்றும் சுரங்கத்தை decommission செய்த பிறகும் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது முக்கியம்.
No comments:
Post a Comment